குடிமையியல் அலகு 2: நடுவண் அரசு#
கற்றலின் நோக்கங்கள்#
- குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்களைப் பற்றி அறிதல்
- பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவை பற்றி அறிதல்
- மக்களவை மற்றும் மாநிலங்களவை பற்றி புரிந்துகொள்ளுதல்
- உச்ச நீதிமன்றம் பற்றி அறிதல்
அறிமுகம்#
இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு நடுவண் அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் பகுதி Vஇல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் நடுவண் அரசின் நிருவாகம் பற்றி குறிப்பிடுகின்றன. இந்திய


2.1 இந்தியக் குடியரசுத் தலைவர்#
நடுவண் அரசின் நிருவாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். அவர் பெயரளவில் நிருவாக அதிகாரம் பெற்றவர். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். முப்படைகளின் தலைமை தளபதியாகச் செயல்படுகிறார். நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவராகவும் உள்ளார். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 53ன் படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாகவோ நடுவண் அரசின் நிருவாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்#
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
- நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
- மக்களவைஉறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமத்திலுள்ள 50 வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும் 50 வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும். குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கக் கூடாது. ஒருவேளை பதவி வகிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாகக் கருதப்படும். புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் - குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும். அவருடைய இல்லமும் அலுவலகமும் ஒரே கட்டத்தில் அமைந்துள்ளன. இருந்த போதிலும் அவருக்கு இருப்பிடத்துடன் கூடிய அலுவலகங்கள் மேலும் இரண்டு இடங்களில் உள்ளன. அங்கு வருடத்திற்கு ஒரு முறை சென்று தன்னுடைய அலுவலக பணிகளை அவர் மேற்கொள்கிறார். அவைகள் சிம்லாவில் உள்ள ரிட்ரீட் கட்டம் (The Retreat Building) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் ஆகும். இவைகளில் ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் அமைந்துள்ளது. இது நாட்டின் ஒற்றுமையையும், மக்களின் பல்வேறுபட்ட கலாச்சாரத்தின் ஒற்றுமையையும் பறைசாற்றுகின்றது.
குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல்#
குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர் குழுமம் என்பது மாநிலங்களவைமற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார்.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்#
நிருவாக அதிகாரங்கள்#
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 77ன் படி நடுவண் அரசின் ஒவ்வொரு நிருவாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதம அமைச்சரையும், மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர் பிரதம அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளைஒதுக்கீடு செய்கிறார். இந்தியாவின் மிக முக்கிய பதவிகளான மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், பிற நீதிபதிகள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள், நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
சட்டமன்ற அதிகாரங்கள்#
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி தொடங்கி வைக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார். அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன. நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம். மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்.
நிதி அதிகாரங்கள்#
நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது. அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது. இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.
நீதி அதிகாரங்கள்#
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இராணுவ அதிகாரங்கள்#
நடுவண் அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவர் சட்டத்தின்படி இராணுவத்தை வழிநடத்துகிறார்.
இராஜதந்திர அதிகாரங்கள்#
வெளிநாடுகளுக்கான இந்தியத் தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயேநடைபெறுகின்றன.
நெருக்கடி நிலை அதிகாரங்கள்#
நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் 352வது சட்டப்பிரிவிலும், மாநில அரசைக் கலைக்கும் அதிகாரம் 356வது சட்டப்பிரிவிலும், நிதி நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம் 360வது சட்டப்பிரிவிலும் உள்ளன.
குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்#
குடியரசுத் தலைவர் தன்னுடைய பணித்துறப்புக் கடித்தினை துணைக் குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம். அவர் சட்டப்பிரிவு 61இன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம். இவருக்கு எதிரான இக்குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், அவைக்கு வருகை புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.
