அலகு 21: தவறான பயன்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை நோய்கள்#
கற்றல் நோக்கங்கள்#
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ தவறான பயன்பாடுகளின் வகைகள் மற்றும் அது தொடர்புடைய நடத்தை மாற்றங்கள் பற்றி புரிந்து கொள்ளுதல்.
❖ குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாத்தலையும், தடுத்தலையும் பற்றிய அறிவைப் பெறுதல்.
❖ மருந்து, புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாதலுக்கான காரணங்கள் மற்றும் அவை உடல் நலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அறிதல்.
❖ போதைப் பொருட்களிலிருந்து மீள்வதற்கான சரியான வழிமுறைகளை ஆய்ந்தறிதல்.
❖ நடைமுறை வாழ்க்கை மாற்றம் தொடர்புடைய நோய்கள் மற்றும் குறைபாடுகள் (disorders) பற்றி அறிதல்.
❖ வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் அடையாளம் மற்றும் அறிகுறிகளின் பண்புகளை தொடர்புபடுத்துதல்.
❖ உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றிற்கான காரணம் மற்றும் அறிகுறிகளை விளக்குதல்.
❖ நோய் மற்றும் குறைபாடுகளின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி பரிந்துரை செய்தல்.
❖ நலமான வாழ்க்கைக்கான சமுதாய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.
அறிமுகம்#
பல்வேறு வகைகளில் நிகழும் தவறான பயன்பாடானது சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நடைமுறைகளில் ஆழமாக வேர்கொண்டு உள்ளது. இந்த உலகளாவிய சிக்கலைத் தீர்ப்பதற்கு அது குறித்த தெளிவான புரிதல், நடைபெறும் விதம், காரணங்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி அறிதல் அவசியமாகிறது. குறிப்பாக குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல் என்ற கோணங்களில் இதனை நாம் அணுக வேண்டும். இந்த நாகரீக உலகில் இன்றைய தலைமுறையினர் சென்ற தலைமுறையினரை விட ஆரோக்கியமாக வாழ்கின்றனரா?. எடுத்துக்காட்டாக, புகை பிடித்தல், மதுவுக்கு அடிமையாதல், போதைப் பொருள்களின் பயன்பாடு, அதிக கொழுப்பு உண்ணுதல், கொலஸ்ட்ரால் நிறைந்த உணவு, அதிகமாக குப்பை உணவுகளை (Junk Foods) எடுத்துக் கொள்ளுதல், குறைந்து போன உடல் இயக்கங்கள் போன்றவை நோய்களுக்கும், உடனடி இறப்பிற்கும் காரணமாக அமைகின்றன. தனிநபர் நடத்தை முறைகள் ஆரோக்கியத்தின் மீது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த கவனம் உலக நாடுகளில் அதிகரித்துள்ளது. தனிநபர் ஒருவரின் உணவுப் பழக்க வழக்கங்களும் மற்றும் நடத்தை முறைகளும், கீழ்க்கண்ட விளைவுகளான நாள்பட்ட மற்றும் இறப்பை ஏற்படுத்தும் நோய்களான இரத்த சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்றவை உருவாதலில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த நிலைகளை மாற்றிட, நமது உணவு மற்றும் உடல்நலத்தினை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளுக்கு மாறுதல் அவசியமாகும். இது நல்ல சத்தான உணவு, தொடர்ந்த உடற்பயிற்சி, தேவையற்ற மருந்துகளை விலக்குதல், மது மற்றும் புகைப்பழக்கத்தை ஒழித்தல் போன்ற முறைகளைக் குறிப்பதாகும்.
21.1 தவறான பயன்பாடு மற்றும் வகைகள்#
கொடூரமான, வன்முறையான, தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயமேற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது தவறான பயன்பாடு எனப்படும். இது உடல், உணர்வு அல்லது மனம், வாய்மொழி, குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியான தவறான பயனாடுகளை உள்ளடக்கியதாகும். இது குடும்பம் மற்றும் அக்குடும்பத்தைச் சாராத நபர்களினால் ஏற்படுகிறது. இனி சிறுவயது குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பாலியல் சார்ந்த தவறான பயன்பாடுகள், அதன் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
21.1.1 குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல்#
குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பது அனைத்து விதமான உடல் மற்றும் உணர்வீதியான துன்புறுத்தல், பாலியல் சார்ந்த தவறான பயன்பாடுகள், சுரண்டல் ஆகியவற்றிற்கு உள்ளாக்குதல் போன்றவை ஆகும். இதன் காரணமாக அக்குழந்தையின் ஆரோக்கியம், உயிர்வாழ்தல், வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்படுகின்றது. குழந்தைகளை உடல்ரீதியான தவறாகப் பயன்படுத்துதல் என்பது குழந்தைக்கு அச்சுறுத்தல், அடித்தல், உதைத்தல் மற்றும் தாக்குதல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களாகும்.
21.1.2 பாலியல் முறையிலான தவறான பயன்பாடு#
ஒருவர் மற்றொருவரின் மீது தனது அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி பாலியல் ரீதியான தீங்கு விளைவிப்பது பாலியல் துன்புறுத்தல் ஆகும். இது பாதிக்கப்பட்டவரில் கேடான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இளம் சிறுமிகள் மற்றும் பெண்கள் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பொதுவாக இது பணிபுரியும் இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. வாய்மொழி கேலிகள், நகைச்சுவை (கேலி செய்தல்), சைகைகள் மற்றும் தவறான பார்வை போன்றவை அதிகமாகக் காணப்படும் முறைகளாகும். இதனால் மனதளவிலும், உடல் நோய்களாலும் மற்றும் உணவு உண்ணுவதிலும் (உணவுக் குறைபாடு) குறிப்பிட்ட நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
21.1.3 குழந்தைகளின் பாலியல் முறையான தவறான பயன்பாடு#
தங்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உணரவே முடியாத நிலையில் இருப்பதால், குழந்தைகள் பாலியல் முறையான துன்புறுத்தலின் முக்கிய இலக்காகக் கருதப்படுகிறார்கள். பொதுவாக, இச்செயலில் ஈடுபடுவர்கள் அக்குழந்தைக்கு நன்றாகத் தெரிந்தவராகவும், அதே பகுதியில் வசிப்பவராகவும் இருப்பார்கள். குழந்தைகளின் வெளித்தன்மையைப் பயன்படுத்தி, அவர்களைக் கவரும் வகையில் (சாக்லேட்டுகள் மற்றும் பொம்மைகளைப் பயன்படுத்துதல்) ஏமாற்றி அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளில் பிறப்புறுப்புக் காயம், வயிற்று வலி, அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று மற்றும் நடத்தையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
மேலும் அறிந்து கொள்வோம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக 2012 – இல் போக்சோ (POCSO – Protection of Children from Sexual Offences) சட்டத்தை அறிமுகப்படுத்தியது. பாலியல் நோக்கத்திற்காக குழந்தைகளை கடத்திச் செல்லும் நபர்களும் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
போக்சோ சட்டத்தின் குறிக்கோள்கள் – 2012
பாலியல் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசம் போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாத்தல். இத்தகைய குற்றங்களை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல்.
21.1.4 தவறான பயன்பாட்டுக்கு உள்ளான குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறைகள்#
தவறான பயன்பாடினால் துன்பத்திற்கு உள்ளான குழந்தைகளை கண்காணித்தல், மதிப்பீடுதல் மற்றும் அளவிடுவதற்கான வழிமுறைகளாவன:
குழந்தைகள் உதவிக்கரம் (Child Helpline)
குழந்தைகள் உதவிக்கரம் சமூகப் பணியாளர்களை நியமித்து குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் உதவி புரிகிறது.
குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குதல்
உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு அளித்தல்.
சமுதாய அடிப்படையான முயற்சிகள்
குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.
குடும்ப ஆதரவு
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுடைய பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு முறையான கவனத்துடன் கூடிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
மருத்துவப் பராமரிப்பு
பாலியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் மன அழுத்தத்திலிருந்து விடுபட பயிற்சி பெற்ற சுகாதார நிபுணர்களிடமிருந்து மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.
சட்ட ஆலோசனை
பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் அல்லது பாதுகாவலர் தங்கள் விருப்பப்படி, சட்ட ஆலோசகர் மூலம் சட்ட ஆலோசனையை வழங்குவதற்கு உரிமை உண்டு.
மேலும் அறிந்து கொள்வோம்
குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (NCPCR) மார்ச் 2007- இல் குழந்தை உரிமைகள் சட்டம் (CPCR), 2005-ன் கீழ் அமைக்கப்பட்டது. இந்தச் சட்டம் பொதுவுடைமைக் கொள்கை, குழந்தை சட்டங்களை மீற முடியாமை மற்றும் நாட்டில் காணப்படும் குழந்தைகள் தொடர்பான கொள்கைகளின் அவசரத்தை வலியுறுத்துகிறது.
