Chapter 16: தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்#
கற்றலின் நோக்கங்கள்#
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன
❖ ஹார்மோன்களை வரையறை செய்தல்.
❖ தாவர ஹார்மோன்களை வரிசைப்படுத்துதல்.
❖ வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் வளர்ச்சி அடக்கிகள் என தாவர ஹார்மோன்களை வகைப்படுத்துதல்.
❖ பல்வேறு தாவர ஹார்மோன்களின் வாழ்வியல் விளைவுகளை வேறுபடுத்துதல்.
❖ தாவரங்களின் வாழ்வியல் செயல்பாடுகளை தாவர ஹார்மோன்கள் எவ்வாறு கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கின்றன என்பதை புரிந்து கொள்ளல்.
❖ மனித உடலில் உள்ள பல்வேறு நாளமில்லாச் சுரப்பிகளை அறிந்து கொள்ளுதல்.
❖ மனித உடலில் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாளமில்லாச் சுரப்பிகளையும், அவற்றின் அமைப்பையும் அடையாளம் காணுதல்.
❖ நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டினை அறிந்து கொள்ளுதல்.
❖ ஹார்மோன்கள் செயல்படும் குறிப்பிட்ட இலக்கு உறுப்புகள் மற்றும் அவற்றின் பணிகளை அறிந்துகொள்ளுதல்.
❖ ஹார்மோன்கள் சுரத்தலின் காரணமாக ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை அடையாளம் காணுதல்.
அறிமுகம்#
“கிளர்ச்சி” என்ற பொருள்படும் “ஹார்மன்” என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து “ஹார்மோன்” என்ற சொல் உருவாகியது. தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் சில வேதிப்பொருட்கள் தாவரங்களில் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளைச் செய்கின்றன. இவை தாவர ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. தாவரங்களின் பல்வேறு செல்கள் தாவர ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. இத்தாவர ஹார்மோன்கள் பல்வேறு விதமான வாழ்வியல் செயல்பாடுகளைச் செய்வதற்காக தாவரங்களின் பல பாகங்களுக்கும் கடத்தப்படுகின்றன. முதுகெலும்புள்ள விலங்குகளில் நாளமில்லாச் சுரப்பிகள் பல்வேறு செயல்பாடுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் பராமரிக்கின்றன. இந்த சுரப்பி மண்டலம் “ஹார்மோன்கள்” என்ற வேதியியல் தூதுவர்களை சுரக்கும் சுரப்பிமண்டலம் ஆகும். உடற்செயலியல் செயல்களான செரித்தல், வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்றவற்றை ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன.
16.1 தாவர ஹார்மோன்கள்#
தாவரங்களில் குறைவான செறிவில் உற்பத்தி செய்யப்படும் கரிம மூலக்கூறுகளை தாவர ஹார்மோன்கள் ஆகும். இம்மூலக்கூறுகள் புறத்தோற்றம், செயலியல் மற்றும் உயிர் வேதியியல் பதில் விளைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன.
தாவர ஹார்மோன்களின் வகைகள்#
ஐந்து வகையான முக்கிய தாவர ஹார்மோன்கள் உள்ளன. அவையாவன
- ஆக்சின்கள்
- சைட்டோகைனின்கள்
- ஜிப்ரலின்கள்
- அப்சிசிக் அமிலம் (ABA)
- எத்திலின்
இவற்றுள் ஆக்சின்கள், சைட்டோகைனின்கள் மற்றும் ஜிப்ரலின்கள் போன்றவை தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அதே வேளையில் அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின் போன்றவை தாவர வளர்ச்சியைத் தடை செய்கின்றன.
16.1.1 ஆக்சின்கள்#
தாவர ஹார்மோன்களில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆக்சின்கள் (Gk auxein = to grow) ஆகும். ஆக்சின் என்ற சொல்லை கோகல் மற்றும் ஹாஜன் ஸ்மித் (1931) ஆகியோர் அறிமுகம் செய்தனர். ஆக்சின்கள் வேர் மற்றும் தண்டின் நுனியில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து அவை நீட்சிப் பகுதிக்கு நகர்கின்றன. சார்லஸ் டார்வின் (1880) கேனரி புல் (ஃபலாரிஸ் கனாரியன்ஸிஸ்) தாவரத்தில் முனைக்குத்து உறையானது ஒளியின் திசையை நோக்கி வளர்வதையும், வளைவதையும் கண்டறிந்தார். அவர் முனைக்குத்து உறையின் நுனியிலிருந்து அடிப்பகுதிக்கு ஒருவிதமான “ஆதிக்கப் பொருள்” கடத்தப்படுகிறது என்ற முடிவுக்கு வந்தார். இந்த “ஆதிக்கப் பொருள்” தான் ஆக்சின் என பின்னர் வெண்ட் என்ற அறிஞரால் அடையாளம் காணப்பட்டது.
வெண்ட்-இன் ஆய்வுகள்#
ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் (1903 – 1990) என்ற டச்சு நாட்டு உயிரியல் அறிஞர் தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும், அதன் விளைவுகளையும் விளக்கினார். அவர் அவினா முளைக்குறுத்து உறையில் வரிசைக்கிரமமான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
இவர் தனது முதல் ஆய்வில் ஓட்ஸ் (அவினா) தாவரத்தின் முளைக்குறுத்து உறையின் நுனியை நீக்கினார். நுனி நீக்கப்பட்ட முளைக்குறுத்து உறை வளரவில்லை. இது வளர்ச்சிக்குத் தேவையான ஏதோ ஒரு பொருள் முளைக்குறுத்து உறையின் நுனியிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டியது. அவர் தனது இரண்டாவது ஆய்வில் அகார் துண்டை, நுனி நீக்கப்பட்ட முளைக்குறுத்து உறையின் மீது வைத்தார். முளைக்குறுத்து உறை நுனி எவ்வித பதில் விளைவையும் காட்டவில்லை. அவர் தனது அடுத்த ஆய்வில் முளைக்குறுத்து உறையின் நுனியை வெட்டி எடுத்து, அதனை அகார் துண்டத்தின் மீது வைத்தார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நுனியை நீக்கிவிட்டு, அகார் துண்டத்தை நுனி நீக்கப்பட்ட முளைக்குறுத்து உறையின் மீது வைத்தார். அது நேராக வளர்ந்தது. இந்த ஆய்வானது முளைக்குறுத்து உறையின் நுனியில் இருந்து அகார் துண்டத்துள் பரவி சென்ற ஏதோ ஒரு வேதிப்பொருள் தான் வளர்ச்சியைத் தூண்டியது என்பதைக் காட்டியது.