2.2 துணைக் குடியரசுத் தலைவர்#
அரசியலமைப்பின் 63வது சட்டப்பிரிவு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை வழங்குகிறது. நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் துணைக் குடியரசுத் தலைவர் வகிக்கிறார். அலுவலக முன்னுரிமையின் படி குடியரசுத் தலைவருக்கு அடுத்த தர நிலையில் இவர் உள்ளார். இப்பதவி அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவரின் பதவியைப் போன்றது. நாட்டின் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற இப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்#
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
- நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
- மாநிலங்களவை உறுப்பினராவதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
தேர்தல் மற்றும் பதவிக்காலம்#
சட்டப்பிரிவு 66(1)இன் படி குடியரசுத் தலைவர் போலவேதுணைக் குடியரசுத் தலைவரும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். பதவிக்காலம் முடியும் முன்னரே பணித்துறப்பு, இறத்தல், பணிநீக்கம் ஆகிய காரணங்களால் அவரது பதவி முடிவுக்கு வரலாம். அவர் மீண்டும் துணைக் குடியரசுத்
துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள்#
துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார்.
- மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
- மாநிலங்களவையின் மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார்.
- மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளைஅனுமதிப்பதை முடிவு செய்கிறார்.
- மிகப் பெரிய பிரச்சனையின்போது அவையின் நடவடிக்கைகளை அவர் ஒத்திவைக்கவும் அல்லது முடிவுக்குக் கொண்டு வரவும் செய்கிறார்.
- குடியரசுத் தலைவர் உடல்நலக் குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாத போதும் அல்லது நாட்டில் இல்லாத போதும் துணைக் குடியரசுத் தலைவர், அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்கு அவரின் பணிகளைக் கவனிப்பார்
துணைக் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்#
மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கலாம். இத்தகைய தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 14 நாள்களுக்கு முன்னரே துணைக் குடியரசுத் தலைவருக்கு ஓர் அறிவிப்பை வழங்க வேண்டும்.
முடிவு வாக்கு (Casting vote)#
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம். இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது. அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.
2.3 பிரதம அமைச்சர்#
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 74(1) குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு நடுவண் அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. (இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மையில் அமைந்துள்ளதால் அவர்களின் நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது).
மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்றக் கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற அமைச்சர்களை பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மக்களவையில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் இல்லையெனில் குடியரசுத் தலைவர் எந்தக்கட்சி அமைச்சரவையை அமைக்க முடியுமோ அக்கட்சியின் தலைவரை அவர் அழைத்து அரசு அமைக்கக் கூறலாம். குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், இரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால், அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் மக்களவைக்கு பொறுப்புடையவர்களாவர்.
பிரதம அமைச்சரின் செயல்பாடுகளும், கடமைகளும்#
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
- பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
- தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து முடிவு செய்வார்.
- காபினெட் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தன் மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
- பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
- நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
- பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
- பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
- சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.
அமைச்சரவைக் குழு#
தேர்தலுக்குப் பின்னர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையை நியமிக்கிறார். ஒட்டு மொத்த மக்களவைஉறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக (பிரதம அமைச்சர் உட்பட) இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
நடுவண் அமைச்சர்களின் வகைகள்#
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள் 2. இராசாங்க அமைச்சர்கள் 3. இணை அமைச்சர்கள்
காபினெட் அமைச்சர்கள்#
நிருவாகத்தின் மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே காபினெட் ஆகும். காபினெட் அரசாங்கத்தின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கைகள், உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.
இராசாங்க அமைச்சர்கள்#
அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.
இணை அமைச்சர்கள்#
அமைச்சரவையில் மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். காபினெட் அமைச்சர்கள் (அ) இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.
2.4 இந்திய நாடாளுமன்றம்#
நடுவண் அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள் 1. குடியரசுத் தலைவர் 2. ராஜ்ய சபா (மாநிலங்களவை ) 3. லோக்சபா (மக்களவை ). நாடாளுமன்றமானது மாநிலங்களவைஎன்னும் மேலவையையும் மக்களவைஎன்னும் கீழவையையும் கொண்டுள்ளதால் இது ஈரவை சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.
