அலகு 13: உயிரினங்களின் அமைப்பு நிலைகள்#
கற்றல் நோக்கங்கள்#
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ அட்டை மற்றும் முயலின் புறஅமைப்பை பற்றி புரிந்துகொள்ளுதல்.
❖ இவ்வுயிர்களின் பல்வேறு வகையான உறுப்பு மண்டலங்களின் அமைப்புகளை அறிந்துகொள்ளுதல்.
❖ அட்டை மற்றும் முயலின் பல்வேறு உறுப்பு மண்டலங்களின் உடற் செயலியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.
❖ அட்டையின் ஒட்டுண்ணித் தகவமைப்புகளைக் கற்றல்.
❖ முயலின் பல்லமைப்பை அடையாளம் காணுதல் மற்றும் அதன் முக்கியத்துவத்தினை அறிதல்.
❖ முதுகெலும்பற்ற (அட்டை) மற்றும் முதுகெலும்புள்ள (முயல்) உயிரினங்களின் தோற்ற அமைப்பில் காணப்படும் வேறுபாடுகளை அறிந்துணர்தல்.
அறிமுகம்#
இந்த உயிர்க்கோளத்தில் காணப்படும் விலங்குகளின் அமைப்பு மற்றும் வாழ்முறைகளில் காணப்படும் பல்வகைத் தன்மை மிகுந்த ஆச்சரியப்படத் தக்கதாகவும், ஆர்வமூட்டக் கூடியதாகவும் உள்ளது. நம்மைச் சுற்றி நாம் காணக்கூடிய உயிரினங்கள் மிகச்சிலவே. ஆனால் இவ்வுலகில் எண்ணிலடங்கா விலங்கு சிற்றினங்கள் வாழ்ந்து வருகின்றன. விலங்குகளின் (Kingdom Animalia) என்பது முதுகுநாண் உள்ளதன் அடிப்படையில் முதுகுநாண் அற்றவை மற்றும் முதுகுநாணுள்ளவை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
புவியில் காணும் விலங்குகளிடையே அவற்றின் வாழ்முறை, வாழிடம், உருவ அமைப்பு மற்றும் இனப் பெருக்க முறை ஆகியவற்றில் மிகப்பெரும் அளவிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இப்பாடப்பகுதியில் ஒரு முதுகுநாணற்ற உயிரி (அட்டை) மற்றும் ஒரு முதுகெலும்புள்ள உயிரி (முயல்) ஆகியவற்றின் புறத்தோற்றம் மற்றும் உள்ளமைப்பியல் பற்றிக் கற்க உள்ளோம்.
அட்டையின் விலங்கியல் பெயர் Hirudinaria granulosa என்பதாகும். இதன் தொகுதி வளைத்தசைப்புழக்களைச் சார்ந்ததாகும். வளைத்தசைப் புழுக்கள் என்பவை உறுப்பு மண்டல அளவில் ஒருங்கமைப்புடைய, கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட, புழு போன்ற உடலமைப்புடைய, விலங்குகளாகும்.
Oryctolagus cuniculus – முயலின் விலங்கியல் பெயராகும். இதன் தொகுதி முதுகுநாணுள்ளவை மற்றும், வகுப்பு – பாலூட்டிகள் ஆகும். பாலூட்டிகளே விலங்கினத்தின் மிக உயர்ந்த வகுப்பாகும். மற்ற அனைத்து வகை விலங்குகளை விட மிகவும் மேம்பாடு அடைந்தவை இவ்வுயிரிகள். பாலூட்டிகளின் மிகச் சிறப்பானதொரு பண்பு பெண்ணின் உயிரிகளில் காணப்படும் பால் சுரப்பிகளே. இவ்வுயிரிகள் வெப்ப இரத்த உயிரிகள் மற்றும் உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும்.
அட்டை மற்றும் முயலின் புறத்தோற்றம், உள்ளமைப்பியல், உறுப்பு மண்டலங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடு பற்றி விரிவாகக் கற்போம்.
13.1 Hirudinaria granulosa (இந்தியக் கால்நடை அட்டை)#
வகைப்பாட்டு நிலை:#
தொகுதி : வளைத்தசைப் புழுக்கள்
வகுப்பு : விருடினியா
வரிசை : நேத்தோப்டெலிடா
பேரினம் : விருடினேரியா
சிற்றினம் : கிரானுலோசா
13.1.1 வாழிடமும், வாழ்முறையும்#
Hirudinaria granulosa (இந்திய கால்நடை அட்டை) இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இவ்வுயிரி நன்னீர் குளங்கள், ஏரிகள், தெப்பு நிலங்கள் மற்றும் சிற்றோடைகளில் வாழ்கிறது. இவை புற ஒட்டுண்ணிகளாகவும், மீன்கள், தவளைகள், கால்நடைகள் மற்றும் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் சங்கிடுவோரஸ் (இரத்த உறிஞ்சிகள்) வகையினவையாகவும் உள்ளன.
13.1.2 புற அமைப்பியல்#
அளவு மற்றும் உருவம்: அட்டையானது மென்மையான, புழு போன்ற, நீண்ட, கண்ட அமைப்புடைய உடலைக் கொண்டது. நீளும்போது நாடா போன்றும், சுருங்கும்போது உருண்டை போன்றும் தோன்றக்கூடியது. 35 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது.
நிற அமைப்பு: உடலின் முதுகுப் பகுதியானது ஆலிவ் பச்சை நிறமும், வயிற்றுப் பகுதியானது ஆரஞ்சு மஞ்சள் அல்லது ஆரஞ்சு சிவப்பு நிறமும் கொண்டது.
கண்ட அமைப்பு: மேட்டு மேட்டான கண்ட அமைப்பு உடலில் காணப்படுகிறது. அட்டையின் உடல் 33 கண்டங்கள் அல்லது மெட்டாமீட்டுகள் எனப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கண்டமும் மேற்புறமாக, கீழ்நோக்கி வளையங்கள் அல்லது அனுலியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க காலத்தில் கூடு (கக்கூன்) உருவாக்குவதற்கு 9 முதல் 11 ஆவது கண்டம் வரையில் காலர் போன்ற கனவலயம் உருவாகிறது.
உணர்வுறுப்புகள்: உடலின் முதுகுப்புறத்தில் முதல் ஐந்து கண்டங்களில் ஐந்து இணை கண்கள் உள்ளன. ஒவ்வொரு கண்டமும் பல புண்டப்புகளாலான உணர்வுறுப்புகளைக் கொண்டுள்ளன. வளைய உணர்வுறுப்புகள் ஒவ்வொரு வளையத்திலும், கண்ட உணர்வுறுப்புகள் ஒவ்வொரு கண்டத்தின் முதல் வளையத்திலும் காணப்படுகின்றன.
ஒட்டுறிஞ்சிகள்: அட்டையில் இரண்டு ஒட்டுறிஞ்சிகள் உள்ளன. உடலின் முன் முனையில் உள்ள ஒட்டுறிஞ்சி முன் ஒட்டுறிஞ்சி அல்லது வாய் ஒட்டுறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது உடலின் வயிற்றுப்பகுதியில், முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்து அமைந்துள்ளது. உடலின் இறுதி ஏழு கண்டங்கள் ஒன்றிணைந்து பின் ஒட்டுறிஞ்சியை உருவாக்குகின்றன. இரு ஒட்டுறிஞ்சிகளும் ஒட்டிக் கொள்ளவும், இடப்பெயர்ச்சிக்கும் பயன்படுகின்றன. முன் ஒட்டுறிஞ்சியானது உணவூட்டத்திற்கும் உதவுகிறது.