தன்னுடைய ஆய்வுகளில் இருந்து முனைக்குறுத்து உறையின் நுனியில் இருந்து பரவும் வேதிப்பொருளே வளர்ச்சிக்குக் காரணம் என்று வெண்ட் முடிவு செய்தார். அந்த வேதிப்பொருளுக்கு ஆக்சின் என்று பெயரிட்டார். அதன் பொருள் வளர்ச்சி என்பதாகும்.
ஆக்சின்களின் வகைகள்#
இயற்கை ஆக்சின்கள் மற்றும் செயற்கை ஆக்சின்கள் என்று ஆக்சின்கள் இரண்டு வகைப்படும்.
இயற்கை ஆக்சின்கள்: தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் இயற்கை ஆக்சின்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: IAA (இண்டோல் – 3 – அசிட்டிக் அமிலம்)
செயற்கை ஆக்சின்கள்: ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: 2, 4 D (2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்)
ஆக்சின்களின் வாழ்வியல் விளைவுகள்#
தாவரங்களின் பல்வேறு பாகங்களில் ஆக்சின்கள் பல வகையான வாழ்வியல் விளைவுகளை உருவாக்குகின்றன.
ஆக்சின்கள் தண்டு மற்றும் முளைக்குருத்தின் நீட்சியை ஊக்குவித்து, அவற்றை வளரச் செய்கின்றன.
படம் 16.3 செல் நீட்சி குறைந்த செறிவில் ஆக்சின்கள் வேர் உருவாவதைத் தூண்டுகின்றன. அதிக செறிவில் வேர் உருவாவதைத் தடை செய்கின்றன.
நுனி மொட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் பக்கவாட்டு மொட்டுகளின் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. இதற்கு நுனி ஆதிக்கம் என்று பெயர்.
ஆக்சின்களைத் தெளிப்பதால் கருவுறுதல் நடைபெறாமலேயே விதையிலாக் கனிகள் உருவாதல் தூண்டப்படுகிறது (கருமுறாக்கனியாதல்). (எ.கா) தர்பூசணி, திராட்சை, எலுமிச்சை போன்றவை.
ஆக்சின்கள் உதிர்தல் அடுக்கு உருவாவதைத் தடை செய்கின்றன.
- பினைல் அசிடிக் அமிலம் (PAA) மற்றும் இண்டோல் 3 அசிட்டோ நைட்ரைல் (IAN) ஆகியவை இயற்கை ஆக்சின்களாகும். இண்டோல் 3 பியூட்ரிக் அமிலம் (IBA), இண்டோல் புரோப்பியோனிக் அமிலம், நாப்தலின் அசிடிக் அமிலம் (NAA) மற்றும் 2, 4, 5 – T (2, 4, 5 – டிரைகுளோரோ பீனாக்சி அசிடிக் அமிலம்) போன்றவை சில செயற்கை ஆக்சின்களாகும்.
16.1.2 சைட்டோகைனின்கள்#
தாவர செல்களில் செல் பகுப்பு அல்லது சைட்டோகைனிசிஸ் நிகழ்வை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன்களே சைட்டோகைனின்கள் (சைட்டோஸ் – செல்; கைனஸிஸ் – பகுப்பு) ஆகும். இவை முதலில் ஹெர்ரிங் மீனின் விந்து செல்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. கைனெட்டின் என்பது சியா மெய்ஸ் (மக்காச்சோளம்) தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சைட்டோகைனின் ஆகும். சைட்டோகைனின் தேங்காயின் இளநீரில் அதிகமாகக் காணப்படுகிறது.
சைட்டோகைனின்களின் வாழ்வியல் விளைவுகள்#
ஆக்சின்கள் இருக்கும்போது சைட்டோகைனின்கள் செல்பகுப்பை (சைட்டோகைனிசிஸ்) தூண்டுகின்றன.
சைட்டோகைனின்கள் செல்களை நீட்சியடையச் செய்கின்றன.
திசு வளர்ப்பு முறையில் காலஸில் இருந்து புதிய உறுப்புகள் தோன்ற ஆக்சின்களும் சைட்டோகைனின்களும் தேவைப்படுகின்றன. (உருவத்தோற்றவியல்)
நுனி மொட்டு இல்லாதபோதே பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை சைட்டோகைனின்கள் ஊக்குவிக்கின்றன.
சைட்டோகைனின்களைப் பயன்படுத்தும் போது தாவரங்கள் முதுமையடைவது தாமதப்படுத்தப்படுகிறது. இதற்கு ரிச்மாண்ட் லாங் விளைவு (Richmond Lang effect) என்று பெயர்.
16.1.3 ஜிப்ரலின்கள்#
ஜிப்ரலின்களே அதிக அளவு காணப்படும் தாவர ஹார்மோன்களாகும். குருசோவா (1926) நெல் பயிரில் “பக்கானே நோய்” அல்லது “கோமாளித்தன நோயை” கண்டறிந்தார். நெல்லின் கணுவிடைப் பகுதியின் இத்தகைய நீட்சி ஜிப்ரில்லா புஜிகுரோய் என்ற பூஞ்சையால் ஏற்பட்டது. இதற்குக் காரணமான செயல்திறன் வாய்ந்த பொருள் ஜிப்ரலிக் அமிலம் என அடையாளம் காணப்பட்டது.
ஜிப்ரலின்களின் வாழ்வியல் விளைவுகள்#
தாவரங்களின் மீது ஜிப்ரலின்களைத் தெளிக்கும்போது, அது கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது. (எ.கா) மக்காச்சோளம் மற்றும் பட்டாணி.
குறுங்கிய இலைவடிவம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரலின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போஷிங் (Bolting) என்று பெயர்.
படம் 16.4 போஷிங் ஜிப்ரலின்கள் இருபாலிமைந்த தாவரங்களில் (ஒரில்த் தாவரங்களில்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன (வெள்ளரி).
ஜிப்ரலின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.