18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளின் பாதுகாப்புக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது. பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை நடவடிக்கை கொள்கைகளை வரையறுக்கிறது.
மறுவாழ்வு
பள்ளியில் மீண்டும் சேர்த்து கல்வியைத் தொடரச் செய்வதே பாதிக்கப்பட்ட குழந்தைக்கான மறுவாழ்வாகும். அக்குழந்தையானது படிப்படியாக மீண்டும் தன்னுடைய இயல்பான நிலைக்கு மீண்டு வருவதற்கு இது அவசியமானதாகும்.
குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து தடுத்தல்
உலகளாவிய முறையில் வலியுறுத்தப்படும் முக்கியமான சமூகக் கொள்கை, குழந்தைகளை பாலியல் முறையிலான தவறான பயன்பாட்டிலிருந்து தடுக்கும் முயற்சிகளாகும். இதனை மேற்கொள்வது பெற்றோர் மற்றும் நிறுவன அமைப்புகளின் பொறுப்பாகும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய அறிவுரைகளாவன:
❖ சந்தேகப்படுகின்ற நபரிடம் அல்லது தெரியாத அந்நிய நபரிடம் பேசுவது மற்றும் அவர் அருகில் செல்வது கூடாது.
❖ எந்தவொரு தெரியாத நபருடனும் தனியாக இருக்கக் கூடாது.
❖ அரசு அல்லது தனியார் போக்குவரத்து வாகனங்களில் (பேருந்துகள், ஆட்டோ, ரயில்) தனியாக பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.
❖ பெற்றோருக்குத் தெரியாமல், எவரிடமிருந்து பணம், பொம்மைகள், பரிசுகள் அல்லது சாக்லேட்கள் போன்றவற்றை வாங்கக் கூடாது.
❖ தெரிந்த அல்லது தெரியாத நபர்களைத் தொட அனுமதிக்கக் கூடாது.
நம் குழந்தைகள் கண்ணியமான, எந்த வகையிலும் வன்முறையற்ற, பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான சூழலை உறுதி செய்வது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரின் பொறுப்பாகும்.
21.2 மருந்து, ஆல்கஹால் மற்றும் புகையிலையின் தவறான பயன்பாடு#
ஆல்கஹால், புகையிடித்தல் மற்றும் மருந்துகளை, உடல் மற்றும் மனம் சார்ந்திருப்பது அடிமையாதல் எனப்படும். இந்தப் பொருட்களிலுள்ள அடிமைப்படுத்தும் பண்புள்ள போதையானது, ஒருவரை தீய விளைவுகளுக்கு உட்படுத்தி, அவர்கள் அப்பொருள்களை நிரந்தரமாகச் சார்ந்திருப்பதற்கு இட்டுச் செல்கிறது. புகையிலை, ஆல்கஹால் மற்றும் மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் தனிநபர், அவரின் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் தீய விளைவுகளை உண்டாக்குவது மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த ஆபத்தான நடவடிக்கையை, முன்னதான கல்வி மற்றும் வழிகாட்டுதல் மூலம் தடுக்க முடியும்.
21.3 மருந்துகளின் தவறான பயன்பாடு#
மருந்துகள் வழக்கமாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நோய்க்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு, நோயிலிருந்து குணமடைந்ததும் நிறுத்தப்படுகின்றன. மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்பவர்கள், அதற்கு அடிமையாகின்றனர். இதுவே மருந்துக்கு (போதைக்கு) அடிமையாதல் அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்றழைக்கப்படுகிறது.
ஒரு நபரின் உடல், மனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்துவதன் மூலமோ, மனச்சோர்வு அல்லது தளர்வுக்கு உள்ளாக்குவதன் மூலமோ, அந்நபரின் உடல், உயிரியல், உளவியல் அல்லது சமூக ரீதியிலான நடத்தையை தோற்றுவி அல்லது மாற்றும் மருந்து போதை மருந்து என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகள் மைய நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டு உடல் மற்றும் மனதில் பாதிப்பை உண்டாக்குகின்றன.
21.3.1 மருந்துகளின் வகைகள்#
சில வகையான மருந்துகள் மனோவியல் மருந்துகள் எனப்படுகின்றன. அவை மூளையின் மீது செயல்பட்டு, அவற்றின் செயல்பாடுகளை நடத்தை, உணர்வு நிலை, சிந்திக்கும் திறன், அறிவு ஆகியவற்றை தோற்றுவி அல்லது மாற்றுகின்றன. இவை மனநிலை மாற்றும் மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன.
21.3.2 மருந்தினை சார்ந்திருத்தல்#
இத்தகைய மருந்துகளை உட்கொண்டு, முழுமையாக அம்மருந்துகளை தொடர்ந்து கொண்டிருக்கும் நபர்களால், அம்மருந்துகள் இன்றி உயிர்வாழ இயலாது. இந்நிலையானது மருந்தினை சார்ந்திருத்தல் என குறிப்பிடப்படுகிறது.
உடல் மற்றும் மனம் சார்ந்திருத்தல்
- இயல்பான நல்ல நிலையில் தனது உடல்செயலியல் நிலையைப் பராமரிக்க மருந்துகளை தொடர்ந்திருத்தல்.
- மருந்துகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றன என உளவியல் ரீதியாக உணர்வைக் கொண்டிருத்தல்.
- மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற சேவைக்கு மீதான அவாவு – ஜூன் 26.
- 1985 – ஆம் ஆண்டில் போதைப் பொருட்கள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) 1984 மருந்துகளின் போதை (அடிமையாதல்) அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என வரையறுப்பதற்குப் பதிலாக மருந்துகளை தொடர்ந்திருத்தல் என வரையறுத்து ஆலோசனை வழங்கியுள்ளது.
21.3.3 மருந்துகள் பயன்பாட்டின் நடத்தை மாற்றங்கள்#
இளம் பருவத்தினரிடையே ஏற்படும் எதிர்மறையான விளைவுகளாவன:
- படிப்பில் செயல்திறன் குன்றுதல், கல்லூரி மற்றும் பள்ளிகளில் இடைநிற்றல்.
- தன் சுகாதாரத்தில் ஆர்வமின்மை, தனிமை, மன அழுத்தம், மனக்கவலை, ஆக்ரோஷமான நடத்தைகள்.
- குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவுநிலை சிதைந்து போதல்.
- உணவு மற்றும் தூங்கும் பழக்கங்கள் தோற்றுபடுதல்.
- உடல் எடை மற்றும் பசி ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கம்.
- எப்போதும் மருந்துகள் பெறுவதற்கான பணம் கிடைக்கும் எளிய வழிகளை தேடுதல்.
- எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள்.
21.3.4 மருந்துக்கு அடிமையாதலிலிருந்து மீட்பு (Drug De-addiction)#
மருந்து அடிமையாதல் மீட்பு மேலாண்மை என்பது சிக்கலான மற்றும் கடினமான பணியாகும். மருந்துக்கு அடிமையாதலிலிருந்து ஒருவரை மீட்பது என்பது நீண்ட காலம் பிடிக்கும், மெதுவான ஒரு வழியாகும். குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயம் உட்பட அனைவரும் இதில் ஒட்டு மொத்தமாக முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.
நச்சு நீக்கம்
சிகிச்சையின் முதல் கட்டம் நச்சு நீக்கம் ஆகும். இது மருந்துகளைப் படிப்படியாக நிறுத்தி, அடிமையானவரை அறிகுறிகளிலிருந்து மீட்பதற்கு உதவுகிறது. இதனால் அவர்கள் கடுமையான உடல் மற்றும் உணர்வு ரீதியான தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். குறிப்பிட்ட மருந்துகளை வழங்குவதன் மூலம் இதனை கவனமாகக் கையாளலாம்.
உளவியல் சிகிச்சை
உளவியல் சிகிச்சையில் தனிப்பட்ட மற்றும் குழு ஆலோசனை, உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர்களால் வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையானது அடிமையானவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள், தினசரி சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புதிய வழி முறைகளை கற்றுத் தருதல், போதுமான உணவு, ஓய்வு மற்றும் அமைதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை
சமுதாயப் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவதனால், அவர்கள் போதைக்கு அடிமையான தங்கள் குடும்ப உறுப்பினர்களை நிராகரிக்கும் அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றனர். அதனால் போதைக்கு அடிமையானவர்கள் அவர்கள் குடும்பத்தினராலும், சமுதாயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.
மறுவாழ்வு
அவர்களுக்கு முறையான தொழில்சார் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம், அவர்கள் நலமான வாழ்க்கை வாழவும், சமுதாயத்தில் பயனுள்ள அங்கத்தினராக மாறவும் வழிவகுக்கிறது.