மாநிலங்களவை#
ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அனுபவம் கொண்ட 12 உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள்#
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
- அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
- மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது வாங்கிய கடனைத் திருப்பித்தர முடியாதவராகவோ இருத்தல் கூடாது.
- மக்களவையிலோ (அ) எந்தவொரு சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம்#
மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும். அதனைக் கலைக்க முடியாது. மாநிலங்களவைஉறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்படுகின்றன. துணைக் குடியரசுத் தலைவர் பதவி வழி மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார். மாநிலங்களவையின் துணைத் தலைவர் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தேர்தல்#
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் (MLA’s) ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவைஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்தல் முறை மறைமுக தேர்தல் எனப்படும். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. நிதி மசோதாமக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை. இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். மாநிலங்களவை 14 நாள்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும். மாநிலங்களவையின் சட்டத் திருத்திற்கான முன்மொழிவுகளை மக்களவைகருத்தில் கொள்ள வேண்டியதில்லை. எந்த முன்மொழிவுகளையும் மக்களவைநிராகரிக்கலாம்.
மக்களவை#
மக்களவையானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க அவை ஆகும். மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 552. தற்சமயம் மக்களவை 543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 530 உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், 13 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்#
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 25 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
- அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
- நடுவண் அரசு, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
- மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது வாங்கிய கடனைதிருப்பிச் செலுத்த இயலாதவராகவோ இருத்தல் கூடாது.
மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்#
பொதுவாக, மக்களவை தன்னுடைய முதல் கூட்டத்திலிருந்து ஐந்து ஆண்டுகள் செயல்படும். அதன் காலம் முடிவதற்கு முன் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்பேரில் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம். இந்திய அரசியலமைப்பின் அவசரநிலை சட்டத்தின்படி மக்களவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோபெரும்பான்மை இல்லாத பட்சத்தில் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம்.
மக்களவை தேர்தல்#
மக்கள் தொகையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள மக்களால் நேரடியாக மக்களவைஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், மேற்பார்வையிடுதல், நடத்துதல் ஆகிய பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
மக்களவைஉறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் ‘வயது வந்தோர் வாக்குரிமை’ பின்பற்றப்படுகிறது. வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட 18 வயது பூர்த்தி அடைந்த இந்தியக் குடிமக்கள் அனைவரும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க தகுதியுடையவர் ஆவர்.
மக்களவையின் செயல்பாடுகள்#
- அனைத்து மசோதாக்களையும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும், நிறைவேற்றவும் முடியும் (நிதி மசோதா உள்பட).
- குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்க விவகாரங்களில் பங்கேற்க மாநிலங்களவையைப் போலவேமக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
- அரசியலமைப்புச் சட்டத்திருத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவையைப் போலவேமக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது.
- மக்களவைஉறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
- நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். தமிழ் நாட்டிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்.
- மாநிலங்களவை - 18 உறுப்பினர்கள்
- மக்களவை - 39 உறுப்பினர்கள்
சபாநாயகர்#
மக்களவையைத் தலைமை ஏற்று நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களவைஉறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாடாளுமன்ற மக்களாட்சியில் சபாநாயகரின் பதவி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மக்களவைகலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார். அவர் ஒரு மசோதா நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார். சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போதும் அல்லது வருகை புரியாத போதும் துணை சபாநாயகர் மக்களவைக்குத் தலைமை வகிப்பார்.
| நாடாளுமன்றக் கூட்டத் தொடர் | |
|---|---|
| நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் | பிப்ரவரி முதல் மே வரை |
| மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர் | ஜூலை முதல் செப்டம்பர் வரை |
| குளிர் காலக் கூட்டத் தொடர் | நவம்பர் மற்றும் டிசம்பர் |
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்#
- இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிருவாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு- செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.
- நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை (Impeachment) விசாரிக்கவும், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
- மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றதிற்கே அதிகாரம் உண்டு.
2.5 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்#
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது. இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவர் பெற்றிருக்க வேண்டும். அவர் எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரால் பதவியிலிருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடித்தை அளித்து பதவி விலகலாம்.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்#
இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார். இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு. நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்ளுவதற்கும் இவருக்கு உரிமை உண்டு. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்துச் சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவர் பெறுகிறார்.
2.6 நீதித்துறை#
நடுவண் அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும். குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
உச்ச நீதிமன்றம்#
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம் ஆகும். நடுவண், மாநில அரசுகளின் சட்டமன்ற, நிருவாகப் பிரிவுகளிலிருந்து நீதித்துறை தன்னாட்சி பெற்று விளங்குகிறது. ஒருங்கிணைந்த நீதித்துறை என்பது நாடு முழுவதும் நீதித்துறையானது ஒற்றை அதிகாரப் படிநிலையைக் கொண்டுள்ளதாகும். குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது
உச்ச நீதிமன்றம்#
புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் தொடங்கப்பட்டது. இது 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு#
1950ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை நீங்கள் அறிவீர்களா…?
நீதிபதிகள் நியமனம்#
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுவின் (Collegium) ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள்#
- அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
- அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
- குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும். தற்காலிக அடிப்படையில் (ad-hoc basis) உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக குடியரசுத் தலைவரிடம் பதவி விலகல் கடித்தை அளித்து பதவி விலகலாம். பெருங்குற்றத்தின் மூலம் உண்டான கண்டனத் தீர்மானத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தினை நாடாளுமன்றம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் புதுதில்லியில் உள்ளது. எனினும் இந்தியக் குடியரசுத் தலைவரின் இசைவு பெற்று இந்தியத் தலைமை நீதிபதியின் முடிவின்படி வேறு எந்த மாநிலத்திலும் அல்லது எந்த ஒரு இடத்திலும் இந்நீதிமன்ற அமர்வினை அமைக்கலாம்.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களும் பணிகளும்#
(அ) தனக்கேயுரிய நீதி வரையறை#
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்கு உட்பட்டவை ஆகும். அவைகள்
- இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்
- அடிப்படை உரிமைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும். அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கின்றது.
(ஆ) மேல்முறையீட்டு நீதிவரையறை#
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் (Civil and Criminal) அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது. அப்படிப்பட்ட வழக்குகளைத் தீர்க்க அரசியலமைப்புச் சட்டப்படி மேலும் சட்டவிளக்கம் தேவையென உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவ்வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல முடியும்.
(இ) ஆலோசனை நீதிவரையறை#
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.
(ஈ) இதர நீதிவரையறை#
- உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
- குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
(உ) நீதிப்புனராய்வு#
ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதா என ஆராயும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது இது நீதிப்புனராய்வு (நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்) எனப்படும். பின்வரும் தனிப்பட்ட நீதிமன்ற மறுஆய்வு அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது. அவை
- நடுவண் அரசு, மற்றும் மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள்.
- அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்ததேகங்கள், கருத்து வேற்றுமைகளைவிளக்கி தெளிவுபடுத்துதல்.
- அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.
- மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம்.
பாடச்சுருக்கம்#
- நடுவண் அரசாங்கம் மூன்று அங்கங்களைக் கொண்டது. அவைகள் நிருவாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியன.
- குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களையும் நியமிக்கிறார்.
- இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள் குடியரசுத் தலைவர், மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா).
- இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார். அவர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது.
