குடிமையியல் அலகு 3: மாநில அரசு#
கற்றலின் நோக்கங்கள்#

மாநில அரசின் அமைப்புப் பற்றிய அறிவினைப்பெறுதல்
ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின்
அதிகாரங்கள் மற்றும் பணிகளைப் புரிந்துகொள்ளுதல்#
மாநில சட்டமன்றம் பற்றி அறிதல்
மாநிலத்தின் நீதித்துறை மற்றும் அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல்
அறிமுகம்#
இந்திய அரசியலமைப்பு நடுவண், மாநில அரசுகளுக்கான தனித்தனி நிருவாக முறைகளைக் கொண்ட கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது. இக்கூட்டாட்சியில், தேசியத் தலைநகரான புது டெல்லி உட்பட 8 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன. நடுவண்-மாநில அரசுகளுக்கான ஒரு சீரான நிருவாக அமைப்பினை ஏற்படுத்த அரசியலமைப்பு வழிவகுக்கிறது. அரசியலமைப்பின் பகுதி VIஇல் 152 முதல் 237 வரையிலான சட்டப்பிரிவுகள் அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி நீதித்துறைசட்டமன்றம் நிருவாகத்துறை ஆளுநர்
(கீழவை) சட்டமேலவை
(மேலவை)
முதலமைச்சர் அமைச்சரவை குறிப்பிடுகிறது. நடுவண் அரசைப் போன்று மாநில அரசுகளும் நிருவாகத்துறை, சட்டமன்றம், நீதித்துறை என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இயங்குகின்றன.
3.1 நிருவாகத் துறை#
ஆளுநர்#
மாநில நிருவாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர் ஆவார். மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிருவாகம் செயல்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருக்கிறார். ஆனால் நிருவாகச் சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு உயர் நீதிமன்றம் சட்டமன்றப்பேரவை மாவட்ட நீதிமன்றங்கள் மற்ற நீதிமன்றங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராகவும் நியமிக்கப்படலாம்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிருவாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது.
ஆளுநர் நியமனம்#
மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். வழக்கமாக, அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம். பொதுவாக, ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படமாட்டார். மேலும், அவர் குடியரசுத் தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்படலாம். குடியரசுத் தலைவருக்குத் தனது பணித்துறப்புக் கடித்தைக் கொடுப்பதன் மூலம் ஆளுநர் எந்நேரத்திலும் பதவி விலகலாம்.
மாநில சட்டமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஆளுநரின் பணி நீக்கத்தில் பங்கு பெற முடியாது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம். ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் இரண்டு மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவை: ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது. மேலும் ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை நடுவண் அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 158 (3A)இன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத் தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.
ஆளுநராவதற்கான தகுதிகள்#
இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான பின்வரும் தகுதிகளைக் கூறுகின்றன.

அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது.
அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
- அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்#
ஆளுநர், மாநில நிருவாகத்தின் தலைவராகவும் பிற அதிகாரங்கள் பெற்றவராகவும் திகழ்கிறார். சட்டப்பிரிவு 163இன் படி, முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.
நிருவாக அதிகாரங்கள்#
மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமனம் செய்கிறார்.
முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.
மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்.
சட்டமன்ற அதிகாரங்கள்#
ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார். ஆனால், அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை. ஆளுநர் பின்வரும் சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத் தொடரிலும், ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றார்.
நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
ஆங்கிலோ–இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்டமேலவையின் 6இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார்.
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னரே சட்டமாகும். ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால், அந்த அவசரச்சட்டம், 6 மாத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.
மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, மாநில அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
நிதி அதிகாரங்கள்#
மாநிலத்தின் ஆண்டு வரவு-செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமையை ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்குகிறது. தேவைப்பட்டால், துணை வரவு செலவு திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம்.
ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் பண மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
அரசின் எதிர்பாராச் செலவினங்களுக்காக ஆளுநர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம் ஒன்றை அமைக்கிறார். நீதித்துறை அதிகாரங்கள்
மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.
உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.
ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியை நியமனம் செய்கிறார்.
கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். (மரண தண்டனையைப் பெற்ற குற்றவாளியைத் தவிர) விருப்புரிமை அதிகாரங்கள்
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.
மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும். அவசரகால அதிகாரங்கள் மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356இன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யலாம். மாநில அரசு கலைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிருவாகம் செய்கிறார். ஆளுநரின் சிறப்புரிமைகள் சட்டப்பிரிவு 361 (1) ஆளுநருக்கான கீழ்க்காணும் சிறப்புரிமைகளை வழங்குகின்றது.
தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
3.2 முதலமைச்சர்#
அரசியலமைப்பால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற முறையில் அமைந்த அரசில், ஆளுநர், மாநிலத்தின் பெயரளவு நிருவாகியாகவும் முதலமைச்சர் உண்மையான நிருவாகியாகவும் உள்ளனர். வேறு வகையில் கூற வேண்டுமாயின் ஆளுநர் என்பவர் மாநில அரசின் தலைவர் முதலமைச்சர் என்பவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவர். முதலமைச்சரின் நியமனம் முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார். முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம். சட்டமன்றத்தில் எப்பொழுது அவர் பெரும்பான்மையை இழக்கிறாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார். சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் போலவே முதலமைச்சரின் பதவிக்காலமும் 5 ஆண்டுகள் ஆகும். முதலமைச்சரின் அதிகாரங்களும் பணிகளும்அமைச்சரவை தொடர்பானவை
முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
தனது அமைச்சரவையை மாற்றியமைக்கவும் மறுசீரமைக்கவும் செய்கிறார்.
அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை#
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
மாநில அரசின் தலைமை வழக்குரைஞர்
மாநில தேர்தல் ஆணையர்
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை#
சட்டமன்ற கூட்டத்தொடரை தொடங்கிவைக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
அமைச்சரவை#
அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்குக் கூட்டாகப் பொறுப்பானது. அமைச்சரவைக் குழுவின் அமைச்சர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் 6 மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால் மாநில அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 163 ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது. சட்டப்பிரிவு 163(1)இன் படி, முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.
அமைச்சர்களுடனான மற்ற விதிகள்#
சட்டப்பிரிவு 164(1), ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதைக் கூறுகிறது. முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை தாண்டக்கூடாது என சட்டப்பிரிவு 164 (1A) கூறுகிறது.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்#
மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து அனைத்து முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்பதைத் தீர்மானிக்கிறது.
அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
ஆண்டு வரவு-செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.
3.3 மாநில சட்டமன்றம்#
இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் ஏற்பட வழி வகை செய்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் ஓரவையைக் கொண்ட சட்டமன்றங்களை மட்டும் பெற்றுள்ளன. சில மாநிலங்கள் ஈரவை சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன. (எடுத்துக்காட்டு: பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா). கீழவையானது மாநில மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டது. மேலவையானது ஆசிரியர்கள், பட்டதாரிகள், மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆகியோர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டது.
தமிழ் நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம். அதாவது, 234இல் 15 விழுக்காடு.
சட்டமன்றப் பேரவை (கீழவை)#
மாநில சட்டமன்றம் பிரபலமான ஓர் அவை ஆகும். இதுவே மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையமாகும். இது வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500க்கு மிகாமலும் குறைந்த பட்சம் 60க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் 5 ஆண்டுகள் முடியும் முன்னரே சட்டமன்றம் கலைக்கப்படலாம்.
சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமல் இருக்க வேண்டும்
சட்டமன்றத்தின் அமைப்பு#
தமிழ்நாடு சட்டமன்றம் 235 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் 234 உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆங்கிலோ–இந்தியன் வகுப்பினரில் ஒருவர் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
அமைச்சரவையும் அமைச்சரவைக் குழுக்களும்#
அமைச்சரவை (Cabinet) என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும். இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது. இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது.