புறத்துளைகள்:
i. வாய்: முன் ஒட்டுறிஞ்சியின் மையத்தில் வாய் காணப்படுகிறது.
ii. மலத்துளை: சிறுதுளையானது 26-ஆவது கண்டத்தின் முதுகுப்புற மைய (Mid-dorsal) பகுதியில் திறக்கிறது.
iii. நெஃப்ரீடியத் துளைகள்: நெஃப்ரீடியங்கள் 17 இணை நெஃப்ரீடியத் துளைகள் மூலம் உடலின் வெளிப்பகுதியில் திறக்கின்றன. இத்துளைகள் 6 முதல் 22 வரையிலான கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்தின் கண்டச் சந்தி வளையத்தின் வயிற்றுப்பகுதியிலும் காணப்படுகின்றன.
iv. ஆண் இனப்பெருக்கத் துளை: இத்துளை 10 ஆவது உடற் கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களின் வயிற்றுப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.
v. பெண் இனப்பெருக்கத்துளை: இது 11 ஆவது கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களின் வயிற்றுப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.
செயல்பாடு
உம் பள்ளியின் உயிரியல் ஆய்வகத்திலுள்ள அட்டையின் பாதுகாக்கப்பட்ட மாதிரியைக் கொண்டு, அதன் புறத்தோற்றத்தை உற்று நோக்குக.
அட்டையை அறுவை செய்யும் நிகழ்வை கணினியில் காண்க.
இந்தியாவில் அட்டைகள் எந்தப் புவிப்பரப்பில் பெருமளவு காணப்படுகின்றன?
13.1.3 உடற்பகுப்பு#
| பகுதிகள் | கண்டங்கள் |
|---|---|
| தலைப் பகுதி | முதல் ஐந்து கண்டங்கள் (1 - 5) வரை |
| முன் கிளைடெல்லப் பகுதி | 6, 7 மற்றும் 8 ஆவது கண்டங்கள் வரை |
| கிளைடெல்லப் பகுதி | 9, 10 மற்றும் 11 ஆவது கண்டங்கள் வரை |
| நடுப்பகுதி | 12 முதல் 22 வரை |
| பின் அல்லது வால் பகுதி | 23 முதல் 26 வரை |
| பின் ஒட்டுறிஞ்சிப் பகுதி | 27 முதல் 33 வரை |
13.1.4 உடற்கவர்#
அட்டையின் உடற்கவர் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. அவை:
கியூட்டிக்கிள் - வெளி அடுக்கு
புறத்தோல் - கியூட்டிக்கிளை ஒட்டி அடியில் காணப்படுவது
தோல் - புறத்தோலுக்கு அடியில் காணப்படுவது; இணைப்புத் திசுவால் ஆனது.
தசை அடுக்கு - வட்ட மற்றும் நீளவாட்டுத் தசைகளால் ஆனது
போர்பியாய்டல் திசு - நீள் தசைகளுக்குக் கீழே உள்ளது. உணவுக் குழாயைச் சுற்றி, உடற்குழி முழுவதும் நிரம்பியுள்ளது.
13.1.5 இடப்பெயர்ச்சி#
அட்டை, தளத்தில் (1) வளைதல் அல்லது ஊர்தல் முறையிலும், நீரில் (2) நீந்துதல் முறையிலும் இடப்பெயர்ச்சி செய்கிறது.
1) வளைதல் அல்லது ஊர்தல் இயக்கம்#
இவ்வகை இயக்கமானது தசைகளின் சுருக்கம் மற்றும் நீளுதல் மூலம் நடைபெறுகிறது. இவ்வியக்கத்தின்போது ஒட்டிக்கொள்வதற்கு இரு ஒட்டுறிஞ்சிகளும் உதவுகின்றன.
2) நீந்துதல் இயக்கம்#
அட்டையானது நீரில் மிகுந்த செயலாக்கத்துடன் நீந்தி, அலை இயக்கத்தை மேற்கொள்கிறது.
13.1.6 சீரண மண்டலம்#
அட்டையின் சீரண மண்டலமானது நீண்ட உணவுப் பாதையையும், சீரண சுரப்பிகளையும் கொண்டது.
உணவுக்குழல்
அட்டையின் உணவுப்பாதை வாய் முதல் மலத்துளை வரை நீண்டுள்ள நேரான குழலாகும். மூன்று ஆரத் துளையான வாய், முன் ஒட்டுறிஞ்சியின் மையப்பகுதியில் அமைந்து, சிறிய வாய்க்குழியினுள் நீள்கிறது. வாய்க்குழியின் சுவரானது, ஒரு வரிசையிலமைந்த நுண்ணிய பற்களைக் கொண்ட மூன்று தாடைகளைப் பெற்றுள்ளது. உமிழ்நீர்ச் சுரப்பிகளின் திறப்புகளைக் கொண்ட பாப்பிலாக்களும் தாடைகளில் உள்ளன. வாயும், வாய்க் குழியும் முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்துள்ளன.
வாய்க்குழி, தசையாலான தொண்டையினுள் நீள்கிறது. தொண்டையைச் சுற்றிலும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் அமைந்துள்ளன. இரத்தம் உறைந்துபோவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் உள்ளது. தொண்டையானது குறுகிய, குட்டையான உணவுக்குழாய் மூலம் தீனிப்பையுடன் இணைகிறது.
உணவுப்பாதையின் மிகப்பெரிய பகுதி தீனிப்பை ஆகும். இது தொடர்ச்சியாக அமைந்த 10 அறைகளைக் கொண்டது. இவ்வறைகள் வட்டத் துளைகள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன. இத்துளைகள் சுருக்கத்தசைகளால் சூழப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையின் பக்கவாட்டிலும், பின்னோக்கி நீண்ட, குமிழ் போன்ற குடல்வால்கள் அல்லது கேக்காக்கள் அமைந்துள்ளன. மெதுவாக செரிப்பதற்காக தீனிப்பையும், அதன் குடல்வாலும் அதிகளவு உறிஞ்சப்பட்ட உணவான இரத்தத்தை சேமித்து வைத்துக் கொள்கின்றன.
தீனிப்பையின் கடைசி அறையானது வயிற்றினுள் திறக்கிறது. வயிறு சிறிய நேரான குடலாகத் தொடர்ந்து, மலக்குடலில் திறக்கிறது. மலக்குடல் மலத்துளை வழியே உடலின் வெளிப்புறத்தில் திறக்கிறது.
உணவு, உணவூட்டம், சீரணம்
அட்டை, கால்நடைகள் மற்றும் பிற வீட்டு விலங்குகளின் இரத்தத்தை உணவாகப் பெறுகிறது. உணவூட்டத்தின்போது அட்டை அதன் பின் ஒட்டுறிஞ்சி மூலம் விருந்தோம்பியின் உடலில் உறுதியாக ஒட்டிக்கொள்கிறது. வாய்க்கு வெளிப்புறமாக துருத்திக் கொண்டுள்ள தாடைகளின் மூலம் விருந்தோம்பியின் தோலில் மூன்று ஆர அல்லது Y வடிவ காயத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் தசையாலான தொண்டை மூலம் இரத்தத்தை உறிஞ்சுகிறது. உமிழ்நீர் இதன் மீது கொட்டப்படுகிறது.
சீரணமாகாத உணவான இரத்தம் தீனிப்பை அறைகளிலும், குடல்வாலிலும் சேமிக்கப்படுகிறது. தீனிப்பையிலிருந்து சுருக்குத்துளைகள் மூலம் வயிற்றுக்கு இரத்தமானது, சொட்டு சொட்டாக அனுப்பப்படுகிறது. புரதச் சீரண நொதி மூலம் வயிற்றில் சீரணம் நடைபெறுகிறது. செரிக்கப்பட்ட இரத்தத்தை குடல் மெதுவாக உறிஞ்சிக்கொள்கிறது. செரிக்கப்படாத உணவு மலக்குடலில் சேமிக்கப்பட்டு, மலத்துளை வழியாக வெளியேற்றப்படுகிறது.
