13.3 டையசோனியம் உப்புகள்#

    13.3.1 அறிமுகம்#

    அரோமேட்டிக் அமீன்களை (\( \text{NaNO}_2 + \text{HCl} \)) கலவையுடன் வினைப்படுத்தும் போது டையசோனியம் உப்புகள் உருவாகின்றன என நாம் கற்றறிந்துள்ளோம். இவைகள் குறைவான நேரத்திற்கு மட்டுமே நிலைப்புத்தன்மை உடையதாக இருக்கின்றன. எனவே தயாரித்த உடனேயே பயன்படுத்தப்படுகின்றன.

    எடுத்துக்காட்டுகள்

    13.3.2 உடனிசைவு அமைப்பு#

    அரீன் டையசோனியம் அயனியின் மீதான நேர்மின்மை பென்சீன் வளையம் முழுமைக்கும் விரவும் தன்மையை பெற்றிருப்பதால் அரீன் டையசோனியம் உப்புகள் நிலைப்புத் தன்மையைப் பெறுகின்றன.

    13.3.3 டையசோனியம் உப்புகளை தயாரிக்கும் முறைகள்#

    அனிலின் பென்சீன் டையசோனியம் குளோரைடைத் தரும் என்பதை நைட்ரஸ் அமிலத்துடன் (\( \text{NaNO}_2 + \text{HCl} \) கலவை 273Kல்) வினைபுரிந்து நாம் ஏற்கனவே கற்றறிந்துள்ளோம்.

    13.3.4 இயற்பண்புகள்#

    • பென்சீன் டையசோனியம் குளோரைடு, நிறமற்ற படிக திண்மம்

    • நீரில் நன்கு கரைகின்றன மேலும் குளிர்ந்த நீரில் நிலைப்புத்தன்மை உடையது எனினும் மித வெப்ப நீரில் வினைபுரிகிறது.

    • இவைகளின் நீர்த்த கரைசல்கள் விடமஸ் தாளுடன் நடுநிலைத் தன்மையை காட்டுகிறது. மேலும் அயனிகளாக காணப்படுவதால் மின்கடத்தும் தன்மையைப் பெற்றுள்ளது.

    • பென்சீன் டையசோனியம் டெட்ராபுளுரோ போரேடு நீரில் கரைகிறது. மேலும் அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மை உடையது.

    13.3.5 வேதி வினைகள்#

    பென்சீன் டையசோனியம் குளோரைடு இருமாதிரியான வேதி வினைகளைத் தருகிறது.

    A. நைட்ரஜனை இழந்து நடைபெறும் பதிலீட்டு வினைகள்: இவ்வினைகளில், டையசோனியம் தொகுதியானது, \( \text{X}^- , \text{CN}^- , \text{H} , \text{OH}^- \) போன்ற கருக்கவர் பொருட்களால் பதிலீடு அடைகிறது.

    B. டையசோனியம் தொகுதி நீங்காதிருக்கும் வினைகள்: எ.கா இணைப்பு வினை

    A. நைட்ரஜனை இழந்து நடைபெறும் பதிலீட்டு வினைகள்

    1. ஹைட்ரஜனால் இடப்பெயர்ச்சி

    ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் அல்லது குப்ரஸ் அயனியின் முன்னிலையில் எத்தனால் போன்ற வலிமை குறைந்த ஒடுக்கும் காரணிகளைக் கொண்டு பென்சீன் டையசோனியம் குளோரைடை

    2. குளோரின், புரோமின், சயனைடு ஆகியவற்றால் பதிலீடு

    அ) சான்ட்மெயர் வினை

    புதிதாகத் தயாரிக்கப்பட்ட பென்சீன் டையசோனியம் குளோரைடு மற்றும் குப்ரஸ் ஹாலைடு கரைசல்களை ஒன்றுடனொன்று சேர்க்கும் போது, அரைல் ஹாலைடுகள் உருவாகின்றன. இவ்வினை சான்ட்மெயர் வினை என்றழைக்கப்படுகிறது. பென்சீன் டையசோனியம் குளோரைடை குப்ரஸ் சயனைடுடன் வினைப்படுத்த, சயனோ பென்சீன் உருவாகிறது.

    ஆ) காட்டர்மான் வினை

    பென்சீன் டையசோனியம் குளோரைடை, ஹைட்ரோ குளோரிக் / ஹைட்ரோ புரோமிக் அமிலம் மற்றும் காப்பர் தூளுடன் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலமும் குளோரோ / புரோமோ அரீன்களைப் பெறலாம்.

    காட்டர்மான் வினையைக் காட்டிலும் சான்ட்மெயர் வினையில் அதிக அளவு வினைப்பொருள் உருவாகிறது.