அமைச்சரவை குழுக்கள் எனப்படும் வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை: ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது ஆகும்.
சபாநாயகர்#
சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் 14 நாள்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கு முன் சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் அவைக்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார். மேலும், புதிய சட்ட மன்றத்தின் முதல் கூட்டம் வரை தனது பதவியைத் தொடர்கிறார். சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.
சட்டமன்ற மேலவை (சட்ட மேலவை)#
சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது. ஈரவை சட்டமன்றத்தில் மறைமுகத் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்ட மேலவையில் செயலாற்றுகின்றனர். சட்ட மேலவை ஒரு நிரந்தர அவையாகும். ஏனென்றால், இதனை கலைக்க முடியாது. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். அதன் ஒவ்வொரு இரண்டாண்டிற்கும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவர். ஒருவர் சட்ட மேலவை உறுப்பினராவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தெளிவான மனநிலை உடையவராக இருத்தல் வேண்டும். எந்த மாநிலத்தில் போட்டியிடுகிறாரோ அம்மாநில வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
1986இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
சட்ட மேலவைக்கான தேர்தல்#
மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பன்னிரெண்டில் ஒரு பங்கு (1/12) உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பன்னிரென்டில் ஒரு பங்கு (1/12) உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மூன்றில் ஒரு பங்கு (1/3) உறுப்பினர்கள் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் (1/6) கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, மற்றும் கூட்டுறவு இயக்கம் இவற்றில் சிறந்து விளங்குபவர்களை ஆளுநர் நேரடியாக நியமனம் செய்கிறார்.
தலைவர்#
மேலவைத் தலைவர் (Chair person) மேலவை கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார். மேலவை உறுப்பினர்களிடையே தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தலைவர் இல்லாதபோது துணைத்தலைவர் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார்.
சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம்#
சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி சட்டப்பிரிவு 169 விவரிக்கிறது.
இப்பிரிவின் படி, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு (2/3) உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமேலவையை உருவாக்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டால் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் மேலவையை உருவாக்கும் அல்லது நீக்கும்.
3.4 சட்டமன்றத்தின் செயல்பாடுகள்#
சட்டமன்ற அதிகாரங்கள்#
அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம். பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம். ஆனால், அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும்பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும். நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேற்றுகிறது.
நிதி அதிகாரங்கள்#
சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது. சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது. பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது.
நிருவாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்#
அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.
3.5 மாநில நீதித்துறை#
உயர் நீதிமன்றங்கள்#
1862இல் உயர் நீதிமன்றங்கள் கல்கத்தா, பம்பாய் மற்றும் மெட்ராஸ் தோற்றுவிக்கப்பட்டன. காலப்போக்கில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வோர் மாகாணமும் ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டிருந்தது. 1950க்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக விளங்கியது. மாநில அளவில் உயர் நீதிமன்றங்களே மிக உயர்ந்த்த நீதிமன்றங்களாகும்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர் நீதிமன்றத்தைத் தோற்றுவிக்க வழிவகுக்கிறது. ஆனால், 1956ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச்சட்டம், இரண்டு மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
எடுத்துக்காட்டாக பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்குச் சண்டிகரிலுள்ள உயர் நீதிமன்றம் பொது நீதிமன்றமாக உள்ளது. இதேபோன்று கவுகாத்தியிலுள்ள உயர் நீதிமன்றம் நான்கு வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், நாகலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம் போன்றவைகளுக்கு பொது நீதிமன்றமாக உள்ளது. இந்த நீதிமன்றத்தின் கிளைகள் இட்டா நகர், கொஹிமா, அய்ஸ்வால் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. டெல்லி ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நீதிமன்றமும் தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகளைக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
உயர் நீதிமன்ற நீதி வரையறையும் அதிகாரங்களும்#
தனக்கேயுரிய நீதிவரையறை#
மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன. அதே வேளையில்
1862ஆம் ஆண்டு ஜுன் 26ஆம் நாளில் விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடித்தின் மூலம் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மாகாணங்களில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகம் உலகிலேயே இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன. மாகாண நீதிமன்றங்கள் அவற்றின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் `2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை உரிய நீதிவரையறையைப் பயன்படுத்தி விசாரிக்க முடியும்.