21.4 புகையிலையின் தவறான பயன்பாடு#
21.4.1 புகையிலையின் பயன்பாடு#
புகையிடித்தல், மெல்லுதல் மற்றும் உறிஞ்சுதல் போன்றவற்றிற்காக புகையிலை பயன்படுத்தப்படுகிறது. சுருட்டு, சிகரெட்டுகள், பீடிகள், குழாய்கள், ஹுக்கா ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் புகையை சுவாசித்தல் புகையிடித்தலாகும். தூள் வடிவிலான புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்லப்படுகிறது. மாவு போன்ற புகையிலையை மூக்கின் வழியாக எடுத்துக் கொள்ளப்படுதல் உறிஞ்சுதல் (மூக்குப் பொடி) எனப்படுகிறது.
புகையிலையானது Nicotiana tabacum மற்றும் Nicotiana rustica ஆகிய புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. இவற்றின் இளம் கிளைகளின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட இலைகள், உலகளாவிய வணிக ரீதியிலான புகையிலை தயாரிப்பில் பயன்படுகின்றன. அதிலிருக்கும் “நிக்கோட்டின்” எனும் ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர் அடிமையாதலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் கிளர்ச்சியைத் தூண்டும், மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும்.
21.4.2 புகையிடித்தலின் ஆபத்துகள் மற்றும் புகையிலையின் விளைவுகள்#
புகை உள்ளிழுக்கப்படும்போது, திசுக்களால் உறிஞ்சப்படுகின்ற வேதிப் பொருள்கள் பின்வரும் தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
(i) புகையிடித்தலின் போது வெளிப்படும் புகையில் உள்ள பென்சோபைரின் மற்றும் பாலிசைக்கிளிக் ஹைட்ரோகார்பன்கள் எனும் புற்றுநோய்க் காரணிகள், நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
(ii) புகையிடித்தலினால் தொண்டை மற்றும் மூச்சுக்குழுவில் ஏற்படும் வீக்கம், மூச்சுக்குழல் அழற்சி (bronchitis) மற்றும் நுரையீரல் காசநோய்க்கு (Pulmonary tuberculosis) வழிவகுக்கிறது.
(iii) நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் (lung alveolar) ஏற்படும் வீக்கம் வாயு பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து எம்பிஸீமா எனும் நோயை உண்டாக்குகிறது.
(iv) புகையிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன்-மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனை குறைக்கிறது. இதனால் உடல் திசுக்களில் ஹைப்போக்ஸியாவை உண்டாக்குகிறது.
(v) புகையிடித்தலினால் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
(vi) இறைப்பை சுரப்பினை அதிகரித்து, இறைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களை (அல்சர்) ஏற்படுத்துகிறது.
(vii) புகையிலை மெல்லுதல் வாய் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
தகவல் துணுக்கு
உலக சுகாதார நிறுவனம் (WHO) 1984 போதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது. WHO வெளியிட்ட உத்தரவின்படி அனைத்து சிகரட் விளம்பரங்களிலும் மற்றும் அட்டைப் பெட்டிகளிலும் “புகை பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது” என்ற சட்டரீதியான எச்சரிக்கை இடம் பெற்றிருக்க வேண்டும்.
செயல்பாடு
புகைபிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதலால் பாதிக்கப்பட்ட நபர்களின் படங்களை சேகரிக்கவும். அதனால் பாதிப்பிற்கு உள்ளாகும் உடலின் பாகத்தையும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் உடல் நலத் தீங்கினையும் அடையாளம் காண்க.
21.4.3 புகைபிடித்தலை தடுத்தல்#
புகைபிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதலினால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்து இளம்பருவத்தினரும் வயதானவர்களும் இப்பழக்கத்தை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும். தகுந்த ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள், அடிமையானவர்களை அப்புகைப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட உதவும்.
மேலும் அறிந்து கொள்வோம்
புகையிலை எதிர்ப்புச் சட்டம் மே-1 2004- இல் கொண்டு வரப்பட்டது. 2030-ஆம் ஆண்டில் உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் அளவில் இறப்பினை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒற்றைக் காரணியாக புகையிலை திகழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மே – 31 புகையிலை எதிர்ப்பு நாளாகக் கருதப்படுகிறது. (உலக புகையிலை எதிர்ப்பு நாள்)
21.5 ஆல்கஹாலின் தவறான பயன்பாடு#
சமுதாயத்தில் செல்வந்தர்கள் மற்றும் ஏழை மக்களால் மேற்கொள்ளப்படும் ஆல்கஹால் பயன்படுத்துதல் (நுகர்வு) என்பது ஒரு சமுதாயத் தீங்கு ஆகும். ஆல்கஹாலை சார்ந்திருந்தல் மதுப்பழக்கம் எனவும், அடிமையாதல் மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆல்கஹால் தவறான பயன்பாடு என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல் ஒருவரின் உடல், உடலியல் மற்றும் உளவியல் செயல்பாடுகளை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.
செயல்பாடு
மது அருந்தாத மற்றும் மது அருந்திய நபர்களின் கல்லீரல் படங்களை சேகரிக்கவும். அப்படங்களை ஒப்பிட்டு நீ கண்டறிந்த மாற்றங்களைக் குறிப்பிடவும்.
21.5.1 மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகள்#
நீண்ட காலமாக மது அருந்துவதால், அது ஒரு மயக்க மருந்தாகவும் மற்றும் வலி நிவாரணி போன்றும் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை நலிவடையச் செய்கிறது. அவற்றின் தீமை பயக்கும் சில விளைவுகளாவன:
- நரம்பு செல்களைப் பாதித்து பல்வேறு விதமான மன மற்றும் உடல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது.
- உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பைக் குறைக்கிறது.
- மங்கலான, குறைந்த பார்வை, சாலைகளில் விபத்துகளில் முடிகிறது.
- இரத்த நாளங்களின் விரிவடைதல் இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கின்றது.
- கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு சிர்ரோசிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.
- உடல் தன் கட்டுப்பாட்டையும், தன்னுணர்வினையும் இழந்து உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கி இறுதியில் இறப்பு ஏற்படுத்துகிறது.
21.6 மது அருந்துபவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள்#
கல்வி மற்றும் ஆலோசனை
கல்வி மற்றும் தகுந்த ஆலோசனைகள், மது அருந்துபவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு அவற்றிலிருந்து விடுபடவும், வாழ்க்கையின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் உதவும்.
உடல் செயல்பாடுகள்
மறுவாழ்வை மேற்கொள்ளும் நபர்கள், நூல்கள் வாசித்தல், இசை, விளையாட்டு, போகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடம் உதவியை நாடுதல்
சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். தங்களது பதட்டமான உணர்வுகள், தவறான செயல்களைக் குறித்துப் பேசுவதன் மூலம், மேலும் அத்தவறுகளைச் செய்யாமல் தங்களை தடுத்துக் கொள்ள உதவும்.
மருத்துவ உதவி
உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடமிருந்து உதவிகள் பெறுவதன் மூலம் தங்களுடைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபட, நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.
மதுவிலிருந்து மீட்பு (de-addiction) மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் தனிநபருக்கு உதவிகரமாக உள்ளன. இதனால் அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து முழுமையாக விடுபட, இயல்பான மற்றும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்.
21.7 வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நோய்கள் மற்றும் கோளாறுகள்#
நம் சமுதாயத்தில் முறையற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் (Strain) போன்றவற்றின் காரணமாக நோய்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை தொற்றா நோய்களாகும். மேலும் குறிப்பிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்ட பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறியலாம். இது உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் ஏற்படும் தொந்தரவுகளால் ஏற்படுகிறது. இவற்றிற்கு தனிப்பட்ட நபரின் இயல்பான வாழ்வில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
21.8 நீரிழிவு நோய் (Diabetes Mellitus)#
நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். (கிரேக்கத்தில் டயாபடீஸ் – ஒடுகின்ற; மெல்லிடஸ் – இனிப்பு எனப் பொருள்படும்).
இன்சுலின் சுரப்பியின் பற்றாக்குறை, குறைபாடான இன்சுலின் செயல்பாடு அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும். இது பொதுவாக அதிக அளவில் காணப்படும் கணையக் குறைபாடாகும். வகை- 1 மற்றும் வகை-2 நீரிழிவு நோய்த்தாக்கம் உலக அளவில் அதிகரித்து வருகிறது.
21.8.1 வகை-1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் (IDDM)#
நீரிழிவு நோயாளிகள் 10%-லிருந்து 20% IDDM (Insulin Dependent Diabetes Mellitus) வகையைச் சார்ந்தவர்களாவர். இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படுகிறது. இது திடீரெனத் தோன்றும், உயிருக்கு ஆபத்தானது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக ஏற்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக, போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது (ஹைப்பர்கிளைசீமியா).
காரணங்கள்: மரபணு மரபுவழி மற்றும் கற்றுக்கொண்ட காரணிகள் (வைரஸ் காரணமாக தொற்றுகள், கடுமையான மன அழுத்தம்) ஆகியவை இவ்வகையான நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன.