விதைகளற்ற கனிகளை (கருமுறாக்கனிகள் – கருமுறுதல் நடைபெறாமலேயே கனிகள் உருவாதல்) தூண்டுவதில் ஆக்சின்களைவிட ஜிப்ரலின்கள் திறன் மிக்கவை. (எ.கா) தக்காளி.
16.1.4 அப்சிசிக் அமிலம்#
அப்சிசிக் அமிலம் (ABA) உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஆகும். இது பல்வேறு வகையான இறுக்க நிலை காலங்களுக்கு எதிராக தாவரங்களின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. எனவே இது இறுக்கநிலை ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. தாவரங்களின் பசுங்கணிகங்களில் இந்த ஹார்மோன் காணப்படுகிறது.
வாழ்வியல் விளைவுகள்#
ABA உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவை கிளையிலிருந்து தனித்து உதிர்ந்து விழுவது) ஊக்குவிக்கிறது.
நீர் இறுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் ABA இலைத் துளையை மூடச் செய்கிறது.
படம் 16.5 மூப்படதல் மற்றும் உதிர்தல் ABA இலைகளில் பச்சையத்தை இழக்கச் செய்து மூப்படைவதை ஊக்குவிக்கிறது.
குளிர்காலங்களின் போது பிரட் போன்ற மரங்களில், ABA மொட்டுகளின் உறக்கத்தைத் தூண்டுகிறது.
தக்காளி தாவரத்தில், ABA பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியைத் தடை செய்யும் வீரியமிக்க வளர்ச்சி அடக்கி ஆகும்.
16.1.5 எத்திலின்#
எத்திலின் ஒரு வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன். இது ஒரு வளர்ச்சி அடக்கி ஆகும். இது பொதுவாக கனிகள் முதிர்ச்சியடைவதிலும் பழுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. ஆப்பிள், வாழை, தர்பூசணி போன்ற தாவரங்களில் கனிகள் பழுக்கும் போது அதிக அளவு எத்திலின் உற்பத்தியாகிறது.
எத்திலினின் வாழ்வியல் விளைவுகள்#
எத்திலின் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது. (எ.கா) தக்காளி, ஆப்பிள், மா, வாழை.
படம் 16.6 எத்திலின் எத்திலின் இருபுறமான தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடை செய்கிறது.
எத்திலின் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவுபடுத்துகிறது.
செயல்பாடு:
இரண்டு அல்லது மூன்று பழுக்காத தக்காளி காய்களை ஒரு பழுத்த வாழைப்பழத்துடன் ஒரு காகிதப் பையில் வைத்து சுற்றி, மேற்பகுதியை மூடிவிட வேண்டும். வேறொரு காகிதப் பையில் இரண்டு அல்லது மூன்று பழுக்காத தக்காளி காய்களை மட்டும் வைத்து, சுற்றி மேல்பகுதியை மூடிவிட வேண்டும். என்ன நடைபெறுகிறது? ஏன்?
முதல் பையில் வாழைப்பழம் தொடர்ந்து பழுக்கும்போது, அது எத்திலின் வாயுவை உற்பத்தி செய்கிறது. பையில் இருக்கும் இந்த வாயு தக்காளி காய்களைப் பழுக்கச் செய்கிறது. ஆனால் இரண்டாவது பையில் தக்காளி காய்கள் பழுக்காமலேயே இருக்கும்.
எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகளில் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதைத் தூண்டுகிறது. இதனால் இவை முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்துவிடுகின்றன.
எத்திலின் மொட்டுகள், விதைகளின் உறக்கத்தை நீக்குகிறது.
16.2 மனித நாளமில்லாச் சுரப்பி மண்டலம்#
விலங்கினங்களில் நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் என இரு வகையான சுரப்பிகள் காணப்படுகின்றன. நாளமில்லாச் சுரப்பிகள் மனிதரிலும், விலங்குகளின் உடலிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் நாளங்கள் இல்லாததால் நாளமில்லாச் சுரப்பிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் சுரப்புகள் ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன. மிகக் குறைவான அளவு சுரக்கும் இவை, இரத்தத்தில் பரவுவதன் மூலம் உடலின் தொலைதூர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை குறிப்பிட்ட உறுப்புகளில் செயல்படுகின்றன. இத்தகைய உறுப்புகள் இலக்கு உறுப்புகள் என குறிப்பிடப்படுகின்றன.
நாளமுள்ள சுரப்பிகள் சுரக்கும் பொருளினை எடுத்துச் செல்ல நாளங்கள் உள்ளன. (எ. கா.) உமிழ் நீர் சுரப்பிகள், பால் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள்.
மனிதரிலும் பிற முதுகெலும்பிகளிலும் காணப்படும் நாளமில்லாச் சுரப்பிகள்:#
அ. பிட்யூட்டரி சுரப்பி
ஆ. தைராய்டு சுரப்பி
இ. பாரா தைராய்டு சுரப்பி
ஈ. கணையம் (லாங்கர் ஹான்ஸ் திட்டுகள்)
உ. அட்ரினல் சுரப்பி (கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா)
ஊ. இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பி)
எ. தைமஸ் சுரப்பி
16.2.1 பிட்யூட்டரி சுரப்பி#
பிட்யூட்டரி சுரப்பி அல்லது ஹைப்போபைசிஸ் என்பது பட்டாணி வடிவிலான திரட்சியான செல்களின் தொகுப்பாகும். இது மூளையின் அடிப்பகுதியில் டையன்செபலானின் கீழ்ப்பகுதியில் ஹைபோதாலமசுடன், பிட்யூட்டரி தண்டின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பிட்யூட்டரி சுரப்பியானது இரண்டு கதுப்புகளைக் கொண்டது. அவை வெவ்வேறு செயல்பாடுகளை செய்கின்றன. முன்னுள்ள கதுப்பு அடினோஹைப்போபைசிஸ் எனவும் பின்னுள்ள கதுப்பு நியூரோஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. இடைக்கதுப்பு மனிதர்களில் காணப்படவில்லை.
பெரும்பாலான உயிரினங்களில் பிட்யூட்டரி சுரப்பி ஒரு முதன்மையான சுரப்பியாகும். இது பிற நாளமில்லாச் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதால் “தலைமைச் சுரப்பி” என்றும் அழைக்கப்படுகிறது.