மேல்முறையீட்டு நீதிவரையறை#
உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.
பேராணை அதிகாரங்கள்#
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.
சட்டப்பிரிவு 32இன் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கும் நீதிப்பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றே உயர் நீதிமன்றமும் அவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிப்பேராணைகளை வெளியிட உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கிய அதிகாரம் பெரியதாகும். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே உச்ச நீதிமன்றம் இவைகளை வெளியிடுகிறது. உயர் நீதிமன்றம் இது போன்ற வழக்குகள் மட்டுமின்றி சாதாரண சட்டமீறலுக்கும் நீதிப்பேராணைகளை (ஆட்கொணர்வு நீதிப் பேராணை, கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை, தடையுறுத்தும் நீதிப்பேராணை, தகுதி வினவும் நீதிப்பேராணை, ஆவணக் கேட்பு பேராணை), வெளியிட முடியும்.
மேற்பார்வை அதிகாரம்#
இராணுவ நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பெற்றுள்ளது.
கீழ் நீதிமன்றங்களில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப பெறும் அதிகாரம்.
பொதுச் சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்கள் மூலம் பயிற்சி மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த ஓர் ஆணையை வெளியிடச் செய்தல்.
பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் கீழ் நீதிமன்றங்கள் புத்தகங்கள், பதவிகள், கணக்குகளைப் பராமரித்தல்.
ஷெரிப், எழுத்தர்கள், அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கான கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவை குறித்துத் தீர்மானித்தல்.
பாடச்சுருக்கம்#
மாநில நிருவாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார்.
ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுகிறார்.
மாநில சட்டமன்றத்திற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பானது.
சட்டமன்றம் மாநிலத்தின் உண்மையான அதிகார மையமாகும்.
தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கும் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன.
கலைச்சொற்கள்#
| அரசியலமைப்பு | Constitution | it has been defined as the fundamental law of a State. |
|---|---|---|
| அமைச்சரவை | Cabinet | it is an inner body within the Council of Ministers which is responsible for formulating the policy of the Government. |
| சட்டமன்றம் | Legislature | the group of people in a country or part of a country who have the power to make and change laws |
| தீர்ப்பாயம் | Tribunal | a special court chosen, especially by the government, to examine particular problem |
| தீர்மானம் | Resolution | an official decision that is made after a group or organisation has voted |
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம்#
உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன. இதனால் உயர் நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்#
சம நீதி கண்ட சோழன் சிலை#

மதிப்பீடு#
II கோடிட்ட இடத்தை நிரப்புக#
ஆளுநர் தனது இராஜினாமா கடித்தை இடம் கொடுக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
IV சுருக்கமாக விடையளி#
மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது?
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?
V விரிவான விடையளி#
ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.
முதலமைச்சரின் அதிகாரங்களையும் பணிகளையும் விவரி.
அமைச்சரவையின் அதிகாரங்களையும் பணிகளையும் ஆய்க.
VI செயல்திட்டமும் செயல்பாடும்#
- மாநில அரசாங்கத்தின் நிருவாக முறையை விளக்கும் ஒரு விளக்கப்படம் (Flow chart) தயார் செய்க.
இணையச் செயல்பாடு#
செயல்முறை#
கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தையும் அதன் செயல்பாட்டையும் பார்வையிட இந்திய வரைபடத்தின் ஏதேனும் ஒரு மாநிலத்தை சொடுக்கச் செய்யவும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மாநிலத்தில் சொடுக்கவும். அதில் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை காணலாம்.