மேலும் தெரிந்து கொள்வோம்
❖ அட்டைகளுக்கு காது இல்லை, அவை அதிர்வுகளைத் தோல் மூலம் உணர்கின்றன.
❖ அட்டைகள் 2 முதல் 10 சிறிய கண்கள் மூலம் உணவை அடையாளம் காண்கின்றன.
❖ அட்டை தமது உடல் எடையைப் போன்று ஐந்து மடங்கு அதிக இரத்தத்தை உறிஞ்சும் அளவுக்குப் பெரும் பசி கொண்டவை.
❖ அட்டை தனது முழு உணவையும் செரித்து, உறிஞ்சிக் கொள்ள ஓராண்டுக்கும் மேலாகிறது.
அட்டவணை 13.1 அட்டையின் கண்ட அமைப்பு
| பரு மற்றும் அக அமைப்புகள் | காணப்படும் கண்டங்கள் |
|---|---|
| கண்ட அமைப்பு | 33 கண்டங்கள் |
| முன் ஒட்டுறிஞ்சி, வாய், கண்கள் | 1 முதல் 5 வரையான கண்டங்கள் |
| பின் ஒட்டுறிஞ்சி | 27 முதல் 33 வரையான கண்டங்கள் |
| தொண்டை | 5 முதல் 8 வரையான கண்டங்கள் |
| தீனிப்பை | 9 முதல் 18 வரையான கண்டங்கள் |
| வயிறு | 19 ஆவது கண்டம் |
| குடல் | 10 முதல் 22 வரையான கண்டங்கள் |
| மலக்குடல் | 23 முதல் 26 வரையான கண்டங்கள் |
| மலத்துளை | 26 ஆவது கண்டம் |
| நெஃப்ரீடியத் துளைகள் | 6 முதல் 22 வரையான கண்டங்கள் |
| ஆண் இனப்பெருக்கத் துளை | 10 ஆவது கண்டம் |
| பெண் இனப்பெருக்கத் துளை | 11 ஆவது கண்டம் |
13.1.7 சுவாச மண்டலம்#
அட்டையில் தோல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது. புறத்தோல் செல்களுக்கு இடையே, மெல்லிய இரத்தக் குழல் தந்துகிகளைக் கொண்ட நெருக்கமான வலையமைப்பு காணப்படுகிறது. இத் தந்துகிகளினுள் இரத்த உடற்குழி திரவம் நிரம்பியுள்ளது. சுவாச வாயுக்களின் பரிமாற்றம் பரவல் முறையில் நிகழ்கிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் தோல் மூலம் இரத்த உடற்குழி திரவத்தினுள் பரவுகிறது. அதே வழியில் கார்பன் டைஆக்சைடு உடலுக்கு வெளியே பரவுகிறது. கோழைச் சுரப்பு மூலம் தோலானது ஈரமாகவும், வழவழப்பாகவும் வைக்கப்படுகிறது. மேலும் இது உடல் உலர்ந்து போவதிலிருந்து பாதுகாக்கிறது.
13.1.8 சுற்றோட்ட மண்டலம்#
இரத்த உடற்குழி மண்டலம் மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது. உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை. இரத்தக்குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழிக் கால்வாய்கள் அமைந்துள்ளன. இந்த உடற்குழி திரவமானது வெள்ளையணு போன்ற ரத்தக் குழிய அணுக்களைக் கொண்டுள்ளது.
சுற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன. ஒரு கால்வாய் உணவுப்பாதையின் மேல் புறமாகவும், மற்றொரு கால்வாய் உணவுப் பாதையின் கீழ்ப்புறமாகவும் அமைந்துள்ளது. ஏனைய இரு கால்வாய்களும் உணவுப்பாதையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இவ்விரு கால்வாய்களும் உட்புறம் வால்வுகளைக் கொண்டு, இதயம் போன்று செயல்படுகின்றன. நான்கு கால்வாய்களும் கீழ்ப்புறத்தில் 26 ஆவது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.
13.1.9 நரம்பு மண்டலம்#
அட்டை மைய, பக்கவாட்டு மற்றும் பரிவு நரம்பு மண்டலங்களைக் கொண்டுள்ளது. மைய நரம்பு மண்டலம் நரம்பு வளையம் மற்றும் ஓரிணை வயிற்றுப்புற நரம்புத் தொடரைப் பெற்றுள்ளது. நரம்பு வளையமானது தொண்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இது தொண்டைக்கு மேல் நரம்புத்திரள் (மூளை), தொண்டைச் சுற்று நரம்பு இணைப்பு மற்றும் தொண்டைக்கு கீழ் நரம்புத் திரள் ஆகியவற்றை உள்ளடக்கியது. தொண்டைக்கு கீழ் நரம்புத்திரள் தொண்டையின் அடிப்பகுதியில் – நான்கு இணை நரம்புத் திரள்களின் இணைவால் உருவாகியுள்ளது.
13.1.10 கழிவு நீக்க மண்டலம்#
அட்டையில் கழிவு நீக்கமானது நெஃப்ரீடியா எனப்படும் கண்டவாரியாக அமைந்த, சிறிய சுருண்ட, இணை குழல்கள் மூலம் நடைபெறுகிறது. 17 இணை நெஃப்ரீடியங்கள் உள்ளன. இவை 6 முதல் 22 வரையான கண்டங்களில் அமைந்து நெஃப்ரீடியத்துளைகள் மூலம் வெளித்திறக்கின்றன.
13.1.11 இனப்பெருக்க மண்டலம்#
அட்டை ஓர் இருபால் உயிரி. ஏனெனில் ஒரே உயிரியில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலங்கள் உள்ளன.
ஆண் இனப்பெருக்க மண்டலம்
12 ஆவது கண்டம் முதல் 22 ஆவது கண்டம் வரை ஒவ்வொரு கண்டத்திலும் ஓரிணை விந்தகங்கள் உள்ளன. அவை விந்துப் பைகள் எனப்படும் முட்டை வடிவப் பைகளாக உள்ளன. ஒவ்வொரு விந்தகத்திலிருந்தும் விந்து வெளிச் செலுத்தும் நாளம் எனும் சிறிய குழாய் மேலெழும்பி, அப்பகுதியிலுள்ள விந்து நாளத்துடன் இணைகிறது. இவ்விந்து நாளமானது மிக அதிக சுருள்களைப் பெற்று, விந்து முதிர்ச்சிப் பை அல்லது எபிடிடிமிஸ் ஆக தோன்றுகிறது. விந்து நாளத்திலிருந்து பெறப்படும் விந்தணுக்கள் மெதுவாக இப்பையில் பயணப்படுகிறது. எபிடிடிமிஸ் சிறிய வெளியேற்றும் குழாயாகத் தொடர்கிறது. இருபக்க வெளியேற்றும் குழாய்களும் ஒன்றாக இணைந்து, இனப்பெருக்க அமைப்பாகத் தோன்றுகின்றன. இவ்வமைப்பானது இரு பகுதிகளைக் கொண்டது. அவை 1) சுருண்ட புரோஸ்டேட் சுரப்பிகள் மற்றும் 2) ஆண் குறியைக் கொண்ட பினியல் பை. ஆண்குறி ஆண் இனப்பெருக்கத் துளை மூலம் வெளித்திறக்கிறது.