பிட்யூட்டரியின் முன் கதுப்பு (அடினோ- ஹைப்போபைசிஸ்) சுரக்கும் ஹார்மோன்கள்#
பிட்யூட்டரியின் முன் கதுப்பு பல்வேறு வகையான செல்களால் ஆக்கப்பட்டது. மேலும் இப்பகுதி பிற நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டும் பல்வகையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
அ. வளர்ச்சி ஹார்மோன் (GH)
ஆ. தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH)
இ. அட்ரினோ கார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன்/ அட்ரினல் புறணியை தூண்டும் ஹார்மோன் (ACTH)
ஈ. கோனடோட்ரோபிக் ஹார்மோன் (GTH)
உ. ப்ரோலாக்டின் (PRL)
(அ) வளர்ச்சி ஹார்மோன் (GH)#
வளர்ச்சி ஹார்மோன் என்பது உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. இது குருத்தெலும்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது செல்களின் வளர்ச்சியை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோனின் முறையற்ற சுரத்தல் கீழ்க்காணும் விளைவுகளை ஏற்படுத்தும்.
குள்ளத்தன்மை: குறைவான சுரப்பின் காரணமாக இந்நிலை குழந்தைகளில் காணப்படுகிறது. குன்றிய வளர்ச்சி, எலும்புகள் உருவாவதில் தாமதம், மற்றும் மனவளர்ச்சி குறைபாடு ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
அரக்கத்தன்மை: குழந்தைகள், வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரத்தல் காரணமாக மிகையான வளர்ச்சி அடைவார்கள்.
அக்ரோமேகலி: பெரியவர்கள் அதிகப்படியான வளர்ச்சி ஹார்மோன் சுரத்தல் காரணமாக முகம், தலை, கை, கால்கள் ஆகியவைகளில் அதிகமான வளர்ச்சியை பெற்றிருப்பர்.
(ஆ) தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH)#
இந்த ஹார்மோன் தைராய்டு சுரப்பியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதன் செயல்களையும் ஹார்மோன் சுரத்தையும் ஒருங்கிணைக்கும்.
(இ) அட்ரினோகார்ட்டிக்கோட்ரோபிக் ஹார்மோன்/ அட்ரினல் புறணியைத் தூண்டும் ஹார்மோன் (ACTH)#
இது அட்ரினல் சுரப்பியின் புறணியைத் தூண்டி, ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். மேலும் அட்ரினல் புறணியில் நடைபெறும் புறத்தோற்ற உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
(ஈ) கோனடோட்ரோபிக் ஹார்மோன்கள் (GTH)#
ஃபாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன் ஆகிய இரு கோனடோட்ரோபிக் ஹார்மோன்களும் இயல்பான இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிக்கு காரணமாகின்றன.
ஃபாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH)
- இது ஆண்களில், விந்தகங்களின் எபிதிடிமிஸை தூண்டுவதன் மூலம் விந்தணுக்கள் உருவாக்கத்திற்கும்,
- பெண்களின் அண்டச் சுரப்பியில் அண்டச் செல்கள் வளர்ச்சி அடைவதை ஊக்குவிப்பதற்கும் காரணமாகிறது.
லூட்டினைசிங் ஹார்மோன் (LH)
- ஆண்களில் வீடிக் செல்கள் தூண்டப்படுவதன் மூலம் ஆண் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் சுரக்க காரணமாகின்றது.
- பெண்களின் அண்டம் விடுபடும் (முதிர்ந்த கிராஃபியன் ஃபாலிக்கிளிலிருந்து அண்டம் விடுபடுதல்) செயலுக்கும், கார்ப்பஸ் லூட்டியம் வளர்ச்சியடையவும், பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரான் உருவாக்கத்திற்கும் காரணமாக உள்ளது.
(உ) புரோலாக்டின் (PRL)#
இது லாக்டோதெனிக் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தில் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தை பேற்றிற்கு பின் பால் உற்பத்தியை தூண்டவும் செய்கிறது.
பிட்யூட்டரியின் பின் கதுப்பு (நியூரோ- ஹைப்போபைசிஸ்) சுரக்கும் ஹார்மோன்கள்#
(அ) வாசோபிரஸ்ஸின் அல்லது ஆண்டியூரிடிக் ஹார்மோன் (ADH)
(ஆ) ஆக்ஸிடோசின்
(அ) வாசோபிரஸ்ஸின் அல்லது ஆண்டியூரிடிக் ஹார்மோன் (ADH)#
சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும் நீர் இழப்பைக் குறைக்கிறது. எனவே இது ஆண்டி டையூரிடிக் ஹார்மோன் (சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன்) எனப்படுகிறது.
ADH குறைவாக சுரப்பதால், நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்ற நிலை (பாலியூரியா) உண்டாகிறது. இக்குறைபாடு டயாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.
(ஆ) ஆக்ஸிடோசின்#
பெண்களின் குழந்தைப்பேற்றின் போது கருப்பையை சுருக்கியும், விரிவடையச் செய்தும், குழந்தைப்பேற்றுக்கு பிறகு பால் சுரப்பிகள் பாலை வெளியேற்றுவதற்கும் காரணமாகிறது.
மேலும் அறிந்து கொள்வோம்
பினியல் சுரப்பி மெலடோனின் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ‘காலத் தூதுவர்கள்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் உடல் முழுமைக்கும் இரவு நேரத்தை உணர்த்தும் பணியை இந்த ஹார்மோன் மேற்கொள்ளிறது. இரவு நேரங்களில் ஒளி, குறிப்பாக குறைந்த அலை நீளம் கொண்ட ஒளி படுவதால், மெலடோனின் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது. மெலடோனின் உற்பத்தி குறைவதால் இயற்கையான உறக்கச் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் உறக்கமின்மையின் காரணமாக வளர்சிதை மாற்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.
16.2.2 தைராய்டு சுரப்பி#
தைராய்டு சுரப்பியானது, மூச்சுக்குழலின் இரு புறமும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு கதுப்புகளாக அமைந்துள்ளது. இவ்விரண்டு கதுப்புகளும் இஸ்த்மஸ் என்ற மெல்லிய திசுக் கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன. இச்சுரப்பியானது பல நுண் கதுப்புகளால் ஆனது. இந்த நுண் கதுப்புகள் கன சதுர எபிதீலியம் செல்களை சுவராகக் கொண்டுள்ளன. இந்த நுண் கதுப்புகளின் உள்ளே தைரோகுளோபுலின் என்ற கூழ்மப் பொருள் நிரம்பியுள்ளது.
தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு டைரோசின் என்ற அமினோ அமிலமும், அயோடினும் காரணமாகின்றன.
தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள்#
அ) ட்ரைஅயோடோ தைரோனின் (T3)
ஆ) டெட்ரா அயோடோ தைரோனின் அல்லது தைராக்சின் (T4).
தைராய்டு ஹார்மோன்களின் பணிகள்#
தைராய்டு ஹார்மோன்களின் பணிகளாவன,
- அடிப்படை வளர்சிதை மாற்ற வீதத்தை (BMR) பராமரித்து, ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
- உடல் வெப்ப நிலையை சமநிலையில் பராமரிக்கிறது.
- நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் பங்கேற்கிறது.
- உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் உருவாக்கம், ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
- உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.
- இது “ஆளுமை ஹார்மோன்” என்றும் அழைக்கப்படுகிறது.
- செல்களில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
தைராய்டு சுரப்பியின் குறைபாடுகள்#
தைராய்டு சுரப்பி இயல்பான அளவு ஹார்மோன்களைச் சுரக்காத நிலை தைராய்டு குறைபாடு எனப்படுகிறது. இது கீழ்க்கண்ட குறைபாடுகளை உருவாக்குகிறது.
ஹைப்போதைராய்டியம் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக இந்நிலை ஏற்படுகிறது. எளிய காய்ப்பர், கிரிட்டினிசம், மிக்ஸிடிமா ஆகியவை ஹைபோதைராய்டிசத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.
எளிய காய்ப்பர் உணவில் தேவையான அளவு அயோடின் இல்லாததால் ஏற்படுகிறது. இமயமலைப் பகுதியின் பெரும்பான்மையான மக்களிடம் இந்நிலை காணப்படுகிறது. இமயமலைப் பகுதி மண் வளத்தில் குறைவான அளவு அயோடின் இருப்பதால் இந்நிலை அங்கு பொதுவாகக் காணப்படுகிறது. கழுத்துப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு தைராய்டு சுரப்பி வீங்கி காணப்படும் இந்நிலை எளிய காய்ப்பர் எனப்படும்.
கிரிட்டினிசம் குழந்தைகளில் குறைவான தைராய்டு ஹார்மோன் சுரப்பால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் குள்ளத்தன்மை, குறைவான மனவளர்ச்சி, குறைபாடான எலும்புகள் வளர்ச்சி ஆகியனவாகும். இவர்களை “கிரிட்டின்கள்” என்று அழைப்பர்.
மிக்ஸிடிமா இது பெரியவர்களில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படுகிறது. இதன் காரணமாக குறைவான மூளை செயல்பாடு, முகம் உப்பிய அல்லது வீங்கிய தோற்றம், உடல் எடை அதிகரிப்பு ஆகியவை தோன்றும்.
ஹைப்பர் தைராய்டியம் தைராய்டு ஹார்மோன்களின் அதிகரித்த சுரப்பின் காரணமாக கிரேவின் நோய் (எக்ஸாப்தல்மிக் காய்ப்பர்) பெரியவர்களில் உண்டாகிறது. இதன் அறிகுறிகள், துருத்திய கண்கள் (எக்ஸாப்தல்மியா), வளர்சிதைமாற்ற வீதம் அதிகரித்தல், மிகை உடல் வெப்பநிலை, மிகையாக வியர்த்தல், உடல் எடை குறைவு, நரம்புத் தளர்ச்சி ஆகியனவாகும்.
மேலும் அறிந்து கொள்வோம்
எட்வர்ட். செண்டல் என்பார் 1914 ஆம் ஆண்டில் முதன்முறையாக தைராக்சின் ஹார்மோனை படிக நிலையில் தனித்துப் பிரித்தார். சார்லஸ் ஹாரிங்டன் மற்றும் ஜார்ஜ் பார்ஜர் ஆகியோர் தைராக்சின் ஹார்மோனின் மூலக்கூறு அமைப்பை 1927 ஆம் ஆண்டில் கண்டறிந்தனர். ஒவ்வொரு நாளும் தைராய்டு சுரப்பியானது தைராக்சினைச் சுரக்க “120µg” அயோடின் தேவைப்படுகிறது.
16.2.3 பாராதைராய்டு சுரப்பி#
தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் நான்கு சிறிய வட்ட வடிவினான பாராதைராய்டு சுரப்பிகள் அமைந்துள்ளன. இச்சுரப்பியின் முதன்மைச் செல்கள் பாராதார்மோன் என்ற ஹார்மோனை சுரக்கின்றன.
பாராதார்மோன் பணிகள்#
மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.
பாராதைராய்டு குறைபாடுகள்#
தைராய்டெக்டமி என்ற அறுவை சிகிச்சையில் (தைராய்டு சுரப்பி அகற்றப்படுவதால்) பாராதைராய்டு சுரப்பியில் சுரக்கும் பாராதார்மோன் குறைவாக சுரக்கிறது. இதன் காரணமாக
- தசை இறுக்கம் எனப்படும் டெட்டனி ஏற்படுதல் (முகம், குரல்வளை, கைகள் மற்றும் பாதங்கள் ஆகியவற்றின் தசைகள் இறுக்கமடைதல்).
- கால் தசைகளில் வலியுடன் கூடிய தசைப்பிடிப்பு உண்டாதல் ஆகிய நிலைகள் ஏற்படுகின்றன.
16.2.4 கணையம் (லாங்கர் ஹான்ஸ் திட்டுகள்)#
கணையம் இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையில், மஞ்சள் நிறத்தில் நீள் வாட்டத்தில் காணப்படும் சுரப்பியாகும். இது நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பியாக இரு வழிகளிலும் பணிபுரிகிறது. கணையத்தின் நாளமுள்ள பகுதி கணைய நீரை சுரக்கிறது. இது உணவு செரித்தலில் முக்கிய பங்காற்றுகிறது. நாளமில்லாச் சுரப்புப் பகுதியானது லாங்கர் ஹான்ஸ் திட்டுகள் எனப்படுகிறது.