21.8.2 வகை-2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய் (NIDDM)#
வயதானோரின் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும். இது (NIDDM – Non Insulin Dependent Diabetes Mellitus) 80%-லிருந்து 90% நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இது மெதுவாகவும், மிதமாகவும் உருவாகி அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது. கணையத்தால் சுரக்கப்படுகின்ற இன்சுலினின் அளவு போதுமானதாக உள்ளது. ஆனால் அதன் செயல்பாடு குறைபாடு உள்ளதாகக் காணப்படுகிறது. இன்சுலினின் இலக்கு செல்கள் அதற்கு பதில்வினை புரிவதில்லை. இது செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதை அனுமதிப்பதில்லை.
காரணங்கள்: இதற்கான காரணங்கள் பல காரணிகளைக் கொண்டது. வயது அதிகரித்தல் (நடுத்தர மற்றும் வயதானவர்களை பாதிக்கும்), உடல் பருமன், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, அளவுக்கதிகமாக உண்ணுதல், உடல் செயல்பாடுகள் இல்லாமை போன்ற காரணிகள் இதற்கு காரணமாய் அமைகின்றன.
மேலும் அறிந்து கொள்வோம்
இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி ஆவார். WHO-வின் திருத்தம் செய்யப்பட்ட புள்ளி விவரப்படி 2025-இல் இந்தியாவில் 57.2 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது 40 ஆகும். பிற நாடுகளில் 55 வயதாகும். 2030 – இல் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் 7-வதாகத் திகழுமென உலக சுகாதார (WHO) அமைப்பு அறிவிக்கிறது.
அறிகுறிகள்#
நீரிழிவு நோய் பல வளர்சிதை மாற்றங்களுடன் தொடர்புடையது. மிக முக்கியமான அறிகுறிகளாவன:
- இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் (ஹைப்பர்கிளைசீமியா).
- அதிகளவு சிறுநீர் வெளியேறுதல் (பாலியூரியா) அதனால் ஏற்படும் நீர் இழப்பு.
- நீரிழிப்பினால் ஏற்படும் தாகம் (பாலிடிப்பியா) மற்றும் அதனைத் தொடர்ந்து அதிகளவு நீர் பருகுதல்.
- அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப்படுதல் (கிளைகோசூரியா)
- அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேறுவதன் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பசி (பாலியேதியா).
- சோர்வு மற்றும் எடை இழப்பு.
அட்டவணை 21.1 வகை-1 மற்றும் வகை-2 நீரிழிவின் வேறுபாடுகள்
| காரணிகள் | வகை-1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் (IDDM) | வகை-2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய் (NIDDM) |
|---|---|---|
| நோயின் தாக்கம் | 10 – 20% | 80 – 90% |
| தொடங்கும் பருவம் | இளம்பருவத்தில் தொடங்குகிறது. (20 வயதுக்கு குறைவானோர்) | வயதானோரில் காணப்படுகிறது. (30 வயதிற்கு மேற்பட்டோர்) |
| உடல் எடை | சாதாரணமான உடல் எடை அல்லது எடை குறைதல் | உடல் பருமன் |
| குறைபாடு | பீட்டா செல்கள் அழிவதால் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறது. | இலக்கு செல்கள் இன்சுலினுக்கு பதில் வினை புரியாமலிருப்பது. |
| சிகிச்சை | இன்சுலினை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. | உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. |
21.8.3 நீரிழிவு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு#
WHO-வின் அளவீட்டின் படி உணவுண்ணா நிலையில் இரத்த குளுக்கோஸின் அளவு 140 மிகி/டெசிலி விட அதிகமாகவும் அல்லது சீரற்ற இரத்த குளுக்கோஸ் அளவு 200 மிகி/டெசிலி-ஐ விட அதிகமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் காணப்பட்டால் நீரிழிவைக் கண்டறிந்து உறுதிப்படுத்தல் அவசியமானதாகும்.
நீரிழிவின் மேலாண்மையானது அதன் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். உணவுக் கட்டுப்பாடு, குறை இரத்த சர்க்கரைக்கான மருந்துகள், இன்சுலினுக்கான ஊசிகள் மற்றும் உடற்பயிற்சி ஆகிய மேலாண்மை முறைகள் மூலம் இரத்த குளுக்கோஸின் அளவை சீராகப் பராமரிப்பதே நீரிழிவு மேலாண்மையின் ஒட்டு மொத்த குறிக்கோளாகும்.
உணவுக் கட்டுப்பாடு மேலாண்மை
குறைவான கார்போவைட்ரேட் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள் மிகவும் பொருத்தமானவை. கார்போவைட்ரேட்கள் ஸ்டார்ச் மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (சுக்ரோஸ், குளுக்கோஸ்) எடுத்துக் கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும். நாள்தோறும் முழு தானியங்கள், சிறு தானியங்கள் (சோளம், கம்பு, கேழ்வரகு) கீரை வகைகள், கோதுமை மற்றும் தீட்டப்படாத அரிசி போன்றவற்றை உள்ளடக்கியதாக உணவு முறை அமைய வேண்டும்.
மொத்த கலோரி மதிப்பில் 50 – 55% அளவு கார்போவைட்ரேட் மூலம் பெறப்பட வேண்டும். அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பெற 10 – 15% புரதம் கொண்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்த கலோரியில் 15 – 25% கொழுப்பைக் கொண்டிருக்க வேண்டும். நிறைவுற்ற கொழுப்பினை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
உடல் செயல்பாடு
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இது தசைகளுக்கு வலுவூட்டி, அவற்றை விறைப்புத் தன்மையுடன் பராமரிக்கிறது.
கல்வி மற்றும் விழிப்புணர்வு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோயின் தன்மை, இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதபோது நோயின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்படும் நீண்ட கால சிக்கலுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றிய கல்வியறிவைப் பெற வேண்டும். உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் தொடர்பான அறிவுறைகள் விளக்கப்பட வேண்டும்.
தகவல் துணுக்கு
கரையாத நார்ச்சத்து கொண்ட ஆளி விதைகள், கொய்யா, தக்காளி மற்றும் கீரைகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகின்றன.
இன்சுலின் மூலம் மேலாண்மை செய்தல்
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைப் பராமரிப்பதில் வணிக ரீதியில் தயாரிக்கப்படும் (குறுகிய மற்றும் நீண்ட நாள்கள் செயல்படும்) இன்சுலின்களும் உதவுகின்றன.
21.9 உடல் பருமன்#
அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் எடை அசாதாரணமாக அதிகரிப்பது உடல் பருமன் எனப்படும். உடல் பருமன் என்பது சமுதாயம், நடத்தை, உளவியல், வளர்ச்சி மாற்றம் மற்றும் செல் காரணிகளின் தாக்கத்தினால் உருவாகும் ஒரு சிக்கலான நாள்பட்ட பல்நோக்கு நோயாகும்.
செலவழிக்கும் அளவை விட உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு அதிகரிக்கும் போது உடல் பருமன் உண்டாகிறது. ஒருவரின் வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடை சராசரி நிலையான எடையை விட அதிகரிக்கும் போது உடல் பருமன் மற்றும் எடை அதிகரித்தல் காணப்படும். உடலின் கொழுப்பு அளவு மற்றும் நலம் சார்ந்த ஆபத்தினை உடற்பருமக் குறியீட்டை (BMI) கொண்டு அளவிடலாம்.
\[ BMI = \frac{\text{எடை (கிகி)}}{\text{உயரம் (மீ)}^2} \]அளவுக்கதிகமாக உண்ணுகின்ற ஒவ்வொரு 7 கலோரி உணவிலும் 1 கி கொழுப்பு உடலில் சேகரமாகி, உடல் பருமன் அதிகரிக்க வழிவகுக்கிறது. அதுபோல் திசுக்களில் அதிகமாக சேரும் கொழுப்பு உடல் எடையை 20% - 25% அளவுக்கு கூட்டுகிறது. சராசரி உடல் எடையை விட 10%க்கும் அதிகமான எடை கொண்டவர் அதிக எடை உடையோர் மற்றும் 20% க்கும் அதிகமான எடை கொண்டவர் உடல்பருமன் உடையோர் எனப்படுவர்.
காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்#
மரபியல் காரணிகள், உடல் உழைப்பின்மை, உணவுப் பழக்க வழக்கங்கள் (அளவுக்கதிகமாக உண்ணுதல்) மற்றும் நாளமில்லா சுரப்பிக் காரணிகள் போன்றவற்றால் உடல் பருமன் உண்டாகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பித்தப்பை நோய்கள், கரோனரி இதய நோய் மற்றும் கீல்வாதம் (மூட்டு வீக்கம் – ஆர்த்ரைடிஸ்) போன்றவை உடல்பருமன் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்தான நோய் விளைவுகளாகும்.