பெண் இனப்பெருக்க மண்டலம்
இம் மண்டலம் அண்டகங்கள், அண்டக் குழல்கள், பொது அண்ட நாளம் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பை (யோனி) கொண்டுள்ளது. 11 ஆவது கண்டத்தின் வயிற்றுப் பகுதியில் ஓரிணை அண்டகங்கள் உள்ளன. ஒவ்வொரு அண்டகமும் சுருண்ட நாடா போன்ற அமைப்புடையது. அண்டகத்திலிருந்து அண்டங்கள் (சினைமுட்டைகள்) விடுவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அண்டகத்திலிருந்தும் ஒரு சிறிய அண்டக் குழல் உருவாகிறது. இரு பக்க அண்டக் குழல்களும் இணைந்து ஒரு பொது அண்ட நாளமாகிறது. இப்பொழுது அண்ட நாளமானது பேரிகாய் வடிவ யோனியினுள் திறக்கிறது. யோனி 11 ஆவது கண்டத்தின் பின்புறத்தில் வயிற்றுப்புற மையப் பகுதியில் அமைந்துள்ளது.
கரு வளர்ச்சி
இரு பாலின சேர்க்கையில் கரு உருவாதல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கக்கூன் உருவாகிறது. கக்கூன் முட்டைக் கூடு எனப்படும். இது 9, 10 மற்றும் 11 ஆவது கண்டங்களைச் சுற்றி உருவாகிறது.
கரு வளர்ச்சி நேரடியானது. முட்டைக் கூட்டினுள் 1 முதல் 24 கருக்கள் வளர்கின்றன.
முதிர்ந்த அட்டையைப் போன்ற தோற்றம் கொண்ட இளம் அட்டைகள் வெளிவருகின்றன.
அட்டையின் மருத்துவப் பயன்கள்
அட்டைகள் இரத்த உறைவைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்துவதில் செயல்திறன் மிக்கவை. சுற்றோட்டக் குறைபாடுகளையும், இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பான நோய்களையும் அட்டைகள் குணப்படுத்துகின்றன. மேலும் அட்டையின் உமிழ்நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
13.1.12 அட்டையின் ஒட்டுண்ணித் தகவமைப்புகள்#
அட்டைகள் முதுகெலும்பிகள் இரத்தத்தை உறிஞ்சி, ஒட்டுண்ணி வாழ்க்கை முறையை மேற்கொள்வதால் அவற்றின் உடலமைப்பில் பல்வேறு மாறுபாடுகளைப் பெற்றுள்ளன.
தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.
உடலின் இரு முனைகளிலும் உள்ள ஒட்டுறிஞ்சிகள் அட்டையை விருந்தோம்பியுடன் உறுதியாக இணைத்துக் கொள்ளப் பயன்படும் கவ்வும் உறுப்புகளாகச் செயல்படுகின்றன.
அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத Y – வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.
உமிழ்நீர்ச் சுரப்பிகள் உருவாக்கும் ஹிருடின் என்ற பொருள் இரத்தத்தை உறைய விடுவதில்லை. எனவே தொடர்ச்சியாக இரத்தம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
பக்கக் கால்களும் (parapodia) மயிர்க் கால்களும் (Setae) காணப்படுவதில்லை. ஏனெனில் இவ்வுறுப்புகள் எந்த வகையிலும் தேவையில்லை.
தீனிப்பையில் இரத்தம் சேமிக்கப்படுகிறது. இது அட்டைக்கு பல மாதங்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதன் காரணமாக சீரண நீரோ, நொதிகளோ அதிக அளவில் சுரக்க வேண்டிய தேவையில்லை.
இரத்தத்தை வழிய விடுதல் என்பது நோயாளியின் உடலிலிருந்து நச்சு, அசுத்தப் பொருள்களை வெளியேற்றும் ஒரு நுட்பமாகும்.
13.2 Oryctolagus cuniculus – முயல்#
வகைப்பாட்டு நிலை#
தொகுதி : முதுகுநாணிகள்
துணைத் தொகுதி : முதுகெலும்பிகள்
வகுப்பு : பாலூட்டிகள்
வரிசை : லகோமார்ஃபா
பேரினம் : ஓரிக்டோலேகஸ்
சிற்றினம் : கியூனிகுலஸ்
13.2.1 வாழிடமும், வாழ்முறையும்#
முயல் ஒரு சாந்தமான மற்றும் பயந்த சுபாவமுள்ள விலங்காகும். இது வளைகளில் வாழும். தாவி இடம் பெயரக்கூடிய இவ்விலங்குகள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இவை புல் மற்றும் முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறிகளையும், கீரைகளையும் உண்கின்றன. இவை கூட்டமாக வாழும் இயல்புடையவை.
குள்ள முயலானது அழியும் அபாய நிலையிலுள்ள விலங்கு என 1990 இல் வாஷிங்டனில் பட்டியலிடப்பட்டது. வாழிட இழப்பால் இம்முயலின் எண்ணிக்கையும், பரவலும் குறைந்து போனதே இதற்குக் காரணம். மார்ச் 2003 இல் கொலம்பியா வடநில குள்ள முயல் அழியும் நிலையிலுள்ள விலங்கு என அறிவிக்கப்பட்டது.
13.2.2 புறத்தோற்றம்#
அளவு, வடிவம் மற்றும் நிறம்: முயலானது நீண்ட, சிறிய உருளை வடிவ உடலைக் கொண்டது. ஆண் மற்றும் பெண் முயல்கள் ஒரே அளவுடையவை. இவை சுமார் 45 செ.மீ நீளமும், சுமார் 2.25 கிலோ எடையும் பெறும் அளவுக்கு வளர்பவை. வெள்ளை, கருப்பு மற்றும் வெள்ளை நிறம் உட்பட பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க உரோமங்களால் மூடப்பட்டுள்ளது.
உடற்பிரிவுகள்: முயலின் உடலானது தலை, கழுத்து, உடல் மற்றும் வால் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
தலை: தலை முட்டை வடிவமானது. பிளவுபட்ட முகவாய்களுடையதிலையில் வாய், நாசித்துளைகள், கண்கள், காதுகள் மற்றும் உணர் உரோமங்கள் உள்ளன. வாய் மேலுதடு மற்றும் கீழுதடு கொண்ட பிளவை உள்ளது. வாய்க்கு சற்று மேலே சாய்வான துளைகளாக இரு நாசித்துளைகள் உள்ளன. மேலுதட்டின் இரு புறம் உணர் உரோமங்கள் அல்லது மீசைகள் (Vibrissae) வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. அசையக்கூடிய, பெரிய இரு புறச்செவி அல்லது செவி மடல்கள் தலையின் மேல் பகுதியில் காணப்படுகின்றன.
கழுத்து: தலையை உடலுடன் கழுத்து இணைக்கிறது. இது தலையைத் திருப்புவதற்கு உதவுகிறது.
உடல்: உடலின் முன்பகுதி மார்பு எனவும், பின்பகுதி வயிறு எனவும் பகுக்கப்பட்டுள்ளது. பெண் உயிரிகளில் மார்புக்கும், வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் நான்கு அல்லது ஐந்து மார்புக் காம்புகள் அல்லது பால் காம்புகள் காணப்படுகின்றன.
உடலில் ஐந்து விரல்களைக் கொண்ட இரு இணை கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. முன்னங் கால்கள் பின்னங்கால்களை விடக் குட்டையானவை. அனைத்து விரல்களிலும் வளை நகங்கள் காணப்படுகின்றன.
வயிற்றின் இறுதியில், வாலின் அடியில் மலத்துளை உள்ளது. பெண் விலங்குகளின் வயிற்றுப்பகுதியில் சிறு பிளவு போன்ற பெண்குறி உள்ளது. ஆண் விலங்குகளில் மலத்துளையின் அருகே வயிற்றுப்புறத்தில் ஆண் குறி அமைந்துள்ளது. ஆண்குறியின் இருமுனையும் தொடையுடன் இணைந்த விந்துப்பைகளை உள்ளன. விந்துப்பைகளின் உள்ளே விந்தகங்கள் உள்ளன.
