14.4 வைட்டமின்கள்:#
வைட்டமின்கள் என்பவை நமது உடலால் தொகுக்க இயலாத, ஆனால் சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமான சிறிய கரிம சேர்மங்களாகும். எனவே, இவை உணவின் மூலமாக உட்கொள்ளப்பட வேண்டும். இவற்றின் தேவை மிகக் குறைவே எனினும், இவற்றின் பற்றாக்குறை அல்லது மிகுதியானது நோய்களை உண்டாக்குகின்றன. கார்போஹைதரேட்கள் மற்றும் லிப்பிடுகள் போன்று இவை ஆற்றல் மூலங்களாக செயல்படுவதில்லை. உயிர் அமைப்புகளில் ஒவ்வொரு வைட்டமினும் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்கின்றன, பெரும்பாலும் அவை துணை நொதிகளாக செயல்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் வைட்டமின்கள் என்பவை அமினோ சேர்மங்களாக கண்டறியப்பட்ட காரணத்தினால், ‘vital amines’ என்ற பொருள்படும் வகையில் ‘வைட்டமின்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. சராசரி வளர்ச்சியை அடையவும், உடல் நலத்தை பேணவும் வைட்டமின்கள் மிக இன்றியமையாதவை.
14.4.1 வைட்டமின்களின் வகைப்பாடு :#
நீர் அல்லது கொழுப்பில் கரையும் தன்மையின் அடிப்படையில் வைட்டமின்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்: இந்த வைட்டமின்கள், கொழுப்பு உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது சிறப்பாக உறிஞ்சப்பட்டு கொழுப்பு திசுக்கள் மற்றும் கல்லீரலில் பேசிக்கப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் நீரில் கரையாது, எனவே இவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகின்றன. வைட்டமின் A, D, E & K ஆகியன கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும்.
நீரில் கரையும் வைட்டமின்கள்: வைட்டமின்கள் B (B1, B2, B3, B5, B6, B7, B9 & B12) மற்றும் C ஆகியன நீரில் எளிதாக கரைகின்றன. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் போலல்லாமல் இவற்றை பேசிக்க இயலாது. அதிகப்படியாக உள்ள வைட்டமின்கள் உடலில் பேசிக்கப்படாமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. எனவே, இவ்வகை வைட்டமின்கள் தொடர்ந்து உணவின் வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும். B வைட்டமின்களில் விழுபட்ட எண்களை கொண்ட வைட்டமின்கள் ஆரம்ப காலத்தில் வைட்டமின்களாக கருதப்பட்டன, ஆனால் அவை தொடர்ந்து அவ்வாறு கருதப்படாததால் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட எண்கள் தற்போது இடைவெளிகளை உருவாக்கியுள்ளன.
அட்டவணை 14.2: வைட்டமின்களின் மூலங்கள், செயல்பாடுகள் மற்றும் அவற்றின் குறைபாடு நோய்கள்
| வைட்டமின் | மூலங்கள் | செயல்பாடுகள் | குறைபாடு நோய்கள் |
|---|---|---|---|
| வைட்டமின் A (ரெட்டினால்) | மீன் எண்ணெய், மீன், கல்லீரல், பால், கீரைகள், மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்கள் | பார்வைத்திறன் மற்றும் வளர்ச்சி | மாலைக் குருடு, கருவிழி வறட்சி, தோல் தடிமனாதல் |
| வைட்டமின் B1 (தயமின்) | தானியங்கள், பால், பச்சை காய்கறிகள், கல்லீரல், பன்றி இறைச்சி | கிளைக்கோலிக் அமிலத்தின் செயல்முறையில் தயமின் பைரோபாஸ்பேட் (TPP) துணை நொதி | பெரிபெரி (புற நரம்பு மண்டல சிதைவு) |