21.9.1 உடற்பருமன் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்#
உணவுக் கட்டுப்பாடு மேலாண்மை
குறைந்த கலோரி, இயல்பான புரதம், வைட்டமின்கள், கனிமங்கள், கட்டுப்படுத்தப்பட்ட கார்போவைட்ரேட், கொழுப்பு, அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் போன்றவை உடல் எடை அதிகரிப்பைத் தடுப்பவைகளாகும். எடை குறைப்பில் கலோரி கட்டுப்பாடு பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதும் ஆகும்.
உடற்பயிற்சிகள்
மிதமான உடற்பயிற்சியுடன் கூடிய குறைந்த கலோரி உணவு, உடல் எடையைக் குறைப்பதில் திறன் மிக்கதாக விளங்குகிறது. மன அழுத்தம் காரணமாக அதிகப்படியான உணவு உட்கொள்ளுதலை தியானம், யோகா மற்றும் உடல் உழைப்பின் மூலம் குறைக்க முடியும்.
21.10 இதய நோய்கள்#
இதய நோய்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை. பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD), இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால் ஏற்படுகிறது.
கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி பல ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது. இவை மெல்லிய கொழுப்பு கீறல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தடிமனான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம். இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச் சுருங்கச் செய்வதன் மூலம், ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் நோய்க்கு வழிவகுக்கிறது. மேலும் இது திடீரெனத் தோன்றும் இஸ்கிமியா (இதயத் தசைகளுக்கு குறைவான இரத்த ஓட்டம்) மற்றும் இதயத் தசை நசிவுறல் (இதயத் தசை திசுக்களின் இறப்பு) நோய்க்கு வழிவகுக்கிறது.
இதய நோய்க்கான முக்கிய காரணம் மற்றும் பங்களிப்புக் காரணிகளாக ஹைப்பர்கொலஸ்ட்ரோலீமியா (இரத்த கொழுப்பு அதிகரித்தல்) மற்றும் மிகை இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) போன்றவை விளங்குகின்றன. இதற்கு சிகிச்சை மேற்கொள்ளாவிடில், மூளை மற்றும் சிறுநீரகங்களில் கடுமையான பாதிப்பை உண்டாக்கி இறப்பை ஏற்படுத்தலாம்.
காரணங்கள்#
பாரம்பரியம் (குடும்ப வரலாறு), அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் கொண்ட உணவு, உடற்பருமன், வயது அதிகரித்தல், புகை பிடித்தல், உணர்ச்சிவசப்படுதலால் ஏற்படும் மனஅழுத்தம், இயக்கமில்லாத வாழ்க்கை முறை, அதிகளவு ஆல்கஹாலை உட்கொள்ளுதல் மற்றும் உடல் உழைப்பின்மை போன்றவை இதய நோய்க்கான காரணங்களாகும்.
அறிகுறிகள்#
மூச்சுத் திணறல், தலைவலி, சோர்வு, தலை சுற்றல், நெஞ்சு வலி, கால் வீக்கம் மற்றும் இரைப்பை குடல் தொந்தரவுகள் போன்றவை இதய நோயின் அறிகுறிகளாகும்.
21.10.1 இதய நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு#
உணவுக் கட்டுப்பாடு
குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல், நிறைவுற் கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போவைட்ரேட்கள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும்.
அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும். நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.
உடல் செயல்பாடுகள்
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல் மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும்.
அடிமைப்படுத்தும் பொருள்களை தவிர்த்தல்
ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.
மிகை இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களைத் தடுப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் அடங்கிய விளக்கப்படத்தை வரைக. இந்நிலையைச் சமாளிக்க உணவுக் கட்டுப்பாடு அல்லாமல் பின்பற்றப்பட வேண்டிய வாழ்க்கை நடைமுறை மாற்றங்களைக் கூறுக.
21.11 புற்றுநோய்#
உலகளவில் ஆண்டு தோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘நண்டு’ என்று பொருள். புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ – கட்டி) என்று பெயர்.
கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும். இது இயல்பான செல் பிரிதலை மேற்கொள்வதில்லை.
புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது. மெட்டாஸ்டாசிஸினால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்புகள் நுரையீரல், எலும்புகள், கல்லீரல், தோல் மற்றும் மூளை ஆகும்.
பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் அறிந்து கொள்வோம்
கட்டிகளின் வகைகள்:
தீங்கற்ற அல்லது மென்மையான வகை அல்லாத கட்டிகள்: உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.
வீரியமான கட்டிகள்: பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.
21.11.1 புற்றுநோயின் வகைகள்#
உருவாகும் திசுக்களின் அடிப்படையில் புற்றுநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அவை:
கார்சினோமா : எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின் திசுக்களில் உருவாகிறது. இவ்வகைப் புற்றுநோய் தோல், நுரையீரல், வயிறு மற்றும் மூளை ஆகியவற்றில் ஏற்படலாம். சுமார் 85% புற்றுநோய்கள் இவ்வகையைச் சார்ந்தவை.
சார்கோமா : இணைப்பு மற்றும் தசைத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் இவ்வகையைச் சார்ந்தது. இவ்வகைப் புற்றுநோய் எலும்பு, குருத்தெலும்பு, தசை நாண்கள், அடிப்போஸ் திசு மற்றும் தசைகள் ஆகியவற்றில் ஏற்படலாம். புற்றுநோயில் 1% இவ்வகையைச் சேர்ந்தவை.
லியூக்கேமியா : எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இதன் பண்பாகும். இது இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகக் காணப்படும் இவ்வகைப் புற்றுநோய் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
லிம்போமா : நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை.
21.11.2 புற்றுநோய்க் காரணிகள்#
புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் ‘கார்சினோஜன்கள்’ அல்லது புற்றுநோய்க் காரணிகள் என்றழைக்கப்படுகின்றன. இவை, இயற்பியல், வேதியியல், அயனியாக்கும் கதிர்வீச்சுகள் மற்றும் உயிரியல் காரணிகளாகும்.
இயற்பியல் காரணிகள்
அதிகளவு புகையிடித்தலினால் நுரையீர், வாய்க்குழி, தொண்டை மற்றும் குரல்வளைப் புற்றுநோய் உண்டாகிறது. வெற்றிலை மற்றும் புகையிலை மெல்லுதல் வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. தோலின் மீது படும் அதிக சூரிய ஒளியினால் தோல் புற்றுநோய் ஏற்படலாம்.
வேதியியல் காரணிகள்
புகையிலை, கார்பன், நிலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிப்பதால் உருவாகும் பொருட்கள், பூச்சிக் கொல்லிகள், கல்நார், நிக்கல், சில சாயங்கள், செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை புற்றுநோயைத் தூண்டுகின்றன.
கதிரியக்கம்
அயனியாக்கும் கதிர்வீச்சுகளான எக்ஸ் – கதிர்கள், காமா கதிர்கள், கதிரியக்கப் பொருள்கள் மற்றும் அயனியாகாத கதிர்வீச்சுக்களான UV கதிர்கள் DNA-வை பாதிப்பிற்குள்ளாக்கி புற்றுநோய் உண்டாக வழிவகுக்கிறது.
உயிரியல் காரணிகள்
புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்கோஜனிக் வைரஸ்கள் எனப்படும்.
21.11.3 புற்றுநோய் சிகிச்சை#
புற்றுநோய் சிகிச்சை கீழ்க்கண்ட வழிமுறைகளை உள்ளடக்கியது.
அறுவை சிகிச்சை
புற்றுக்கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்குவதால், இது அருகிலுள்ள செல்களுக்கு மேலும் பரவாமல் தடுக்கலாம்.
கதிரியக்க சிகிச்சை
சுற்றியுள்ள சாதாரண செல்களை பாதிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டுமே கதிர்வீச்சின் மூலம் அழிப்பது.
வேதிமருந்து சிகிச்சை (கீமோதெரபி)
இது எதிர்ப் புற்றுநோய் மருந்துகளை உள்ளடக்கியது. இது செல்பிரிதலைத் தடுப்பதன் மூலம் புற்று செல்களை அழிக்கிறது.
தடைகாப்பு சிகிச்சை
உயிரியல் துலங்கல் மாற்றிகளான இண்டர்ஃபெரான்கள் தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் கட்டிகளை அழிக்கின்றன.