லாங்கர் ஹான்ஸ் திட்டுகள் ஆல்ஃபா செல்கள் மற்றும் பீட்டா செல்கள் என்ற இரு வகை செல்களைக் கொண்டுள்ளன. ஆல்ஃபா செல்கள், குளுக்கோகான் ஹார்மோனையும், பீட்டா செல்கள், இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
கணைய ஹார்மோன்களின் பணிகள்#
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிப்பதற்கு இன்சுலின், குளுக்கோகான் சுரப்பினை சம அளவில் நிலைநிறுத்துவது அவசியமாகிறது.
இன்சுலின்
- குளுக்கோஸை கிளைக்கோஜனாக மாற்றிக் கல்லீரலிலும் தசைகளிலும் சேமிக்கிறது.
- செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதை ஊக்குவிக்கிறது.
- இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
குளுக்கோகான்
- கல்லீரலில் கிளைக்கோஜன் குளுக்கோஸாக மாற்றம் அடைய உதவுகிறது.
- இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
டயாபடீஸ் மெல்லிடஸ்#
இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதால் உண்டாவது டயாபடீஸ் மெல்லிடஸ். இக் குறைபாட்டின் காரணமாக
- இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் (ஹைப்பர்கிளைசீமியா).
- சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல் (கிளைக்கோசூரியா).
- அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா).
- அடிக்கடி தாகம் எடுத்தல் (பாலிடிப்சியா).
- அடிக்கடி பசி எடுத்தல் (பாலிபேஜியா).
போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.
16.2.5 அட்ரினல் சுரப்பி#
ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்புறத்திலும் அட்ரினல் சுரப்பிகள் அமைந்துள்ளன. இவை சிறுநீரக மேற்குரப்பிகள் (suprarenal glands) என்றும் அழைக்கப்படுகின்றன.
இதன் வெளிப்புறப்பகுதி அட்ரினல் கார்டெக்ஸ் என்றும் உட்புறப்பகுதி அட்ரினல் மெடுல்லா என்றும் அழைக்கப்படும். இவ்விரு பகுதிகளும் அமைப்பு மற்றும் பணிகளில் வேறுபடுகின்றன.
அட்ரினல் கார்டெக்ஸ்#
அட்ரினல் கார்டெக்ஸ் மூவகையான செல் அடுக்குகளால் ஆனது. அவை சோனா குளோமெருலோசா, சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா ரெட்டிகுலாரிஸ்.
அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் கார்டிகோஸ்டீராய்டுகள் ஆகும். அவை
(அ) குளுக்கோகார்டிகாய்டுகள்
(ஆ) மினரலோக்கார்டிகாய்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்ரினோகார்ட்டிகாய்டு ஹார்மோன்களின் பணிகள்#
குளுக்கோகார்டிகாய்டுகள் சோனா ஃபாஸிகுலேட்டாவில் சுரக்கும் குளுக்கோகார்டிகாய்டுகளாவன, கார்ட்டிசோல் மற்றும் கார்ட்டிசோஸ்டிரான்.
- இது செல்களில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
- கல்லீரலில் கிளைக்கோஜனை, குளுக்கோஸாக மாற்றுவதைத் தூண்டுகிறது.
- இது அழற்சி மற்றும் ஒவ்வாமை தடுப்பு பொருளாகச் செயல்படுகிறது.
மேலும் அறிந்து கொள்வோம்
அட்ரினல் கார்டெக்ஸ் சுரக்கும் ‘கார்ட்டிசோல்’ ஹார்மோன் உடலை உயிர்ப்பு நிலையில் வைத்திருக்கவும், மிகுந்த பாதிப்பு மற்றும் மன அழுத்தங்களிலிருந்து மீண்டு வரவும் உதவுகிறது. கார்ட்டிசோல் என்பது உயிர் காக்கும் பணியை மிகுந்த அழுத்த நிலைகளில் மேற்கொள்கிறது. எனவே இது “உயிர் காக்கும் ஹார்மோன்” என்றும் அழைக்கப்படுகிறது.
மினரலோக்கார்டிகாய்டுகள் சோனா குளோமெருலோசாவில் சுரக்கும் மினரலோக்கார்டிகாய்டு ஹார்மோன் ஆல்டோஸ்டிரான்.
- சிறுநீரகக் குழல்களில் சோடியம் அயனிகளை மீள உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.
- அதிகமான பொட்டாசியம் அயனிகளை வெளியேற்றக் காரணமாகிறது.
- மின்பகுபொருட்களின் சமநிலை, நீர்ம அளவு, சவ்வூறு பரவல் அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.
அட்ரினல் மெடுல்லா#
அட்ரினல் மெடுல்லா குரோமாஃபின் செல்களால் ஆனது. இப்பகுதி பரிவு மற்றும் எதிர்ப்பரிவு நரம்புகள் நிறைந்து காணப்படுகிறது.
அட்ரினல் மெடுல்லா சுரக்கும் ஹார்மோன்கள்#
இரண்டு ஹார்மோன்கள் அட்ரினல் மெடுல்லாவால் சுரக்கப்படுகின்றன. அவை
அ) எபிநெப்ரின் (அட்ரினலின்)
ஆ) நார் எபிநெப்ரின் (நார் அட்ரினலின்)
இவ்விரண்டு ஹார்மோன்களும் பொதுவாக ‘அவசர கால ஹார்மோன்கள்" என்று அழைக்கப்படுகின்றன. அதனால் இவை மனஅழுத்தம் மற்றும் உணர்ச்சி வசப்படும் காலங்களில் உற்பத்தியாகின்றன. எனவே இந்த ஹார்மோன்கள், “சண்டை, பயமுறுத்தும் அல்லது பறக்கும் ஹார்மோன்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன.
அட்ரினல் மெடுல்லா சுரக்கும் ஹார்மோன்களின் பணிகள்#
எபிநெப்ரின் (அட்ரினலின்)
- கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுவதை ஊக்குவிக்கின்றது.
- இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
- மூச்சுக்குழல் மற்றும் மூச்சுச் சிற்றறை ஆகியவற்றை விரிவடையச் செய்வதன் மூலம் சுவாச வீதத்தை அதிகரிக்கச் செய்கிறது.
- கண் பாவையை விரிவடையச் செய்கிறது.
- தோலினடியில் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது.
நார் எபிநெப்ரின் (நார் அட்ரினலின்) இவற்றின் பெரும்பாலான செயல்கள் எபிநெப்ரின் ஹார்மோனின் செயல்பாடுகளை ஒத்திருக்கின்றன.