வால்: வால் குட்டையானது. இது மற்ற முயல்களுக்கு அபாய மசைக்களை வழங்க உதவுகிறது.
புறத்தோல்
உடலின் வெளிப்புறம் புறத்தோலால் சூழப்பட்டுள்ளது. உரோமம், வளை நகங்கள், வியர்வைச் சுரப்பிகள், எண்ணெய் சுரப்பிகள், பால் சுரப்பிகள் ஆகியவை புறத்தோலின் மாறுபாடுகளாகும். பால் சுரப்பி தோலின் மாறுபாடாகும். இது சுரக்கும் பால் முயல் குட்டிகளின் உணவாகிறது. வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் உடல் வெப்பநிலையைப் பராமரிக்கின்றன.
13.2.3 உடற்குழி#
முயல் ஒரு உண்மையான உடற்குழியுடைய விலங்கு. உடலின் உட்பகுதி குறுக்கத் தடுப்பான உதரவிதானம் மூலம் மார்பறையாகவும், வயிற்றறையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. உதரவிதானம் பாலூட்டிகளில் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்புப் பண்பாகும். உதரவிதானத்தின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் சுவாச இயக்கங்கள் நடைபெறுகின்றன.
மார்பறையில் இதயமும், நுரையீரல்களும் அமைந்துள்ளன. வயிற்றறையில் சீரண, கழிவு நீக்க மற்றும் இனப்பெருக்க மண்டலங்கள் அமைந்துள்ளன.
13.2.4 சீரண மண்டலம்#
சீரண மண்டலம் உணவுப் பாதை மற்றும் சீரண சுரப்பிகளை உள்ளடக்கியது. உணவுப்பாதையில் வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக்குழாய், இறைப்பை, சிறுகுடல், குடல் நீட்சி, பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
வாய்க்குழியானது தொண்டையின் மூலமாக உணவுக்குழாயாகத் தொடர்கிறது. உணவுக்குழாய் இறைப்பையினுள் திறக்கிறது. இறைப்பையைத் தொடர்ந்து சிறுகுடல் அமைந்துள்ளது. மெல்லிய சுவருடைய குடல்வால் நீட்சி, சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்குமிடத்தில் காணப்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா, செல்லுலோஸைச் செரிக்க உதவுகிறது. சிறுகுடல் பெருங்குடலாகத் தொடர்கிறது. பெருங்குடலில் கோலன் மற்றும் மலக்குடல் என்ற இரு பகுதிகள் உள்ளன. மலக்குடல் மலத்துளை மூலம் வெளித் திறக்கிறது.
சீரணச் சுரப்பிகள்
உமிழ்நீர்ச் சுரப்பிகள், இரைப்பைச் சுரப்பிகள், கணையம், கல்லீரல் மற்றும் சிறுகுடல் சுரப்பிகள் போன்றவை சீரணச் சுரப்பிகளாகும். இச்சுரப்பிகள் சுரக்கும் நொதிகள் உணவுப் பாதையில் உணவின் செரிமானத்திற்குத் துணை புரியும்.
முயலின் பல்வமைப்பு
பற்கள் கடினமான, எலும்பு போன்ற அமைப்புகள். இவை உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மெல்லுவதற்கும், அரைப்பதற்கும் பயன்படுகின்றன. முயல் தன் வாழ்நாளில் இரு தொகுதி பற்களைப் பெறுகிறது. இவ்வாறு ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் காணப்படும் நிலை ‘இரு முறை தோன்றும் பல்வமைப்பு’ எனப்படுகிறது. முயலின் பற்கள் வெவ்வேறு வகையின். இத்தகைய பல்வமைப்புக்கு ‘மாறுபட்ட பல்வமைப்பு’ என்று பெயர். பாலூட்டிகளில் நான்கு வகைப் பற்கள் காணப்படுகின்றன. அவை வெட்டும் பற்கள் (I), கோரைப் பற்கள் (C), முன் கடைவாய்ப் பற்கள் (PM) மற்றும் பின்கடைவாய்ப் பற்கள் (M) ஆகும். இவை பல் வாய்ப்பாட்டின் மூலம் குறிக்கப்படுகின்றன.
ஒரு பாலூட்டியில் காணப்படும் பற்களைப் பற்றி சுருக்கமாக எழுதும் முறையே பல் வாய்ப்பாடு ஆகும். ஒரு பாலூட்டியின் மேல் மற்றும் கீழ்த் தாடைகளின் ஒரு பக்கத்தில் மட்டும் காணப்படும் வெவ்வேறு வகைப் பற்களின் எண்ணிக்கையை இது குறிக்கிறது.
முயலின் பல் வாய்ப்பாடு:
\[ I \frac{2}{1}, C \frac{0}{0}, PM \frac{3}{2}, M \frac{3}{3} \]இது பின்வருமாறு எழுதப்படும்:
\[ \frac{2}{1}, \frac{0}{0}, \frac{3}{2}, \frac{3}{3} \]முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.
முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டையாஸ்டீமா அல்லது பல் இடைவெளி என அழைக்கப்படுகிறது. மெல்லும் போதும், அரைக்கும்போதும் உணவைக் கையாளுவதற்கு இந்த பல் இடைவெளி பயன்படுகிறது.
13.2.5 சுவாச மண்டலம்#
முயலில் சுவாசம் ஓரிணை நுரையீரல்களால் நிகழ்த்தப்படுகிறது. இணை மென்மையான பஞ்சு போன்ற திசுக்களால் ஆக்கப்பட்டு, மார்புக் கூட்டினுள் வைக்கப்பட்டுள்ளன. மார்பறையானது முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடராலும், வயிற்றுப்புறத்தில் மார்பெலும்பாலும், பக்கவாட்டில் விலா எலும்புகளாலும் சூழப்பட்டுள்ளது. மார்பறையின் கீழ்ப்பகுதியில் குவிந்த உதரவிதானம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு நுரையீரலும் புளூரா என்ற இரட்டைச் சவ்வுகளால் ஆன உறையால் சூழப்பட்டுள்ளது. வெளிப்புறக் காற்று, நாசித்துளைகள் வழியாக சுவாசப் பாதையில் நுழைந்து தொண்டையை அடைகிறது. தொண்டையிலிருந்து குரல்வளை வழியாக மூச்சுக் குழாயினுள் காற்று நுழைகிறது. மூச்சுக் குழாயின் மேற்பகுதி அகன்று குரல் பெட்டியாக மாறியுள்ளது. இது லேரிங்ஸ் எனப்படும். இக் குரல்பெட்டியின் சுவர் நான்கு குருத்தெலும்புத் தகடுகளால் வலுவூட்டப் பெற்றுள்ளது. குரல்பெட்டியிலுள்ள உள்ள குரல் நாண்கள் அதிர்வடைவதால் ஒலி உருவாகிறது. குரல்பெட்டி டிரக்கியா அல்லது மூச்சுக் குழாயாகத் தொடர்கிறது.
மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன. உணவானது குரல்வளை வழியாக மூச்சுக் குழாயினுள் செல்வதை குரல்வளை முடி தடுக்கிறது. மூச்சுக்குழாய் மார்புப் பகுதியை அடைந்ததும் இரு மூச்சுக் கிளைக் குழல்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கிளைக்குழலும் ஒரு நுரையீரலினுள் நுழைகிறது. இம் மூச்சுக் கிளைக் குழல்கள் மூச்சு நுண்கிளைக் குழல்களாகப் பிரிந்து, காற்று நுண்ணறைகளில் முடிகிறது.