அதேபோல் பிறமாநிலங்களின் விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.நிகழ்வுகளைப் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ள திரையில் தோன்றும் வரைபடத்தில் எதேனும் ஒரு இடத்தினை தேர்ந்தெடுக்கவும் .
உரலி: https://www.mea.gov.in/india-at-glance.htm#
- தமிழ்நாட்டின் முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
இைணயதள வளங்கள்#
கூடுதல் கற்றல் வளங்கள்#
இவை பாடநூலுக்கு துணையான வெளித்தள வளங்கள். மூலப் பாடநூலின் உரையும் புள்ளிவிவரங்களும் மேலே தனியாக உள்ளன.
இணைப்புகள் சோதிக்கப்பட்ட நாட்கள்: 12–13 அக்டோபர் 2026. காணொலிகளின் தலைப்பும் வெளியீட்டாளரும் தேடல் பதிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டன; காணொலி இயக்கம் முழுமையாகச் சோதிக்கப்படவில்லை. வெளித்தளப் பயிற்சிகளின் விடைகள் பாடநூலின் அதிகாரப்பூர்வ விடைகளாகக் கருதப்படவில்லை.
காணொலிகள்#
- Class 10 | மாநில அரசு | அலகு 3 | KalviTv — KalviTVOfficial; தமிழ்.
- State Government: Governor importance and qualifications — HTAS How To Approach Schooling; தமிழ்.
- Chief Minister — Indian Polity — Tamil — Yogesh Exams; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
- State Legislature — Assembly and Council — Tamil — Vimal ananthan AP; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
- Judicial System in India — Supreme Court and High Court — Tamil — Quick Learning 4 TNPSC, IBPS, SSC; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
இணையச் செயல்பாடுகள்#
- Virtual tour of Rajasthan Legislative Assembly — Rajasthan Legislative Assembly; ஆங்கிலம்.
தலைப்புவாரியான வளங்கள்#
“பாடக் காணொலி” மற்றும் “பாடப் பயிற்சி” முழுப் பாடத்துக்கான வளங்கள். “காணொலி தேடல்” தனித்தலைப்புக்கான தேடல் இணைப்பு; குறிப்பிட்ட காணொலி உறுதிப்படுத்தப்பட்டதாக அது குறிக்காது.
முந்தைய உரலிகளின் சோதனை#
| முந்தைய உரலி | சோதனை நிலை | மாற்று வளம் |
|---|---|---|
https://www.mea.gov.in/india-at-glance.htm | அணுகல் உறுதிப்படுத்தப்படவில்லை | மாற்று இணைப்பு |
அரசு பொதுத்தேர்வு வினாக்கள் (Board Examination Questions)#
2 மதிப்பெண் வினாக்கள் (2 Marks)#
2025#
உயர் நீதிமன்றத்தின் முதன்மை அதிகார வரம்பு என்றால் என்ன ?
மாதிரி விடை மற்றும் தீர்வு
உயர் நீதிமன்றத்தின் முதன்மை அதிகார வரம்பு மேல்முறையீட்டு வழக்காக அன்றி, ஒரு வழக்கை முதன்முதலாக நேரடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கும் உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் முதன்மை அதிகார வரம்பு எனப்படும். இதில்:
- கடற்படை, உயில், திருமணம், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் கம்பெனி தொடர்பான வழக்குகள்;
- சட்டப்பிரிவு 226-ன் கீழ் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நீதிப்பேராணைகளை (Writs) பிறப்பிக்கும் அதிகாரம்;
- நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்தல் தொடர்பான தகராறுகளை விசாரிக்கும் அதிகாரம் ஆகியவை அடங்கும்.
2026#
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன ?
மாதிரி விடை மற்றும் தீர்வு
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரம் தனக்குக் கீழுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் வழங்கிய உரிமையியல் (Civil) மற்றும் குற்றவியல் (Criminal) தீர்ப்புகளை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரமே உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரம் எனப்படும்.