16.2.6 இனப்பெருக்கச் சுரப்பிகள்#
இனப்பெருக்கச் சுரப்பிகள் இரு வகைப்படும். அவை ஆண்களில் விந்தகம் மற்றும் பெண்களில் அண்டகம் ஆகும்.
விந்தகம்#
இவை ஆண்களின் இனப்பெருக்க சுரப்பிகளாகும். விந்தகம் செமினிஃபெரஸ் குழல்கள், வீடிக் செல்கள், மற்றும் செர்டோலி செல்களைக் கொண்டுள்ளது. வீடிக் செல்கள் நாளமில்லாச் சுரப்பியாக செயல்படுகின்றன. இவை டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண் இனப்பெருக்க ஹார்மோனை சுரக்கின்றன.
டெஸ்டோஸ்டிரோனின் பணிகள்#
இது ஆண்களில் கீழ்க்கண்ட பணிகளைச் செய்கிறது.
- விந்து செல் உற்பத்தியில் பங்கேற்கிறது.
- புரத உற்பத்தியினைத் தூண்டி தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- இரண்டாம் நிலை பால் பண்புகளின் (உடல் மற்றும் முகத்தில் ரோமங்கள் வளர்தல், குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சிக்குக் காரணம் ஆகிறது.
அண்டகம்#
பெண் இனப்பெருக்கச் சுரப்பியான அண்டங்கள் பெண்களின் அடிவயிற்றில் இடுப்பெலும்புப் பகுதியில் அமைந்துள்ளன. இவை சுரக்கும் ஹார்மோன்கள்
அ) ஈஸ்ட்ரோஜன்,
ஆ) புரோஜஸ்டிரான்.
ஈஸ்ட்ரோஜன், வளர்ச்சியுறும் அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகின்றது. புரோஜஸ்டிரான், அண்டம் விடுபடும்போது பிரியும் ஃபாலிக்கிள்கள் உருவாக்கும் கார்ப்பஸ் லூட்டியத்தில் உற்பத்தியாகிறது.
ஈஸ்ட்ரோஜனின் பணிகள்#
- இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
- அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது.
- அண்ட ஃபாலிக்கிளின் செல்கள் முதிர்வடைவதைத் தூண்டுகிறது.
- இரண்டாம் நிலை பால் பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது.
புரோஜஸ்டிரானின் பணிகள்#
- இது கருப்பையில் நடைபெறும் முன் மாதவிடாய் கால மாற்றங்களுக்குக் காரணமாக உள்ளது.
- கரு பதிவதற்கு கருப்பையை தயார் செய்கிறது.
- கர்ப்ப காலத்தினைப் பராமரிக்கிறது.
- தாய்-சேய் இணைப்புத்திசு உருவாவதற்கு அவசியமாகிறது.
16.2.7 தைமஸ் சுரப்பி#
தைமஸ் சுரப்பி நாளமில்லாச் சுரப்பியாகவும் நிணநீர் உறுப்பாகவும் செயல்படுகின்றது. மார்பின் மேற்புறத்தில் மூச்சுக்குழலின் கீழ்ப்புறத்தை ஒட்டி அமைந்துள்ளது. இச்சுரப்பி தைமோசின் என்ற ஹார்மோனை சுரக்கிறது.
தைமோசினின் பணிகள்#
- நோய்த்தடைக்காப்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
- லிம்ஃபோசைட்டுகள் உருவாவதையும் வேறுபடுதலையும் தூண்டுகிறது.
நினைவில் கொள்க#
❖ ஆக்சின்கள் வேர் மற்றும் தண்டின் நுனியில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து நீட்சிப் பகுதிக்கு இடம்பெயர்கின்றன.
❖ சைட்டோகைனின்கள் தாவர செல்களில் செல் பகுப்பு அல்லது சைட்டோகைனிசிஸ் நிகழ்வை ஊக்குவிக்கின்றன.
❖ விதையிலாக் கனிகள் (பார்த்தினோகார்பிக் கனிகள்) உருவாவதை ஜிப்ரலின்கள் தூண்டுகின்றன.
❖ அப்சிசிக் அமிலம், உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஆகும். இது பல்வேறு வகையான இறுக்க நிலை காலங்களில் தாவரங்களின் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.
❖ எத்திலின், கனிகள் முதிர்ச்சி அடைவதிலும் பழுப்பதிலும் முக்கியப் பங்காற்றும் வாயு நிலை ஹார்மோன்.
❖ பிட்யூட்டரி சுரப்பி பிற நாளமில்லாச் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதால் இது “தலைமைச் சுரப்பி” என்றும் அழைக்கப்படுகிறது.
❖ தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள் ட்ரை அயோடோ தைரோனின் (T3), டெட்ரா அயோடோ தைரோனின் அல்லது தைராக்சின் (T4).
❖ பாராதார்மோன் இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.
❖ கணையச் செல்கள் இன்சுலின், குளுக்கோகான் ஆகியவற்றைச் சுரக்கின்றன. அவை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கின்றன.
❖ அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் கார்ட்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரான், அட்ரினல் மெடுல்லாவில் சுரக்கும் ஹார்மோன்கள் எபிநெப்ரின் மற்றும் நார்எபிநெப்ரின்.
❖ ஆண் இனப்பெருக்கச் சுரப்பியான விந்தகம் டெஸ்டோஸ்டீரானையும் பெண் இனப்பெருக்கச் சுரப்பியான அண்டச்சுரப்பி ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானையும் சுரக்கின்றது.