21.11.4 புற்றுநோய் தடுப்பு வழிமுறைகள்#
புற்றுநோய் தடுப்புத் திட்டங்கள், முதன்மை தடுப்பு மற்றும் ஆரம்பநிலையில் கண்டறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
புகையிடித்தலைத் தவிர்ப்பதால் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கலாம். தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சு நிறைந்த மாசுக் காரணிகளின் பாதிப்பிலிருந்து உற்பத்திப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும். சாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோல் புற்றுநோயைத் தடுக்க அதிகப்படியான கதிர்வீச்சுக்கு உட்படுதலைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் அறிந்து கொள்வோம்
உலக புற்றுநோய் நாள் – பிப்ரவரி 4
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் – நவம்பர் 7
21.12 எய்ட்ஸ் (பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைவு நோய்)#
மனித தடைகாப்பு குறைவு வைரஸ் (HIV) ஏற்படுத்தப்படும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும். இதில் நோய்த் தடைக்காப்பு மண்டலம் உடலின் நோய்க் காரணிகளை ஒடுக்குவதில் தோல்வியடைகிறது. இவை லிம்போசைட்டுகளை தாக்கி பாதிப்படைந்த நபர்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்துகிறது.
21.12.1 HIV பரவுதல்#
எய்ட்ஸ் நோய்க்கான வைரஸ் சிறுநீர், கண்ணீர், உமிழ்நீர், தாய்ப்பால் மற்றும் கலவிக்கால்வாய் சுரப்புகளில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து இரத்தத்தின் மூலம் நலமான ஒருவருக்குப் பரவுகிறது. தொடுதல் அல்லது உடல் தீண்டல் வழியாக HIV / எய்ட்ஸ் பரவுவதில்லை. இது உடல் திரவங்கள் மற்றும் இரத்தத் தொடர்பின் மூலம் பரவுகிறது.
பொதுவாக HIV பரவும் முறைகள்
(i) பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்வதால்.
(ii) போதை மருந்து ஊசி பயன்படுத்துவோர் இடையே நோய்த் தொற்று ஊசிகள் மூலமாகப் பரவுதல்.
(iii) பாதிக்கப்பட்ட நபரின் நோய்த் தொற்றுடைய இரத்தம் மற்றும் இரத்தப்பொருள்களைப் பெறுவதன் மூலம் பரவுதல்.
(iv) பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு தாய்சேய் இணைப்புத்திசு மூலம் பரவுதல்.
21.12.2 எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை#
அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட நபர்களில் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. இதனால் அந்நபர்கள் வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா மற்றும் பூஞ்சைத் தொற்றினால் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். நிணநீர் முடிச்சுகளில் வீக்கம், மூளைச் சேதம், நினைவாற்றல் குறைவு, பசியின்மை, எடை குறைதல், காய்ச்சல், நீடித்த வயிற்றுப்போக்கு, இருமல், சோம்பல், தொண்டை அழற்சி, வாந்தி மற்றும் தலைவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
கண்டறிதல்
HIV வைரஸ் எதிர்ப்பு ELISA (Enzyme Linked Immuno Sorbent Assay) சோதனை மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.
சிகிச்சை
எதிர் வைரஸ் மருந்துகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்ற சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் வாழ்நாளை நீட்டிக்கலாம்.
21.12.3 எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு#
கீழ்க்கண்ட படிநிலைகள் HIV நோய்த் தொற்றினை பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
(i) இரத்த வங்கியிலிருந்து இரத்தம் பெற்று ஏற்றுவதற்கு முன்னர் அக்குறிப்பிட்ட வகை இரத்தமானது HIV சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
(ii) மருத்துவமனைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஊசிகளை மீண்டும் பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
(iii) பாதுகாப்பான பாலுறவு மற்றும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
(iv) எய்ட்ஸ் நோயின் விளைவுகளை விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் அறிவுறுத்த வேண்டும்.
(v) எய்ட்ஸ் / HIV நபர்களை குடும்பம் மற்றும் சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தல் கூடாது.
மேலும் அறிந்து கொள்வோம்
மக்களில் பலர் எய்ட்ஸ் பற்றிய அறியாமையில் உள்ளனர். இதன் மூலம் நாம் கூறுவது “அறியாமையினால் இறக்கக் கூடாது”. நம் நாட்டில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு (NACO) மற்றும் பிற அரசு சாராத தொண்டு அமைப்புகள் (NGO’S) மக்களுக்கு எய்ட்ஸ் பற்றிய கல்வியைப் புகட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் நாள் “உலக எய்ட்ஸ் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் டாக்டர் சுனிதி சால்மன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி ஆவார். இவர் சென்னையில் 1980 – களில் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார். இவரது குழுவினர் 1985 – இல் இந்தியாவில் முதன் முதலில் HIV தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்தினார்கள். (இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்).
நினைவில் கொள்க#
❖ மருந்துகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்பவர்கள் அதற்கு அடிமையாகின்றனர். இதுவே மருந்துக்கு அடிமையாதல் அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்றழைக்கப்படுகிறது.
❖ புகைபிடித்தல், மெல்லுதல் மற்றும் உறிஞ்சுதல் போன்றவற்றிற்காக புகையிலை பயன்படுத்தப்படுகிறது. புகையிலையின் புகையை சுவாசித்தல் புகை பிடித்தலாகும்.
❖ ஆல்கஹாலைச் சார்ந்திருந்தல், மதுப் பழக்கம் எனவும், அடிமையாதல், மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது.
❖ நீண்ட காலமாக மது அருந்துவதால், அது ஒரு மயக்க மருந்தாகவும் மற்றும் வலி நிவாரணி போன்றும் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை நலிவடையச் செய்வதுடன், கல்லீரலில் அதிக கொழுப்பு சேமிக்கப்பட்ட சிர்ரோசிஸ் நோயையும் ஏற்படுத்துகிறது.
❖ நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். இன்சுலினின் பற்றாக்குறை, குறைவான இன்சுலின் சுரத்தல் அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும்.
❖ அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் எடை அசாதாரணமாக அதிகரிப்பது உடல் பருமன் எனப்படும்.
❖ பரவலாகக் காணப்படும் இதயக் குழல் நோய் (கரோனரி இதய நோய்) இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது.
❖ கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்று நோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது.
❖ மனித நோய்த் தடைகாப்பு குறைவு வைரஸ் (HIV) ஏற்படுத்தும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும்.
மதிப்பீடு#
I. சரியான விடையைத் தேர்ந்தெடு#
- புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
அ) நிக்கோட்டின்
ஆ) பானிக் அமிலம்
இ) குர்குமின்
ஈ) லெக்டின்
விடை: அ) நிக்கோட்டின்
- உலக புகையிலை எதிர்ப்பு தினம்
அ) மே 31
ஆ) ஜூன் 6
இ) ஏப்ரல் 22
ஈ) அக்டோபர் 2
விடை: அ) மே 31
- சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
அ) வேகப்படுத்தும் உடல் அமைப்பு கொண்டவை
ஆ) பிளவுகு உட்படுவதில்லை
இ) தீவிரமான மாற்றமடைந்த செல்கள்
ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
விடை: ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
- நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
அ) கார்சினோமா
ஆ) சார்கோமா
இ) லியூக்கேமியா
ஈ) லிம்போமா
விடை: ஈ) லிம்போமா
- அளவுக்கு மிகுந்த மதுப்பழக்கத்தினால் உருவாவது
அ) குறுகிய மறதி
ஆ) கல்லீரல் சிதைவு
இ) மாயத் தொற்று
ஈ) மூளைச் செயல்பாடு குறைதல்
விடை: ஆ) கல்லீரல் சிதைவு
- இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
அ) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
ஆ) பெரிகார்டியத்தின் வீக்கம்
இ) இதய வால்வுகள் வலுவிழப்பு
ஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை
விடை: ஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை
- எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு என்ன பெயர்?
அ) லியூக்கேமியா
ஆ) சார்கோமா
இ) கார்சினோமா
ஈ) லிம்போமா
விடை: இ) கார்சினோமா
- மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
அ) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
ஆ) தீங்கற்ற கட்டி
இ) அ மற்றும் ஆ
ஈ) மகுடக் கழலை நோய்
விடை: அ) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
- பாலியேதியா என்ற நிலை காணப்படுகிறது.
அ) உடற்பருமன்
ஆ) நீரிழிவு நோய்
இ) நீரிழிவு இன்சிபிடஸ்
ஈ) எய்ட்ஸ்
விடை: ஆ) நீரிழிவு நோய்
- மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
அ) கண்கள்
ஆ) செவி உணர்வுப் பகுதி
இ) கல்லீரல்
ஈ) மைய நரம்பு மண்டலம்
விடை: ஈ) மைய நரம்பு மண்டலம்
II. கீழ்க்கண்டவற்றை சரியா, தவறா எனக் கூறுக. தவறுகள் ஏதுமிருப்பின் திருத்தி எழுதுக.#
- கூற்று: எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்)
விடை: தவறு. எய்ட்ஸ் என்பது ஒரு உலகளாவிய தொற்று நோய் (Pandemic) ஆகும்.
- கூற்று: புற்றுநோயை உருவாக்கும் மரபணுக்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.
விடை: சரி
- கூற்று: உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.