சுவாச நிகழ்வுகள் உட்குவாசம் (காற்றை உள்ளிழுத்தல்) மற்றும் வெளிச்சுவாசம் (காற்றை வெளித்தள்ளுதல்) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்நிகழ்வுகள் மூலம் வாயு பரிமாற்றம் நிகழ்கிறது. உட்குவாசம் ஒரு செயல்மிகு நிகழ்வாகும். ஆனால் வெளிச்சுவாசம் ஒரு மந்த நிகழ்வாகும்.
13.2.6 சுற்றோட்ட மண்டலம்#
முயலின் சுற்றோட்ட மண்டலம் இரத்தம், இரத்தக் குழாய்கள் மற்றும் இதயம் ஆகியவற்றைக் கொண்டது. இதயம் பேரிக்காய் வடிவத்தில் மார்பறையினுள் இரு நுரையீரல்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதயம் பெரிகார்டியம் என்ற இரட்டைச் சவ்வுகளால் ஆன உறையால் சூழப்பட்டுள்ளது.
இதயம் இரு ஆரிக்கிள்கள் மற்றும் இரு வென்ட்ரிக்கிள்கள் என நான்கு அறைகளைக் கொண்டது. வலது மற்றும் இடது ஆரிக்கிள்கள், ஆரிக்கிளின் இடைத்தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வலது மற்றும் இடது வென்ட்ரிக்கிள்கள், வென்ட்ரிக்கிளின் இடைத்தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன. வலது ஆரிக்குலோ- வென்ட்ரிக்குலார் துளை மூலம் வலது ஆரிக்கிளின், வலது வென்ட்ரிக்கிளினுள் திறக்கிறது. இத்துளை மூவிதழ் வால்வினால் காக்கப்படுகிறது. இடது ஆரிக்கிளின், இடது வென்ட்ரிக்கிளினுள் இடது ஆரிக்குலோ - வென்ட்ரிக்குலார் துளை மூலம் திறக்கிறது. இத்துளையை ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு காக்கிறது. நுரையீரல் வளைவு மற்றும் பெருந்தமனி திறக்கும் இடங்களில் அரைச்சந்திர வால்வுகள் உள்ளன.
இரு மேற்பெருஞ்சிரைகள் (முன்கேவல் சிரைகள்) மற்றும் ஒரு கீழ்பெருஞ்சிரை (பின்கேவல் சிரை) மூலம் உடலின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் ஆக்சிஜன் நீக்கம் பெற்ற இரத்தத்தை வலது ஆரிக்கிளின் பெறுகிறது. இடது ஆரிக்கிளின், நுரையீரல் சிரைகள் மூலம் நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தைப் பெறுகிறது. வலது வென்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்கிறது. இடது வென்ட்ரிக்கிளிலிருந்து சிஸ்டமிக் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறது.
13.2.7 நரம்பு மண்டலம்#
முயலின் நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலம் (CNS), புறவமைவு நரம்பு மண்டலம் (PNS) மற்றும் தானியங்கு நரம்பு மண்டலம் (ANS) ஆகியவற்றை உள்ளடக்கியது.
மைய நரம்பு மண்டலத்தில் மூளையும், தண்டுவடமும் அடங்கியுள்ளன. புறஅமைவு நரம்பு மண்டலத்தில் 12 இணை மூளை நரம்புகளும், 37 இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன. தானியங்கு நரம்பு மண்டலமானது மேலும் பரிவு மற்றும் இணைப் பரிவு நரம்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மூளை மண்டையோட்டினுள் அமைந்துள்ளது. இது மூன்று சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது. வெளிச்சவ்வு டியூராமேட்டர் எனவும், உட்சவ்வு பயாமேட்டர் எனவும், இடைச்சவ்வு அரக்கனாயிட் உறை எனவும் அழைக்கப்படுகின்றன. மூளையானது முன்மூளை, நடுமூளை மற்றும் பின்மூளை எனப் பிரிக்கப்படுகிறது. முன்மூளை ஓரிணை நுகர்ச்சிக் கதுப்புகள், பெருமூளை அரைக்கோளங்கள் மற்றும் டைன்செஃபலான் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. பெருமூளை அரைக்கோளங்கள் இரண்டும் கார்பஸ் காலோசம் எனும் குறுக்கு நரம்புப் பட்டையால் இணைக்கப்பட்டுள்ளன. நடுமூளை, பார்வை அரைக்கோளங்களைக் கொண்டுள்ளது. பின் மூளையில் சிறுமூளை, பொன்ஸ் வரவாலி மற்றும் மெடுல்லா ஆகியவை உள்ளன.
13.2.8 சிறுநீர்க இனப்பெருக்க மண்டலம்#
இது கழிவு நீக்கம் மற்றும் இனப்பெருக்க மண்டலங்களை உள்ளடக்கியது. கருநிலையில் உள்ளபோது இவ்விரு மண்டலங்களும் தனித்தனியாக வளர்ச்சியடைகின்றன. ஆனால் முதிர் உயிரியில் இம்மண்டலங்கள் ஒன்றிணைந்து, சிறுநீர்க இனப்பெருக்க மண்டலம் எனும் ஒரே மண்டலமாகிறது.
கழிவு நீக்க மண்டலம்
சிறுநீரகங்கள் கருஞ்சிவப்பு நிறமும், அவரை விதை வடிவமும் கொண்டு வயிற்றறையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகமும் பல நெஃப்ரான்களால் ஆக்கப்பட்ட மேட்டு நெஃப்ரிக் வளையைச் சூழ்ந்ததாகும். சிறுநீரகங்கள் இரத்ததிலிருந்து நைட்ரஜன் கொண்ட கழிவுப் பொருள்களைப் பிரித்தெடுத்து, யூரியா வடிவில் வெளியேற்றுகின்றன.
இரண்டு சிறுநீர்க நாளங்களும் சிறு நீர்ப்பையின் பின்புறத்தில் திறக்கின்றன. சிறு நீர்ப்பை, சிறுநீர்ப் பை வழி மூலம் வெளித்திறக்கிறது.
இனப்பெருக்க மண்டலம்
முயல்களில் ஆண் பெண் உயிரிகள் தனித்தனியாக காணப்படுகின்றன. முயல்களின் ஆண், பெண் இனப்பெருக்க மண்டலத்தின் அமைப்பு மற்றும் அதன் துணைப் புற உறுப்புகள் குறித்தும் கீழே காணலாம்.
ஆண் இனப்பெருக்க மண்டலம்
முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலம் ஓரிணை விந்தகங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நாளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விந்தகங்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும், இதனாலான விந்துப்பைகளினுள் அமைந்துள்ளன. ஒவ்வொரு விந்தகமும் விந்து நுண்குழல்கள் எனும் சுருண்ட குழல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இக்குழல்களில் விந்தணுக்கள் முதிர்ச்சியடையும்போது, அவை மேலேறும் நாளங்களில் சேமிக்கப்பட்டு, எபிடிடிமிஸ்க்கு கடத்தப்படுகின்றன. இருபக்க விந்து நாளங்களும் சிறுநீர்ப்பைக்கு கீழே சிறுநீர் வடிகுழாயில் இணைகின்றன. சிறுநீர் வடிகுழாய் பின்னோக்கிச் சென்று, ஆண்குறியில் முடிகிறது.
இனப்பெருக்கத்தில் பங்குகொள்ளும் மூன்று துணைச் சுரப்பிகள் உள்ளன. அவை முன்னிலை புரோஸ்டேட் சுரப்பி, கவுப்பர் சுரப்பி மற்றும் கழிவிடச் சுரப்பிகள் ஆகும்.