| வைட்டமின் B2 (ரிபோஃபிளேவின்) | சோயாபீன், பச்சை காய்கறிகள், தானியங்கள், முட்டை வெண்கரு, பால், கல்லீரல், சிறுநீரகம் | ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளில் ஃபிளேவின் மோனோ நியூக்ளியோடைடு (FMN) மற்றும் ஃபிளேவின் அடினைன் டைநியூக்ளியோடைடு (FAD) ஆகிய வடிவங்களில் துணை நொதியாக பயன்படுகிறது | கைலோசிஸ் (கடைவாய்ப்புண், உதடுகள் மற்றும் கடைவாய்ப்பாக்கில் வெடிப்புகள்) |
| வைட்டமின் B3 (நியாசின்) | தானியங்கள், பச்சை காய்கறிகள், கல்லீரல், சிறுநீரகம் | ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளில், NAD+ மற்றும் NADP+ ஆகிய வடிவங்களில் துணை நொதியாக பயன்படுகிறது | பெல்லாக்ரா, சூரிய ஒளி படும்போது டெர்மடிடிஸ் (தோல் அழற்சி) |
| வைட்டமின் B5 (பேன்டோதினிக் அமிலம்) | காளான், அவகேடோ பழம், முட்டை மஞ்சள் கரு, சூரிய காந்தி எண்ணெய் | கார்போவைதரேட்களில் துணைநொதி A வின் பகுதிப்பொருள், புரதம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் துணை நொதி A வின் ஒரு பகுதி | வளர்ச்சி குறைப்பாடு |
| வைட்டமின் B6 (பிரிடாக்சின்) | இறைச்சி, தானியங்கள், பால், முழு தானியங்கள், முட்டை | அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் துணை நொதி, ஹீமோகுளோபினில் இரும்பு உருவாக்கம் | வலிப்பு நோய் |
| வைட்டமின் B7 (பயோட்டின்) | கல்லீரல், சிறுநீரகம், பால், முட்டை மஞ்சள் கரு, காய்கறிகள், தானியங்கள் | கொழுப்பு அமில உயிர்த்தொகுப்பில் துணை நொதி | மனச்சோர்வு, முடி உதிர்தல், தசைவலி |
| வைட்டமின் B9 (ஃபோலிக் அமிலம்) | முட்டை, இறைச்சி, பீட்ரூட், காய்கறிகள், தானியங்கள், ஈஸ்ட் | நியூக்ளிக் அமில தொகுப்பு, இரத்த சிவப்பு செல்கள் முதிர்ச்சியடைதல் | முதிரா சிவப்பணுச் சோகை |
| வைட்டமின் B12 (கோபாலமின்) | முட்டை, இறைச்சி, மீன் | அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் துணை நொதி, இரத்த சிவப்பணுக்கள் முதிர்வடைதல் | ஆபத்தான இரத்த சோகை |
| வைட்டமின் C (ஆஸ்கார்பிக் அமிலம்) | சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை…), தக்காளி, நெல்லிக்காய், காய்கறிகள் | எதிர் ஆக்ஸிஜனேற்றியாக துணை நொதி, கொலாஜன் உருவாக்கம் | ஸ்கர்வி (ஈறுகளில் இரத்தக்கசிவு) |
| வைட்டமின் D (கோலேகால்சிஃபெரால் (D3), எர்கோகால்சிஃபெரால் (D2)) | மீன் கல்லீரல் எண்ணெய், பால், முட்டை மஞ்சள் கரு (சூரிய ஒளிக்கு வெளிப்படுதல்) | கால்சியம் உறிஞ்சப்படுதல் மற்றும் பராமரித்தல் | ரிக்கட்ஸ் (குழந்தைகளில்), எலும்பு வளைவு நோய் (பெரியவர்களில்) |
| வைட்டமின் E (டோகோஃபெரால்) | பருத்திக் கொட்டை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், கோதுமை முளை எண்ணெய், தாவர எண்ணெய்கள் | எதிர் ஆக்ஸிஜனேற்றி | தசைச்சிதைவு நோய் (தசை வலுவிலத்தல்) மற்றும் நரம்பியல் திரிபு |
| வைட்டமின் K (ஃபைலோகுவினோன் & மெனாகுவினோன்) | பச்சை காய்கறிகள், சோயாபீன் எண்ணெய், தக்காளி | இரத்தம் உறைதல் | இரத்தம் உறைய அதிக நேரமாதல், இரத்தக் கசிவு நோய் |