விடை: தவறு. உடல் பருமனின் பண்பு அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் எடை அசாதாரணமாக அதிகரிப்பது ஆகும்.
- கூற்று: வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லியூக்கேமியா எனப்படுகிறது.
விடை: தவறு. வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது லியூக்கேமியா எனப்படுகிறது.
- கூற்று: நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது.
விடை: சரி
- கூற்று: நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.
விடை: சரி
- கூற்று: இன்சுலின் பற்றாக்குறையினால் நீரிழிவு நோய் வகை-2 உருவாகிறது.
விடை: தவறு. இன்சுலின் பற்றாக்குறையினால் நீரிழிவு நோய் வகை-1 உருவாகிறது. வகை-2 இல் இன்சுலின் இலக்கு செல்கள் பதில்வினை புரியாமை காரணமாகும்.
- கூற்று: கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.
விடை: சரி
- கூற்று: நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து.
விடை: தவறு. நிக்கோட்டின் என்பது கிளர்ச்சியூட்டும் வகை மருந்து.
- கூற்று: சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக் கோளாறு நோயுடன் தொடர்புடையது.
விடை: தவறு. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் நோயுடன் தொடர்புடையது.
III. கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக#
IDDM – Insulin Dependent Diabetes Mellitus (இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்)
HIV – Human Immunodeficiency Virus (மனித தடைகாப்பு குறைவு வைரஸ்)
BMI – Body Mass Index (உடற்பருமக் குறியீடு)
AIDS – Acquired Immuno Deficiency Syndrome (பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைவு நோய்)
CHD – Coronary Heart Disease (இதயக்குழல் இதய நோய்)
NIDDM – Non Insulin Dependent Diabetes Mellitus (இன்சுலின் சாராத நீரிழிவு நோய்)
IV. பொருத்துக#
| கலம் I | கலம் II |
|---|---|
| 1. சார்கோமா | - வயிற்று புற்றுநோய் |
| 2. கார்சினோமா | - அதிகப்படியான தாகம் |
| 3. பாலிடிப்சியா | - அதிகப்படியான பசி |
| 4. பாலியேதியா | - இதயத்தசைகளுக்கு இரத்த ஓட்டமின்மை |
| 5. இதயத்தசை நசிவுறல் நோய் | - புற்றுநோய் |
விடை:
- 1 → புற்றுநோய் (சார்கோமா என்பது இணைப்பு மற்றும் தசைத் திசுக்களின் புற்றுநோய்)
- 2 → வயிற்று புற்றுநோய்
- 3 → அதிகப்படியான தாகம் (பாலிடிப்சியா)
- 4 → அதிகப்படியான பசி (பாலியேதியா)
- 5 → இதயத்தசைகளுக்கு இரத்த ஓட்டமின்மை (இதயத்தசை நசிவுறல்)
V. கோடிட்ட இடங்களை நிரப்புக#
அதிகப்படியாக மது பருகுவதினால் கல்லீரலில் சிர்ரோசிஸ் நோய் ஏற்படுகிறது.
புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் நிக்கோட்டின்.
இரத்தப் புற்றுநோய்க்கு லியூக்கேமியா என்று பெயர்.
சிலவகையான மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு சகிப்புத்தன்மை எனப்படும்.
இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது வகை-2 நீரிழிவு நோயின் நிலை.
VI. ஒப்புமை வகை வினாக்கள்#
அ) தொற்று நோய் : எய்ட்ஸ் :: தொற்றா நோய் :
விடை: நீரிழிவு நோய் அல்லது இதய நோய்
ஆ) கீமோதெரபி : வேதிப் பொருள்கள் :: கதிர்வீச்சு :
விடை: கதிரியக்க சிகிச்சை
இ) உயர் இரத்த அழுத்தம் : ஹைப்பர்கொலஸ்ட்ரோலீமியா :: கிளைகோசூரியா :
விடை: நீரிழிவு நோய்
VII. ஒரு வாக்கியத்தில் விடையளி#
- மனோவியல் மருந்துகள் என்றால் என்ன?
விடை: மூளையின் மீது செயல்பட்டு, நடத்தை, உணர்வு நிலை, சிந்திக்கும் திறன், அறிவு ஆகியவற்றை தோற்றுவி அல்லது மாற்றும் மருந்துகள் மனோவியல் மருந்துகள் எனப்படும்.
- புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை: புகைபிடித்தலினால் நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழல் அழற்சி (bronchitis), எம்பிஸீமா, இதய நோய்கள் மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.
- உடற்பருமனுக்குக் காரணமான காரணிகள் எவை?
விடை: மரபியல் காரணிகள், உடல் உழைப்பின்மை, உணவுப் பழக்க வழக்கங்கள் (அளவுக்கதிகமாக உண்ணுதல்) மற்றும் நாளமில்லா சுரப்பிக் காரணிகள் போன்றவை உடல் பருமனுக்குக் காரணமாகின்றன.
- வயது முதிர்ந்தோர் நீரிழிவு என்றால் என்ன?
விடை: வகை-2 இன்சுலின் சாராத நீரிழிவு நோயே வயதானோரின் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. இது 80%-லிருந்து 90% நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது.
- மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?
விடை: புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கும் நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
- இன்சுலின் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது?
விடை: கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது.
VIII. குறுகிய விடையளி#
- HIV பரவக்கூடிய பல்வேறு வழிகளைக் கூறுக?
விடை:
(i) பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்வதால்.
(ii) போதை மருந்து ஊசி பயன்படுத்துவோர் இடையே நோய்த் தொற்று ஊசிகள் மூலமாகப் பரவுதல்.
(iii) பாதிக்கப்பட்ட நபரின் நோய்த் தொற்றுடைய இரத்தம் மற்றும் இரத்தப்பொருள்களைப் பெறுவதன் மூலம் பரவுதல்.
(iv) பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு தாய்சேய் இணைப்புத்திசு மூலம் பரவுதல்.
- புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
விடை: புற்று செல்கள் கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதலை மேற்கொள்கின்றன. அவை அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகளை உருவாக்கி திசுக்களை அழிக்கின்றன. மேலும் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்கின்றன (மெட்டாஸ்டாசிஸ்). சாதாரண செல்கள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பிரிகின்றன.
- வகை-1 மற்றும் வகை-2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்துக.
விடை:
| காரணிகள் | வகை-1 (IDDM) | வகை-2 (NIDDM) |
|---|---|---|
| நோயின் தாக்கம் | 10 – 20% | 80 – 90% |
| தொடங்கும் பருவம் | இளம்பருவத்தில் (20 வயதுக்கு குறைவானோர்) | வயதானோரில் (30 வயதிற்கு மேற்பட்டோர்) |
| உடல் எடை | சாதாரணமான உடல் எடை அல்லது எடை குறைதல் | உடல் பருமன் |
| குறைபாடு | பீட்டா செல்கள் அழிவதால் இன்சுலின் பற்றாக்குறை | இலக்கு செல்கள் இன்சுலினுக்கு பதில் வினை புரியாமை |
| சிகிச்சை | இன்சுலினை எடுத்துக் கொள்ளுதல் அவசியம் | உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்தப்படுகிறது |
- உடற்பருமன் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு பரிந்துரைக்கப்படுவது அவசியம். ஏன்?
விடை: குறைந்த கலோரி, இயல்பான புரதம், வைட்டமின்கள், கனிமங்கள், கட்டுப்படுத்தப்பட்ட கார்போவைட்ரேட், கொழுப்பு, அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் உடல் எடை அதிகரிப்பைத் தடுக்க உதவுகின்றன. எடை குறைப்பில் கலோரி கட்டுப்பாடு பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதும் ஆகும். இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பித்தப்பை நோய்கள், கரோனரி இதய நோய் மற்றும் கீல்வாதம் போன்ற உடல்பருமன் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்தான நோய் விளைவுகளைத் தடுக்க உதவுகிறது.
- இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக.
விடை:
குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல்.
நிறைவுற் கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகளை குறைவாக உட்கொள்ளல்.
குறைவான கார்போவைட்ரேட்கள் மற்றும் சாதாரண உப்பு உட்கொள்ளல்.
அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு உட்கொள்ளல்.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல் மற்றும் யோகா.
ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.
IX. விரிவான விடையளி#
- மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.
விடை: மது அருந்துபவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள்:
கல்வி மற்றும் ஆலோசனை: கல்வி மற்றும் தகுந்த ஆலோசனைகள், மது அருந்துபவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு அவற்றிலிருந்து விடுபடவும், வாழ்க்கையின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் உதவும்.
உடல் செயல்பாடுகள்: மறுவாழ்வை மேற்கொள்ளும் நபர்கள், நூல்கள் வாசித்தல், இசை, விளையாட்டு, யோகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடம் உதவியை நாடுதல்: சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும்.