பெண் இனப்பெருக்க மண்டலம்
முயலின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஓரிணை அண்டகங்களும், தொடர்புடைய சுரப்பிகளும் உள்ளன. இவை சிறுநீரகங்களுக்குப் பின்னால் வயிற்றறையில் அமைந்துள்ளன. அண்டகங்கள் அண்டங்களை உற்பத்தி செய்கின்றன. கிராஃபியன் பாலிக்கிள்கள் எனும் சிறப்பு செல்கள் கொத்தாக ஒவ்வொரு அண்டத்தையும் சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு அண்டகமும் ஃபெலோப்பியன் குழாய் எனும் அண்டக் குழாயினுள் அண்டத்தை விடுவிக்கிறது. இவ்வண்டக் குழாயின் வாய்ப் பகுதி அண்டகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இக்குழாய் அடுத்த பகுதியானது கருப்பையாகத் தொடர்கிறது. முயலின் கருப்பை இரு தனித்தனிப் பகுதிகளாக அமைந்து, மையத்தில் ஒன்றாக இணைந்து யோனி அல்லது பிறப்புக் கால்வாயாக மாறுகிறது. சிறுநீர்ப் பையும், யோனியும் இணைந்து, வெஸ்டியூல் அல்லது சிறுநீரக இனப்பெருக்க கால்வாய் உருவாகிறது. இக்கால்வாய் பின்னோக்கிச் சென்று, சிறிய பிளவு போன்ற பிறப்புறுப்பு அல்லது வல்வாவாக வெளித் திறக்கிறது.
ஒரிணை எக்லப்பின் சுரப்பிகளும், கழிவிடச் சுரப்பிகளும் பெண் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ளன.
நினைவில் கொள்க#
❖ அட்டையின் உடல் ஒரே மாதிரியான 33 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
❖ அட்டை ஓர் இருபால் உயிரி.
❖ ஒம்புயிரியின் உடலில் ஒட்டிக் கொள்வதற்கும், இடப்பெயர்ச்சிக்கும் பயன்படும் இரு ஒட்டுறுப்புகளை அட்டை பெற்றுள்ளது.
❖ அட்டையின் உமிழ்நீர்ச் சுரப்பிகள் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் (எதிர் உறைவி) என்ற பொருளைச் சுரக்கின்றன.
❖ முயல்கள் முதுகெலும்புள்ள வெப்ப இரத்த உயிரிகள்.
❖ முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.
❖ முயலின் சுவாசம் ஓரிணை நுரையீரல்கள் மூலம் நடைபெறுகிறது.
❖ இதயத்தில் இரு ஆரிக்கிள்கள், இரு வெண்ட்ரிக்கிள்கள் என நான்கு அறைகள் உள்ளன.
❖ கழிவு நீக்கம் மற்றும் இனப்பெருக்க மண்டலங்கள் ஒன்றிணைந்து சிறுநீர்க இனப்பெருக்க மண்டலமாக உள்ளது.
❖ பால் சுரப்பிகள் மாறுபாடடைந்த தோல் சுரப்பிகள் ஆகும். இதன் சுரப்பான பால் இளம் உயிரிகளின் உணவாகும்.
மதிப்பீடு#
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.#
- அட்டையில் இடப்பெயர்ச்சி ________ மூலம் நடைபெறுகிறது.
அ) முன் ஒட்டுறுப்பு
ஆ) பக்கக் கால்கள்
இ) சீட்டாக்கள்
ஈ) தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
விடை: ஈ) தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
- அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)
ஆ) புரோக்ளாடிட்டுகள்
இ) ஸ்ட்ரோபிலா
ஈ) இவை அனைத்தும்
விடை: அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)
- அட்டையின் தொண்டைப் புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி?
அ) கழிவு நீக்க மண்டலம்
ஆ) நரம்பு மண்டலம்
இ) இனப்பெருக்க மண்டலம்
ஈ) சுவாச மண்டலம்
விடை: ஆ) நரம்பு மண்டலம்
- அட்டையின் மூளை ________ இதற்கு மேலே உள்ளது.
அ) வாய்
ஆ) வாய்க்குழி
இ) தொண்டை
ஈ) தீனிப்பை
விடை: இ) தொண்டை
- அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
அ) 23
ஆ) 33
இ) 38
ஈ) 30
விடை: ஆ) 33
- பாலூட்டிகள் ________ விலங்குகள்.
அ) குளிர் இரத்த
ஆ) வெப்ப இரத்த
இ) பாய்கிலோடெர்மிக்
ஈ) இவை அனைத்தும்
விடை: ஆ) வெப்ப இரத்த
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.#
கண்டத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.
ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது ________ பல்லமைப்பு எனப்படும்.
விடை: இரு முறை தோன்றும்
- அட்டையின் முன் முனையிலுள்ள குவிமுகம் போன்ற அமைப்பு ________ எனப்படும்.
விடை: முன் ஒட்டுறிஞ்சி
- இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு ________ என அழைக்கப்படுகிறது.
விடை: ஒட்டுண்ணி வாழ்க்கை
- ________ நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது.
விடை: சிறுநீரகம்
- முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ________
விடை: 37 இணை
III. சரியா தவறா எனக் கண்டறிக. தவறான கூற்றை சரியானதாக மாற்றுக.#
- கூற்று: இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹெப்பரின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
விடை: தவறு. இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
- கூற்று: விந்து நாளம் அண்டம் வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது.
விடை: தவறு. அண்டக் குழாய் அண்டம் வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது. விந்து நாளம் விந்தணுக்களைக் கடத்துகிறது.
- கூற்று: முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் பின் கடைவாய் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டையாஸ்டீமா எனப்படும்.
விடை: சரி
- கூற்று: முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்போரா குவாட்ரி ஜெமினா என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.
விடை: தவறு. முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்பஸ் காலோசம் என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.
IV. பொருத்துக.#
- கலம் I ஐ கலம் II மற்றும் III உடன் சரியாகப் பொருத்தி விடையைத் தனியே எழுதுக.
| உறுப்புகள் | குழந்துள்ள சவ்வு | அமைவிடம் |
|---|---|---|
| மூளை | புளூரா | வயிற்றறை |
| சிறுநீரகம் | கேப்ஸ்யூல் | மீடியாஸ்டினம் |
| இதயம் | மூளை உறைகள் | மார்பறையில் |
| நுரையீரல் | பெரிகார்டியம் | மண்டையோட்டுக்கு குழி |
விடை:
- மூளை → மூளை உறைகள் → மண்டையோட்டுக்கு குழி
- சிறுநீரகம் → கேப்ஸ்யூல் → வயிற்றறை
- இதயம் → பெரிகார்டியம் → மீடியாஸ்டினம்
- நுரையீரல் → புளூரா → மார்பறையில்
V. ஒரிரு வார்த்தைகளில் விடையளி.#
- Hirudinaria granulosa இன் பொதுப் பெயரை எழுதுக.
விடை: இந்தியக் கால்நடை அட்டை
- அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?
விடை: அட்டை தோல் மூலம் சுவாசிக்கிறது.
- முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.
விடை:
\[ I \frac{2}{1}, C \frac{0}{0}, PM \frac{3}{2}, M \frac{3}{3} \]- அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன?
விடை: 12 முதல் 22 வரையிலான கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்திலும் ஓரிணை விந்தகங்கள் உள்ளன. மொத்தம் 11 இணை விந்தகங்கள்.
- முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது?
விடை: முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டையாஸ்டீமா எனப்படுகிறது. முயலுக்கு கோரைப் பற்கள் இல்லாததால் இந்த இடைவெளி உருவாகிறது.
- இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை?
விடை: நுரையீரல்கள்
- அட்டையின் எந்த உறுப்பு உறிஞ்சு கருவியாகச் செயல்படுகிறது?
விடை: ஒட்டுறிஞ்சிகள் (முன் மற்றும் பின்)
- CNS – ன் விரிவாக்கம் என்ன?