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
கலைச்சொற்கள்#
| முடிவுக்கு கொண்டு வருதல் | Terminate | bring to an untimely end. |
|---|---|---|
| எதிர்பாரா செலவு நிதி | Contingency fund | an amount of money that can be used to pay for problems that might happen. |
| பொதுமன்னிப்பு | Pardon | absolving the convict of all guilt and punishment. |
| தண்டனை குறைப்பு | Remission | quantitative reduction of punishment without affecting Nature of punishment. |
| முன்னுரிமை | Precedence | priority of importance. |
| பதவியின் நிமித்தமாக | Ex-officio | because of an office. |
மதிப்பீடு#
V கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி#
- இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
- நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
- நிதி மசோதா பற்றி குறிப்பு வரைக.
- இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப்க் குறிப்பிடுக.
- உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
VI விரிவான விடையளி#
- இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரங்களை விவரி.
- இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
- நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.
VII செயல்திட்டமும் செயல்பாடும்#
- உனது வகுப்பறையில் மாதிரி நாடளுமன்றத்தை ஏற்பாடு செய்து. குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சர், அமைச்சர்களின் பங்கு பற்றி விவரி.
- இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவருக்கும் இடையேயான ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணர்க.
- இந்தியக் குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களின் பட்டியலை தயார் செய்க.
இணையச் செயல்பாடு#
செயல்முறை#
கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்லவும். படி 2: தற்போதுள்ள ஆளும் குழுக்களைப் பார்வையிடவும், மக்களவை மற்றும் ராஜ்ய சபை குறித்து அறிந்து கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Who’s மெனு வை சொடுக்கவும். உதாரணமாக, குடியரசுத் தலைவரின் விவரங்களைக் காண இடதுபக்கம் உள்ள President - ஐ சொடுக்கவும். படி 3: அதேபோல் தற்போதைய ஆளும் குழுக்களின் அனைத்து விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். நிகழ்வுகளைப் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ள திரையில் தோன்றும் வரைபடத்தில் எதேனும் ஒரு இடத்தினை தேர்ந்தெடுக்கவும் .
உரலி: https://www.india.gov.in/my-government/whos-who#
ேமற்ேகாள் நூல்கள்#
- D.D. Basu - Introduction of the Constitution of India, S.C. Sarkar & Sons (Private) Ltd, 1982.
- PM Bakshi - The Constitution of India, Universal Law Publishing - an imprint of LexisNexis, 2018.
- Subhash Kashyap - Our Constitution, National Book Trust, India, 2011.
இைணயதள வளங்கள்#
- https://www.india.org/
- https://presidentofindia.nic.in/
- http://vicepresidentofindia.nic.in/
- http://www.pmindia.gov.in/en/
- https://www.sci.gov.in/
கூடுதல் கற்றல் வளங்கள்#
இவை பாடநூலுக்கு துணையான வெளித்தள வளங்கள். மூலப் பாடநூலின் உரையும் புள்ளிவிவரங்களும் மேலே தனியாக உள்ளன. இணைப்புகள் சோதிக்கப்பட்ட நாட்கள்: 12–13 அக்டோபர் 2026. காணொலிகளின் தலைப்பும் வெளியீட்டாளரும் தேடல் பதிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டன; காணொலி இயக்கம் முழுமையாகச் சோதிக்கப்படவில்லை. வெளித்தளப் பயிற்சிகளின் விடைகள் பாடநூலின் அதிகாரப்பூர்வ விடைகளாகக் கருதப்படவில்லை.
காணொலிகள்#
- 10th Social Civics Unit 2: Central Government — short answers 1, 2, 3 — HTAS How To Approach Schooling; தமிழ்.
- 10th Social Civics: Powers and Functions of Parliament — HTAS How To Approach Schooling; தமிழ்.
- Vice President of India — Articles, Election and Removal — WIN & SHINE IAS / UPSC; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
- Attorney General of India — Indian Polity — Ahamed A (as named in video title); தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
- Judicial System in India — Supreme Court and High Court — Tamil — Quick Learning 4 TNPSC, IBPS, SSC; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
இணையச் செயல்பாடுகள்#
- The Indian Government — branches and Parliament quiz — Wordwall / original activity author; ஆங்கிலம்.