மருத்துவ உதவி: உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடமிருந்து உதவிகள் பெறுவதன் மூலம் தங்களுடைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபட, நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.
- இதய நோய்கள் ஏற்பட காரணம் வாழ்க்கை முறையே ஆகும். இதை சரிசெய்ய தீர்வுகள் தருக.
விடை: இதய நோய்களைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்:
உணவுக் கட்டுப்பாடு:
குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல்.
நிறைவுற் கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகளை குறைவாக உட்கொள்ளல்.
குறைவான கார்போவைட்ரேட்கள் மற்றும் சாதாரண உப்பு உட்கொள்ளல்.
அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு உட்கொள்ளல்.
நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல்.
உடல் செயல்பாடுகள்:
- நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல் மற்றும் யோகா.
அடிமைப்படுத்தும் பொருள்களை தவிர்த்தல்:
- ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.
X. உயர் சிந்தனைக்கான வினாக்கள்#
- ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்களில் கொழுப்பின் பங்கு என்ன?
விடை: ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் என்பது இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் நோயாகும். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, அது இரத்த நாளங்களின் சுவர்களில் படிவதற்கு வழிவகுக்கிறது. இது மெல்லிய கொழுப்பு கீறல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தடிமனான, பிளேக் உருவாகும் வரை இருக்கலாம். இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச் சுருங்கச் செய்கிறது. இதன் விளைவாக இதயத் தசைகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்து இஸ்கிமியா மற்றும் இதயத் தசை நசிவுறல் ஏற்படும் அபாயம் உள்ளது.
- குப்பை உணவுகளை உண்பதாலும், மென் பானங்களைப் பருகுவதாலும் உடற்பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும், குழந்தைகள் அதனை விரும்புகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்கு நீங்கள் தரும் ஆலோசனைகளைக் கூறுக.
விடை: குழந்தைகளுக்கு குப்பை உணவுகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம். அவற்றில் அதிக கலோரி, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உள்ளன. இவை உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு சத்தான உணவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். வீட்டில் சத்தான மற்றும் சுவையான உணவுகளை தயாரித்து கொடுத்தல், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்தல், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துதல் போன்றவை குப்பை உணவுகளின் மீதான ஆர்வத்தை குறைக்க உதவும்.
- மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் நன்மைகள் யாவை?
விடை: தினசரி உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள்:
உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
தசைகளையும் எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.
மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் சிறந்த தூக்கத்தை வழங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- ஒரு முன்னணி வார இதழ் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மக்களிடையே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நீ இந்த நாளிதழின் அறிக்கையை உன் வகுப்பிலும், உன் வகுப்பிலுள்ள குழுவினரிடமும் விவாதித்து, இந்த அச்சமூட்டும் நோய்க்கு எதிராக செயல்படுதல் குறித்து மக்களுக்கு உதவுவது பற்றி முடிவெடுக்கவும்.
அ) உன்னுடைய பள்ளிக்கு அருகாமையிலுள்ள கிராம மக்களுக்கு நீ மேற்கூறியவற்றை தெரிவிக்கும் போது உனக்கு ஏற்படும் சிரமங்கள் யாவை?
விடை: கிராம மக்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது ஏற்படும் சிரமங்கள்:
கல்வியறிவின்மை மற்றும் அறியாமை.
மூட நம்பிக்கைகள் மற்றும் தவறான கருத்துகள்.
எய்ட்ஸ் பற்றி பேசுவதற்கு தயக்கம் மற்றும் வெட்கம்.
வளங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமை.
மக்களை அணுகுவதில் சிரமம்.
ஆ) இச்சிக்கலுக்கு நீ எவ்வாறு தீர்வு காண்பாய்?
விடை: இச்சிக்கலுக்கான தீர்வுகள்:
எளிய மொழியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துதல்.
உள்ளூர் மொழிகளில் தகவல்களை வழங்குதல்.
மருத்துவர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களின் உதவியை நாடுதல்.
பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் கல்வி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
தவறான கருத்துகளை அகற்ற கேள்வி-பதில் அமர்வுகளை ஏற்பாடு செய்தல்.
எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தாமல், அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துதல்.
XI. விழுமிய அடிப்படையான வினாக்கள்#
- போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால், அதிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை. ஏன்?
விடை: போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், உடல் மற்றும் மனம் இரண்டாலும் அந்த பொருள்களைச் சார்ந்து விடுகின்றனர். உடல் ரீதியாக, அவர்களின் உடல் இயல்பான நிலையை பராமரிக்க மருந்துகள் அல்லது மதுவைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. மன ரீதியாக, அவர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிம்மதியாக இருக்கவும் இந்த பொருள்களை நம்பியுள்ளனர். இந்த பொருள்கள் இல்லாத போது அவர்கள் கடுமையான உடல் மற்றும் மன அறிகுறிகளை (திரும்பப் பெறும் அறிகுறிகள்) அனுபவிக்கின்றனர். எனவே அவர்களால் எளிதில் விடுபட முடிவதில்லை.
- புகையிலை பழக்கம் ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிக.
விடை: புகையிடித்தலின்போது உண்டாகும் புகையில் கார்பன்-மோனாக்சைடு உள்ளது. கார்பன்-மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. ஆனால் கார்பன்-மோனாக்சைடு, ஆக்சிஜனை விட 200 மடங்கு அதிகமாக ஹீமோகுளோபினுடன் இணைகிறது. இதனால் ஹீமோகுளோபின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனை இழக்கிறது. இதன் விளைவாக உடல் திசுக்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் ஆக்சிஜன் பற்றாக்குறை (ஹைப்போக்ஸியா) ஏற்படுகிறது.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று உணவு வகைகளைக் கூறுக. இதை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என விவரி.
விடை: நீரிழிவு நோய் உள்ளவர்கள்:
எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:
முழு தானியங்கள், சிறு தானியங்கள் (சோளம், கம்பு, கேழ்வரகு)
கீரை வகைகள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள்
கோதுமை மற்றும் தீட்டப்படாத அரிசி
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (சுக்ரோஸ், குளுக்கோஸ்)
அதிக கார்போவைட்ரேட் கொண்ட உணவுகள்
நிறைவுற்ற கொழுப்பு அதிகம் கொண்ட உணவுகள்
ஏன் கடைப்பிடிக்க வேண்டும்:
இந்த உணவு முறையானது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது. கார்போவைட்ரேட்கள் ஸ்டார்ச் மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. நார்ச்சத்து மிக்க உணவுகள் குளுக்கோஸை மெதுவாக உறிஞ்ச உதவுகின்றன. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், நீண்ட கால சிக்கல்களைத் தவிர்க்கவும் அவசியம்.
- மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை, அவர்களின் தெரிந்து கொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது?
விடை: HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை மக்களின் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக சூழலைப் பொறுத்து மாறுபடுகிறது. நன்கு படித்த மற்றும் விழிப்புணர்வு உள்ளவர்கள் HIV பரவும் முறைகள், தடுப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பான நடத்தைகள் பற்றி அறிந்திருக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான பாலுறவை மேற்கொள்கின்றனர், இரத்த பரிசோதனைக்கு உட்படுகின்றனர், மற்றும் HIV பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். கல்வியறிவு இல்லாத அல்லது தகவல் கிடைக்காதவர்கள் HIV பற்றிய தவறான கருத்துகள் மற்றும் மூட நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் HIV பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தலாம் அல்லது பாரபட்சம் காட்டலாம். HIV பரவுவதைத் தடுக்க, அனைத்து மக்களுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குவது முக்கியமானதாகும்.
XII. கூற்று மற்றும் காரணம்#
- கூற்று: அனைத்து மருந்துகளும் மூளையின் மீது செயல்படுகின்றன.
காரணம்: மருந்துகள் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளைக் குனைக்கின்றன.
விடை: இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு. (அனைத்து மருந்துகளும் மூளையின் மீது செயல்படுவதில்லை; சில மருந்துகள் உடலின் பிற பாகங்களில் செயல்படுகின்றன. மருந்துகள் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளை குனைக்கலாம் அல்லது உற்சாகப்படுத்தலாம்.)
- கூற்று: நீரிழிவு நோயாளிகள் சிறுநீரில் அதிகளவு குளுக்கோஸ் வெளியேறுவதைக் காணலாம்.
காரணம்: கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதில்லை.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். (இன்சுலின் குறைபாடு அல்லது செயல்பாடு குறைவதால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரில் குளுக்கோஸ் வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது.)
பிற நூல்கள்#
Edward P Sarafino and Timothy W. Smith. 2012, Health Psychology, International Student Version - 7th Edition, Wiley India (P) Ltd, New Delhi.
Srilakshmi, B. Dietetics, 2014, 7th Multi-color Edition, New Age International Publishers, New Delhi.
Sathyanarayana U. Biochemistry - Revised Edition, Books and (P) Ltd, Kolkata.