விடை: மைய நரம்பு மண்டலம் (Central Nervous System)
- முயலின் பல்லமைவு ஏன் வேறுபட்ட பல்லமைவு எனப்படுகிறது?
விடை: முயலின் பற்கள் வெவ்வேறு வகையான பற்களைக் (வெட்டும் பற்கள், முன்கடைவாய்ப் பற்கள், பின்கடைவாய்ப் பற்கள்) கொண்டிருப்பதால், இது மாறுபட்ட பல்லமைப்பு எனப்படுகிறது. ஆனால் கோரைப் பற்கள் இல்லை.
- அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது?
விடை: அட்டை தனது பின் ஒட்டுறிஞ்சி மூலம் ஓம்புயிரியின் உடலில் ஒட்டிக்கொள்கிறது. வாய்க்கு வெளிப்புறமாக துருத்திக் கொண்டுள்ள தாடைகளின் மூலம் ஓம்புயிரியின் தோலில் Y வடிவ காயத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் தசையாலான தொண்டை மூலம் இரத்தத்தை உறிஞ்சுகிறது.
VI. குறுகிய விடையளி.#
- முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன்?
விடை: மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன. இவை மூச்சுக்குழாய் சிதைவடையாமல் பாதுகாக்கின்றன.
- அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.
விடை:
தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.
உடலின் இரு முனைகளிலும் உள்ள ஒட்டுறிஞ்சிகள் ஒட்டிக் கொள்ள உதவுகின்றன.
வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் Y – வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.
உமிழ்நீரில் உள்ள ஹிருடின் இரத்தத்தை உறைய விடுவதில்லை.
பக்கக் கால்களும் மயிர்க் கால்களும் இல்லை.
தீனிப்பையில் இரத்தம் சேமிக்கப்படுகிறது.
- முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் பின் கடைவாய் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டையாஸ்டீமா எனப்படும். (இது சரியான கூற்று)
- முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்பஸ் காலோசம் என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது. (இது சரியான கூற்று)
VII. விரிவான விடையளி.#
- அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?
விடை: அட்டையில் உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை. இரத்தக்குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழிக் கால்வாய்கள் அமைந்துள்ளன. சுற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன. ஒரு கால்வாய் உணவுப்பாதையின் மேல் புறமாகவும், மற்றொரு கால்வாய் கீழ்ப்புறமாகவும் அமைந்துள்ளன. ஏனைய இரு கால்வாய்களும் பக்கங்களிலும் அமைந்துள்ளன. இவ்விரு கால்வாய்களும் உட்புறம் வால்வுகளைக் கொண்டு, இதயம் போன்று செயல்படுகின்றன. நான்கு கால்வாய்களும் கீழ்ப்புறத்தில் 26 ஆவது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.
- அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.
விடை: அட்டை, தளத்தில் (1) வளைதல் அல்லது ஊர்தல் முறையிலும், நீரில் (2) நீந்துதல் முறையிலும் இடப்பெயர்ச்சி செய்கிறது.
வளைதல் அல்லது ஊர்தல் இயக்கம்: இவ்வகை இயக்கமானது தசைகளின் சுருக்கம் மற்றும் நீளுதல் மூலம் நடைபெறுகிறது. இவ்வியக்கத்தின்போது ஒட்டிக்கொள்வதற்கு இரு ஒட்டுறிஞ்சிகளும் உதவுகின்றன.
நீந்துதல் இயக்கம்: அட்டையானது நீரில் மிகுந்த செயலாக்கத்துடன் நீந்தி, அலை இயக்கத்தை மேற்கொள்கிறது.
- முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து விளக்குக.
விடை: முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலம் ஓரிணை விந்தகங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நாளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விந்தகங்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும், இதனாலான விந்துப்பைகளினுள் அமைந்துள்ளன. ஒவ்வொரு விந்தகமும் விந்து நுண்குழல்கள் எனும் சுருண்ட குழல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இக்குழல்களில் விந்தணுக்கள் முதிர்ச்சியடையும்போது, அவை மேலேறும் நாளங்களில் சேமிக்கப்பட்டு, எபிடிடிமிஸ்க்கு கடத்தப்படுகின்றன. இருபக்க விந்து நாளங்களும் சிறுநீர்ப்பைக்கு கீழே சிறுநீர் வடிகுழாயில் இணைகின்றன. சிறுநீர் வடிகுழாய் பின்னோக்கிச் சென்று, ஆண்குறியில் முடிகிறது.
இனப்பெருக்கத்தில் பங்குகொள்ளும் மூன்று துணைச் சுரப்பிகள் உள்ளன. அவை முன்னிலை புரோஸ்டேட் சுரப்பி, கவுப்பர் சுரப்பி மற்றும் கழிவிடச் சுரப்பிகள் ஆகும்.
VIII. உயர் சிந்தனை வினாக்கள்.#
- அர்ஜூன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு காய்ச்சல் வந்தால் மருத்துவரை சந்திக்கச் செல்கிறான். அவன் மருத்துவமனைக்குச் சென்றபோது, அட்டையால் தீவிரமாக கடிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதைக் காண்கிறான். மிகவும் கோரமாக இருப்பதைக் கண்ட அர்ஜூன், மருத்துவரிடம் அட்டை மனிதனின் தோலில் ஒட்டும்போதே, அது கடிப்பதை ஏன் உணர முடிவதில்லை என வினவுகிறான். அதற்கு மருத்துவர் அளித்த விடை என்னவாக இருக்கும்?
விடை: அட்டை ஓம்புயிரியின் தோலில் Y வடிவ காயத்தை ஏற்படுத்தி இரத்தத்தை உறிஞ்சும் போது, அதன் உமிழ்நீரில் ஹிருடின் என்ற பொருளை சுரக்கிறது. இந்த ஹிருடின் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், ஒரு மயக்கப் பொருளாகவும் செயல்படுகிறது. இதன் காரணமாக, அட்டை கடிக்கும் போது நோயாளிக்கு வலி உணர்வு ஏற்படுவதில்லை.
- சைலேஷ் தன் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறான். அவற்றில் சில முயல்களும் உள்ளன. ஒரு நாள் முயல்களுக்கு உணவளிக்கும்போது அவற்றின் பற்கள் வித்தியாசமாக இருப்பதை கவனிக்கிறான். இது குறித்து அவனுடைய தாத்தாவிடம் கேட்கிறான். அந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா? விவரி.
விடை: முயலின் பற்கள் மாறுபட்ட பல்வமைப்பைக் கொண்டுள்ளன. முயலுக்கு நான்கு வகைப் பற்களில் கோரைப் பற்கள் இல்லை. வெட்டும் பற்களுக்கும் முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையே டையாஸ்டீமா (பல் இடைவெளி) உள்ளது. இந்த இடைவெளி உணவை மெல்லும் போதும், அரைக்கும் போதும் உணவைக் கையாள உதவுகிறது. மேலும் முயலின் வெட்டும் பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது தாவர உணவுகளை அரைப்பதற்கு ஏற்ற தகவமைப்பாகும்.
பிற நூல்கள்#
Kotpal R.L, 2014 Modern Text Book of Zoology -Invertebrates, Rastogi Publications, Meerut.
Ekambaranatha Ayyar M and Anantha krishnan T.N. 2003. Manual of Zoology, Vol I, Part I & II (Invertebrates), S. Viswanathan Printers and Publishers Pvt Ltd.
Kotpal R.L, 2012 Modern Text Book of Zoology -Vertebrates, Rastogi Publications, Meerut.
Jordan E.L. and Verma P.S. 2003 Chordate Zoology, S. Chand and Company Ltd, New Delhi.