தலைப்புவாரியான வளங்கள்#
“பாடக் காணொலி” மற்றும் “பாடப் பயிற்சி” முழுப் பாடத்துக்கான வளங்கள். “காணொலி தேடல்” தனித்தலைப்புக்கான தேடல் இணைப்பு; குறிப்பிட்ட காணொலி உறுதிப்படுத்தப்பட்டதாக அது குறிக்காது.
முந்தைய உரலிகளின் சோதனை#
| முந்தைய உரலி | சோதனை நிலை | மாற்று வளம் |
|---|---|---|
https://www.india.gov.in/my-government/whos-who | அணுகல் உறுதிப்படுத்தப்படவில்லை | மாற்று இணைப்பு |
https://www.india.org/ | தொடர்பற்ற உள்ளடக்கம் | மாற்று இணைப்பு |
https://presidentofindia.nic.in/ | இணைப்பு திறக்கிறது | — |
http://vicepresidentofindia.nic.in/ | இணைப்பு திறக்கிறது | மாற்று இணைப்பு |
http://www.pmindia.gov.in/en/ | இணைப்பு திறக்கிறது | மாற்று இணைப்பு |
https://www.sci.gov.in/ | இணைப்பு திறக்கிறது | — |
அரசு பொதுத்தேர்வு வினாக்கள் (Board Examination Questions)#
2 மதிப்பெண் வினாக்கள் (2 Marks)#
2024#
இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ?
மாதிரி விடை மற்றும் தீர்வு
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் (சட்டப்பிரிவு 54) குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இக்குழுமத்தில்:
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்;
- அனைத்து மாநில சட்டப் பேரவைகள் மற்றும் டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) வாக்களிக்கின்றனர்.
5 மதிப்பெண் வினாக்கள் (5 Marks)#
2023, 2025#
இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை ?
மாதிரி விடை மற்றும் தீர்வு
இந்திய பிரதமரின் பணிகள் மற்றும் கடமைகள் (சட்டப்பிரிவு 78)
- அமைச்சரவையின் தலைவர்: அமைச்சர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பதுடன், அவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார்.
- அரசாங்கத்தின் தலைவர்: அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்து வழிநடத்துகிறார்.
- குடியரசுத் தலைவருடனான தொடர்புப் பாலம்: அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கும் முதன்மைத் தொடர்பாளராக விளங்குகிறார்.
- நாடாளுமன்றத்தின் தலைவர்: மக்களவையின் தலைவராகச் செயல்பட்டு, அரசின் கொள்கைகளை அவையில் அறிவிக்கிறார்; நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் ஒத்திவைப்பதற்கும் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
- சர்வதேச பிரதிநிதி: நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பதிலும், சர்வதேச மாநாடுகளில் (G20, BRICS) நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் முதன்மைப் பங்கு வகிக்கிறார்.
2026#
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விமர்சன ரீதியாக ஆராய்க.
மாதிரி விடை மற்றும் தீர்வு
இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்
- சட்டமியற்றும் அதிகாரம்: நாட்டின் உச்சபட்ச சட்டமியற்றும் அமைப்பாகும்; மத்திய பட்டியல், பொதுப் பட்டியல் மற்றும் இதர அதிகாரங்கள் மீது சட்டங்களை இயற்றுகிறது.
- நிதி அதிகாரம்: நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நிறைவேற்றுகிறது; நாடாளுமன்ற ஒப்புதலின்றி வரி விதிக்கவோ, அரசின் தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கவோ முடியாது.
- நிர்வாகத்தின் மீதான கட்டுப்பாடு: அமைச்சரவை மக்களவைக்குப் பொறுப்பானது; கேள்வி நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அமைச்சரவையை வழிநடத்துகிறது.
- அரசியலமைப்பு திருத்த அதிகாரம்: சட்டப்பிரிவு 368-ன் கீழ் அரசியலமைப்பில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்கிறது.
- தேர்தல் & பதவி நீக்க அதிகாரம்: குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் வாக்களிக்கிறது; உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்யும் அதிகாரம் கொண்டுள்ளது.