    3. அயோடினால் பதிலீடு

    பென்சீன் டையசோனியம் குளோரைடின் நீர்க்கரைசலை KI உடன் கொதிக்க வைக்கும் போது அயோடோ பென்சீன் உருவாகிறது.

    4. புளூரினால் பதிலீடு (Baltz - schiemann reaction)

    பென்சீன் டையசோனியம் குளோரைடை புளுரோ போரிக் அமிலத்துடன் வினைப்படுத்தும் போது, பென்சீன் டையசோனியம் டெட்ரா புளுரோ போரேடு வீழ்படிவாகிறது. இதனை வெப்பப்படுத்தும் போது சிதைவடைந்து புளுரோ பென்சீனைத் தருகிறது.

    5. ஹைட்ராக்சில் தொகுதியால் பதிலீடு

    அதிக அளவு கொதிக்கும் நீரில் பென்சீன் டையசோனியம் குளோரைடு கரைசலை சேர்க்கும் போது பீனால் உருவாகிறது.

    6. நைட்ரோ தொகுதியால் பதிலீடு

    டையசோனியம் புளுரோ போரேட்டை காப்பர் முன்னிலையில் நீர்த்த சோடியம் நைட்ரைட்டு கரைசலுடன் சேர்த்து கொதிக்க வைக்கும் போது டையசோனியம் தொகுதியானது, \(-\text{NO}_2\) தொகுதியால் பதிலீடு செய்யப்படுகிறது.

    7. அரைல் தொகுதியால் பதிலீடு (காம்பெரக் வினை)

    சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில், பென்சீன் டையசோனியம் குளோரைடானது பென்சீனுடன் வினைபுரிந்து பைபீனைலைத் தருகிறது. இவ்வினை காம்பெரக் வினை எனப்படும்.

    8. கார்பாக்சிலிக் தொகுதியால் பதிலீடு

    டையசோனியம் புளுரோ போரேட்டை அசிட்டிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது பென்சாயிக் அமிலம் உருவாகிறது. அலிபாட்டிக் கார்பாக்சிலிக் அமிலங்களை அரோமேட்டிக் கார்பாக்சிலிக் அமிலங்களாக மாற்றுவதற்கு இவ்வினை பயன்படுகிறது.

    B. டையசோனியம் தொகுதி நீங்காதிருக்கும் வினைகள்

    9. \( \text{SnCl}_2 / \text{HCl} \), Zn தூள் / \( \text{CH}_3\text{COOH} \), சோடியம் ஹைட்ரோசல்பைடு, சோடியம் சல்பைடு போன்ற ஒடுக்கும் காரணிகள் பென்சீன் டையசோனியம் குளோரைடை பீனைல் ஹைட்ரசீனாக ஒடுக்கமடையச் செய்கிறது.

    10. இணைப்பு வினை

    எலக்ட்ரான் அடர்வினை அதிகமாகக் கொண்டுள்ள அனிலின், பீனால் போன்ற அரோமேட்டிக் சேர்மங்களுடன் பென்சீன் டையசோனியம் குளோரைடு வினைபுரிந்து பிரகாசமான நிறமுடைய அசோ சேர்மங்களை உருவாக்குகிறது. பொதுவாக இணைப்பானது பாரா இடத்தில் நிகழ்கிறது. பாரா இடத்தில் வேறு தொகுதி இடம் பெற்றிருப்பின் இணைப்பு ஆர்தோ இடத்தில் நிகழும். \( -\text{N}_2^+ \text{Cl}^- \) க்கு பாரா இடத்தில் எலக்ட்ரான் விருவிக்கும் இயல்புடைய ஒரு தொகுதி இடம் பெற்றிருப்பின் இணைப்பு வினைபுரியும் தன்மை அதிகரிக்கிறது. இது ஒரு எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை ஆகும்.

    நேரடி ஹாலஜனேற்றத்தின் மூலம் அரைல் புளூரைடுகள் மற்றும் அயோடைடுகளை தயாரிக்க இயலாது. மேலும் குளோரோ பென்சீனில் குளோரினுக்கு பதிலாக சயனோ தொகுதியை பதிலீடு அடையச் செய்யவும் இயலாது. அத்தகைய ஹாலோ, சயனோ, \(-\text{OH}, -\text{NO}_2\) போன்ற தொகுதிகளை உடைய சேர்மங்களை உருவாக்க பென்சீன் டையசோனியம் குளோரைடு ஒரு மிகச்சிறந்த வினை இடைநிலைப் பொருளாகும். இணைப்பு வினையின் மூலம் பெறப்படும் டையசோ சேர்மங்கள் நிறமுடையவை. மேலும் சாயங்களாகப் பயன்படுகின்றன.

    Side Content