மதிப்பீடு#
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.#
ஜிப்ரலின்களின் முக்கிய விளைவு அ. மரபியல் ரீதியான குள்ளத் தாவரங்களைக் குள்ளமாக்குவது. ஆ. குள்ளத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது இ. வேர் உருவாவதை ஊக்குவிப்பது ஈ. இளம் இலைகள் மஞ்சளாவது
நுனி ஆதிக்கத்தின் மீது நேரடி விளைவை உருவாக்கும் ஹார்மோன் அ. சைட்டோகைனின் ஆ. ஆக்சின் இ. ஜிப்ரலின் ஈ. எத்திலின்
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை? அ. 2,4 D ஆ. \(GA_3\) இ. ஜிப்ரலின் ஈ. IAA
அவினா முனைக்குருத்து உறை ஆய்வு ______ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. அ. டார்வின் ஆ. N. ஸ்மித் இ. பால் ஈ. F.W. வெண்ட்
LH ஐ சுரப்பது அ) அட்ரினல் சுரப்பி ஆ) தைராய்டு சுரப்பி இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு ஈ) ஹைபோதலாமஸ்
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும். அ) பிட்யூட்டரி சுரப்பி ஆ) அட்ரினல் சுரப்பி இ) உமிழ்நீர் சுரப்பி ஈ) தைராய்டு சுரப்பி
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது? அ) கணையம் ஆ) சிறுநீரகம் இ) கல்லீரல் ஈ) நுண்ணுயிரீரல்
கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது? அ) பினியல் சுரப்பி ஆ) பிட்யூட்டரி சுரப்பி இ) தைராய்டு சுரப்பி ஈ) அட்ரினல் சுரப்பி
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.#
செல் நீட்சியடைதல், நுனி ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் ______ ஹார்மோன் ஆகும்.
தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் ______ ஆகும்.
இலைத் துளையை மூடச் செய்யும் ஹார்மோன் ______.
ஜிப்ரலின்கள் தாவரங்களில் ______ தன்மை நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை வினைவு கொண்ட ஹார்மோன் ______ ஆகும்.
உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது ______.
லாங்கர் ஹான்ஸ் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் ______ ஐச் சுரக்கிறது.
தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை ______ கட்டுப்படுத்துகிறது.
குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக ______ உண்டாகிறது.
III. பொருத்துக.#
| பகுதி I | பகுதி II | பகுதி III |
|---|---|---|
| ஆக்சின் | ஜிப்ரில்லா புஜிகுரோய் | உதிர்தல் |
| எத்திலின் | தேங்காயின் இளநீர் | கணுவிடைப் பகுதி நீட்சி |
| அப்சிசிக் அமிலம் | முனைக் குறுத்து உறை | நுனி ஆதிக்கம் |
| சைட்டோகைனின் | பசுங்கணிகம் | பழுத்தல் |
| ஜிப்ரலின்கள் | - | செல் பகுப்பு |
IV. சரியா அல்லது தவறா என எழுதவும். தவறாயின் சரியான கூற்றினை எழுதவும்.#
செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும்.
ஜிப்ரலின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன.
எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதைத் தடை செய்கின்றது.
எக்ஸாப்தல்மிக் காய்ப்பர், தைராக்சின் மிகைச் சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது.
பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளாக பிரிந்துள்ளது.
கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது.
V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள்.#
பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
கூற்று: சந்தைப்படுத்தப்படும் காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கடைமல் இருக்கச் செய்யும். காரணம்: சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்துகின்றன.
கூற்று: பிட்யூட்டரி சுரப்பி “தலைமை சுரப்பி” என்று அழைக்கப்படுகிறது. காரணம்: இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது.
கூற்று: டயாபடீஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. காரணம்: இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
VI. ஒரு வார்த்தைகளில் விடையளி.#
வெள்ளரியில் ஆண் மலர்கள் உற்பத்தியாவதைத் தூண்டும் ஹார்மோன் எது?
செயற்கை ஹார்மோன் ஒன்றின் பெயரினை எழுதுக.
தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன் எது?
குழந்தைப் பேற்றிற்குப்பின் பால் சுரக்க காரணமான ஹார்மோன் எது?
மனிதரில் நீர் மற்றும் தாதுஉப்புக்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் பெயரைக் கூறு.
மனிதர்களில் அவசர கால நிலைகளை எதிர் கொள்ள சுரக்கும் ஹார்மோன் எது?
செரித்தலுக்குரிய நொதிகளையும், ஹார்மோன்களையும் எந்த சுரப்பி சுரக்கிறது?
சிறுநீரகத்தோடு தொடர்புடைய பணிகளைச் செய்யும் ஹார்மோன்களின் பெயர்களைக் கூறு.
VII. மிகக் குறுகிய விடையளி.#
செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா தருக.
“போஷிங்” என்றால் என்ன? அதை எப்போது செயற்கையாக ஊக்குவிக்கலாம்?
அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக.
தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடைசெய்ய நீ என்ன செய்வாய்? தகுந்த காரணங்களுடன் கூறுக.
வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
நாளமுள்ள சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
பாராதார்மோனின் பணிகள் யாவை?
பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்த திசுக்களின் மேல் செயல் புரிகின்றன?
தைராய்டு ஹார்மோன்கள் ஏன் “ஆளுமை ஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகின்றன?
எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது? நாம் உட் கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
VIII. குறுகிய விடையளி.#
(அ) வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது? தாவரங்களில் அதன் மூன்று செயல்பாடுகளை எழுதுக. (ஆ) தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது? ஏன்?
வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் முனைக் குருத்து உறையின் நுனியில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஆய்வினை விவரி.
ஜிப்ரலின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
ஆண்டி டையூரிடிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?
IX. உயர் சிந்தனை திறன் வினாக்கள்#
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
(அ) ஜிப்ரலினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
(ஆ) அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
(இ) வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
ஜப்பானில் நெற்பயிரானது ஜிப்ரில்லா புஜிகுரோய் என்ற பூஞ்சையால் ஏற்பட்ட பக்கானே நோயினால் பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் இப்பூஞ்சை உற்பத்தி செய்த ஹார்மோன் என முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
(அ) இந்த செயல்முறையில் சம்பந்தப்பட்ட ஹார்மோனை அடையாளம் காண்க.
(ஆ) இந்த ஹார்மோனின் எந்த பண்பு இந்த நோயை உண்டாக்கியது?
(இ) இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக.
எசந்திலுக்கு, அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்ப நிலை உள்ளது. இந்நிலைக்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பியை அடையாளம் கண்டு அதில் சுரக்கும் எந்த ஹார்மோன், இந்நிலைக்குக் காரணம் எனக் கண்டறிந்து எழுதுக.
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான். தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?
சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக.
பிற நூல்கள்#
- Helgi Opik and Stephen Rolfe, The Physiology of Flowering Plants, Cambridge University Press.
- Berry AK, A Textbook of Endocrinology, 11th edition, Emkay Publications, New Delhi
- Prakash S Lohar, Endocrinology, Hormones and Human Health, MJP Publishers (TamilNadu Book House), Chennai